திருநங்கையர்கள், காலகாலமாக அடைந்து வரும் வேதனையும், அனுபவித்து வரும் இன்னல்களும் சொல்லில் அடங்காத-சொன்னால் விளங்காத-சொல்லி, விளங்கிய பின்னரும், யாராலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாத துயர தொடர்கதை என்றால், அது மிகைப்படுத்தப்பட்ட ஒப்பீடு அல்ல.
இந்நிலையில், இவர்களின் இழிநிலையை மாற்றி, உயர் நிலைக்கு ஏற்றும் அரிய முயற்சியில் பிரியா பாபு என்பவர் பல ஆண்டுகளாக சேவையாற்றி வருகிறார். தந்தை பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் பல்வேறு துறைகளில் அரிய சேவையாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் ’பெரியார் விருது’ வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அவ்வகையில், இந்த (2014) ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியலில் பிரியா பாபுவும் இடம் பெற்றுள்ளார்.
திருநங்கை சமூகம் மேம்பாடு எய்த போராடியதற்காக மதிப்பிற்குரிய இவ்விருதினை பெறும் பிரியா பாபு, பாரதிதாசன் பல்கலைகழகம் வழங்கிய பெரியார் விருதினை 2012-ம் ஆண்டு பெற்றுள்ளார். சென்னை பெரியார் திடலில் வரும் 18-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறும் விழாவில் இவருக்கு ‘பெரியார் விருது’ வழங்கப்படுகிறது. திராவிடர் கழக வரலாற்றில் பெரியார் விருது பெறும் முதல் திருநங்கை பிரியாபாபு தான் என்பது குறிப்பிடத்தக்கது.