1/27/2014

| |

இந்தியாவின் 65ஆவது குடியரசு தின நிகழ்வுகள் யாழ். மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரக அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) காலை நடைபெற்ற.போது ----

DSC_0758'வட மாகாணத்தில் பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்களை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக வட பகுதிக்கான புகையிரதப் பாதைப் பணிகள், இந்திய வீட்டுத்திட்டம், வவுனியா வைத்தியசாலைப் பணிகள் என்பவற்றை குறிப்பிடலாம்' என யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகத்தின் கொன்சியூலேட் ஜெனரல்; வே.மகாலிங்கம் இன்று (26) தெரிவித்தார். 

இந்தியாவின் 65ஆவது குடியரசு தின நிகழ்வுகள் யாழ். மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரக அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) காலை நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தொடர்ந்து கருத்து தெரிவித்த வே.மகாலிங்கம், 'வட பகுதிக்கான புகையிரதப் பாதைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது பளை வரையிலான பணிகள் நிறைவடைந்துள்ளன. விரைவில் யாழ்ப்பாணம் வரை யாழ்.தேவி புகையிரத சேவை இடம்பெறவுள்ளது.

இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் 2012ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் முன்னோடி செயற்திட்டமாக ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு நிறைவடைந்துள்ளன. அதனைத் தொடர்ந்து 43 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் பணியின் கீழ் இதுவரையில் 10,250 வீட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

வெகுவிரைவில் இந்தியாவின் உதவியுடன் அச்சுவேலி கைத்தொழிற் பேட்டையில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் கைத்தொழில் முயற்சிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதேபோன்று வட கடல் வலைத் தொழிற்சாலைக்கான உதவிகள் கட்டம் கட்டமாக வழங்கப்பட்ட நிலையில் அதனுடைய உற்பத்தித்திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது' என்றார். 

'கடந்த கால யுத்தம் காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவுப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட சிறு வாணிபம் மற்றும் நடுத்தர வாணிபதாரிகள் 1320 பேருக்கு அவர்களின் தொழில் முயற்சிகளுக்காகவும் நன்கொடைகள் வழங்கப்பட்டுள்ளன.  அத்துடன், வவுனியா வைத்தியசாலையில் இருநூறு படுக்கைகளுடன் கூடிய  விடுதி, இந்தியா அரசின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இதற்கு மேலாக யாழ்ப்பாணத்தில் கலாச்சார நிலையம், மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலய திருத்தப்பணிகள், யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானம் புனரமைப்புப் பணிகள், மொழியியல் ஆய்வு கூடம், கைவேளை கிராமம் என பல அபிவிருத்தி செயற்திட்டங்களும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ளன' எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.