(மட்டு செய்தியாளர்)
வாழைச்சேனை கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தினால் (YMCA) வருடாவருடம் நடாத்தப்படும் கிறிஸ்து பிறப்பு இன்னிசை வழிபாடானது உறவின் ஒளி எனும் தலைப்பில் கிரான் கிறிஸ்தவ சேவா ஆஸ்ரமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வாழைச்சேனை கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தின் தலைவர் ஆ.அமர்தலிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு அதிதியாக இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் சிரேஷ்ட குருவானவரும், மானிட தற்சார்ப்பு ஆஸ்ரமத்தின் இயக்குனருமான அருட்திரு.பொன்.ஆனந்தராஜா மற்றும் கத்தோலிக்கத் திருச்சபை, அங்லிக்கன் திருச்சபை, மெதடிஸ்த திருச்சபை, தென்னிந்திய திருச்சபை, இரட்சண்யசேனை ஆகியவற்றின் குருவானவர்களும், சபை மக்களும், கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தின் உறுப்பினர்கள் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் சிரேஷ்ட குருவானவரும், மானிட தற்சார்ப்பு ஆஸ்ரமத்தின் இயக்குனருமான அருட்திரு.பொன்.ஆனந்தராஜா இறை செய்தியும் வழங்கினார்.
அத்தோடு இந்நிகழ்வில் கலந்து கொண்ட திருச்சபைகளின் குருவானவர்களும், சபை மக்களும் கலந்து கொண்டு அவர்களது நிகழ்ச்சிகளையும், வாழைச்சேனை கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தின் பாலர் பாடசாலை சிறார்களும் தங்களது நிகழ்ச்சிகளை வழங்கினர்.
இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை வழங்கியவர்களுக்கு கலந்து கொண்ட அதிதிகள் மற்றும் தலைவர் ஆ.அமர்தலிங்கம், செயலாளர் ஞா.விஜயதர்சன் ஆகியோர் நினைவுச் சின்னங்களையும், பரிசில்களையும் வழங்கி ஊக்கப்படுத்தினர்.
அத்துடன் வாழைச்சேனை கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தின் (YMCA) ஸ்தாபர்களில் ஒருவரான க.சிமியோன் பொருளாளர் அல்ப்பிறின் ஜேசுசகாயத்தினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.