12/06/2013

| |

பிச்சைக்காரர்களின் கால்களில் ஏற்பட்ட காயம் போன்றே த.தே.கூ.வின் அரசியல்: டிலான்

பிச்சைக்காரர்கள் தனது காலில் ஏற்பட்ட காயத்தை ஆற்றிக்கொள்ளாமல் அதனை வைத்து பிச்சையெடுப்பதை போன்றே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்காது அரசியல் பிழைப்பு நடாத்துகின்றது என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாட்டு மற்றும் நலன்புரி அமைச்சர் டிலான் பெரெரா தெரிவித்தார்.
 
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 
 
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் தொடர்பில் அன்றும் இன்றும் என்றும் ஒரே நிலைப்பாடுதான். அதில் எவ்வித மாற்றமும் இல்லை. 13 ஆவது திருத்தம் தொடர்பில் சிறந்தவொரு முடிவை எடுப்பதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழு சிறந்தவொரு இடமாகும். ஆனால்  பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கெடுத்து தேசியப் பிரச்சினைக்கு தீர்வொன்றை பெறுவதாக இல்லை. காரணம் அவ்வாறு அரசியல் தீர்வொன்றை பெற்றுவிட்டால்  தமிழ்க் தேசியக் கூட்டமைப்பினரால் அரசியல் செய்ய முடியாமல் போய்விடும். 
 
 13 பிளஸ் அல்லது மைனஸ் என எதுவாக இருந்தாலும் இது தொடர்பில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தான் பேசி தீர்க்க வேண்டும். அதனை விடுத்து வெளியிலிருந்து கொண்டு விமர்சனம் செய்யக்கூடாது. தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படுவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் விரும்புவது இல்லை. அவ்வாறு பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டால் அவர்களால் அரசியல் செய்ய முடியாமல் போய்விடும்.
 
குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தேர்தல் காலங்களில் இப்பிரச்சினைகளை வைத்தே தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வதோடு விமர்சனங்களையும் முன்வைப்பர். பின்னர் தேர்தலில் வெற்றிபெற்று ஐந்து வருடங்களுக்கு வெளிநாடுகளில் சுற்றிதிரிந்து குறைகூறி வந்து மீண்டும் தேர்தலுக்கு ஆயத்தமாவார்கள். இதுவே இவர்களுடைய அரசியல். பிரச்சினைகளை அடிப்படையாக வைத்துக்கொண்டு அரசியல் செய்வதால் தான் அவர்கள் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வருவது இல்லை என்றார்.