12/02/2013

| |

இரு பிள்ளைகளின் தந்தை உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு, கிரான் முறுத்தானை பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஒரு மாதத்தின் பின்னர் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
கோறளைப்பற்று தெற்கு - கிரான் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட முறுத்தானை கிராமசேவையாளர் பிரிவின், சிறுதேன்கல் வெட்டை பகுதியைச் சேர்ந்த கோபாலன் ரவேந்திரன் (வயது 35) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
விவசாயத்தைத் தொழிலாக கொண்ட இரு பிள்ளைகளின் தந்தையான இவர், கடந்த 30-10 -2013 அன்று வயலின் காவல் குடிசை அமைப்பதற்காக கம்பு வெட்ட சென்று வீடு திரும்பவில்லை. இவரை உறவினர்கள் பல காட்டுப் பகுதியல் தேடித்திரிந்ததன் விளைவாக கடந்த மாதம் 29ஆம் திகதி கண்டுபிடித்துள்ளனர்.
சடலம் உருக்குலைந்த நிலையில் கண்டதனையடுத்து வாழைச்சேனை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதவான் எம்.வி.எம். உசைனின் உத்தரவின் பேரில் திடீர் மரண விசாரணை அதிகாரி வ.றமேஸ் ஆனந்தன் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்திற்கு சனிக்கிழமை மாலை சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
திடீர் மரண விசாரணை அதிகாரி, உறவினரிடம் வாக்கு மூலத்தினை பெற்றுக் கொண்டு சடலத்தினை மட்டக்களப்பு சட்ட வைத்திய அதிகாரிக்கு இரசாயன பகுப்பாய்வுக்காக அனுப்புவதற்கு உத்தரவு இட்டார்.
அதே நேரம், சடலத்தினை இரசாயண பகுப்பாய்வுக்காக மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக உதவி பொலிஸ் அத்தியச்சகர் எஸ். சமந்த தலைலமயிலான குழுவினர் வருகை தந்து தடயங்களை மீட்டுள்ளனர். இதனை மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு இரசாயன பகுப்பாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த மரணம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.