(மட்டு செய்தியாளர்)
கண்டி திருத்துவக் கல்லூரியின் சாரணிய இயக்கத்தின் நூறாவது ஆண்டினை கொண்டாடும் முகமாக இலங்கையில் உள்ள சாரணிய இயக்கங்களின் ஒத்துழைப்புடன் கண்டி புற்றுநோய் வைத்தியசாலையை கட்டியெழுப்புவதற்காக நன்கொடை சேகரிக்கும் முகமாக கண்டி திருத்துவ கல்லூரி சாரணிய மாணவர்களால் நாடுபூராகவும் பன்னிரெண்டு நாட்கள் துவிச்சக்கரவண்டி பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில் நேற்று வெள்ளிக்கிழமை கல்குடா வலய துவிச்சக்கரவண்டி பயணத்தின் போது வாழைச்சேனையை வந்தடைந்தது.
இவர்களை மாவட்ட உதவி சாரணி ஆணையாளர் அ.ஜெயஜீவன் ஆசிரியர் தலைமையிலும், வழிகாட்டலிலும் வாழைச்சேனை கோறளைப்பற்று தமிழ் வர்த்தக சங்கத்தின் அனுசரணையுடன் வாழைச்சேனை பிரதேசத்தில் நன்கொடையை பெற்றுக் கொண்டார்கள்.
மேலும் வாழைச்சேனை கோறளைப்பற்று தமிழ் வர்த்தக சங்க அலுவலகத்திற்கு முன்பாக நடைபெற்ற நிகழ்வில் கண்டி புற்றுநோய் வைத்திய சாலையை கட்டியெழுப்புவதற்கான தகவல் அடங்கிய படிவத்தை மாவட்ட உதவி சாரணிய ஆணையாளரும், வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் உபஅதிபருமாகிய அ.ஜெயஜீவன் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் வாழைச்சேனை கோறளைப்பற்று தமிழ் வர்த்தக சங்கத்தினர், தமிழ் வர்த்தகர்கள் மற்றும் முச்சக்கரவண்டி உரிமையாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் கண்டி புற்றுநோய் சிகிச்சை நிலையத்தை கட்டியெழுப்புவதற்காக நன்கொடைகளை உங்கள் கையடக்கத் தொலைபேசியில் பத்து ரூபாய் பணத்தை (10/-) வழங்குவதற்கு HELP என டைப்செய்து 4357 என்ற இலக்கத்திற்கு SMS செய்யலாம்.