12/10/2013

| |

நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை இன்றைய அரசியல் தலைவர்களுக்கு நல்லதொரு உதாரணம்.













              தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி


தென்னப்பிரிக்கா மட்டுமல்லாது உலக அளவில் அனைத்து மக்களாலும் விரும்பப்பட்ட ஒரு நல்ல தலைவர். நெல்சன் மண்டேலாவின் மறைவுக்கு எமது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவத்துக்கொள்கின்றது.
தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபராக பொறுப்பேற்று நிற வெறி ஆட்சியை ஒழிக்க பாடுபட்ட செயல் வீரனாக திகழ்ந்தவர் நெல்சன் மண்டேலா .
1918ம் ஆண்டு ஜீலை மாதம் 18ம் திகதி பிறந்த இவர் தனது 21வது வயதில் இளைஞர்களை ஒன்றினைத்து இன வெறியர்களுக்கு எதிராகப் போராட ஆரம்பித்தார். ஒடுக்கப்பட்ட இனத்திற்கு எதிராக அகிம்சை, ஆயுதம் என்ற இரு வழிகளிலும் போராடி தான் சார்ந்த சமுகத்தின் விடுதலைக்கு வித்திட்ட நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை இன்றைய சமுக அரசியல் தலைவர்களுக்கும், இளைஞர் சமுகத்திற்கும் நல்லதொரு உதாரணமாகும்.
ஒரு சமுகத்தின் விடுதலை என்பது அச்சமுகத்தினை தலைமை தாங்கி நடத்தும் தலைவர்களின்; வழி நடத்தலிலேயே தங்கியுள்ளது. அத்தோடு அத்தலைவர் தனது இலக்கினை அடைவதற்காக தம்மை தியாகம் செய்யவும்; தயாராக இருக்க வேண்டும். அந்த வழியில் தனது 27 வருடங்களை சிறையில் கழித்து நெல்சன் மண்டேலா 1994 மே மாதம் 10ம் திகதி தென்னாப்பிரிக்காவின் அதிபர் ஆனார். 1998ம் வருட காலப்பகுதியில் தென்னப்பிரிக்கா பாடசாலைகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, குஜராத்தி, உருது மொழிகளிலும் கற்பிக்க வேண்டும் என ஏற்பாடு செய்த முன்னோடி நெல்சன் மண்டேலா தான் விரும்பி இருந்தால் தொடர்ந்தும் அதிபர் பதவிக்கும் சூழல் காணப்பட்ட போதும் அடுத்த தலைமுறைக்கு தலைமைத்துவத்தினைக் கொடுத்த நல்லதொரு வழி காட்டியாகவும் திகழ்ந்த இவர் சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்றதுடன் சிறையில் இருக்கும் போதே உலக சமாதானத்திற்கான “நேரு விருது” பெற்றுக் கொண்டவர் என்பதுவே இருந்தே அவரின் அளப்பெரிய சேவைக்கு சான்று பகிர்கின்றது. தமக்கெதிராக இனவெறி ஒடுக்கு முறைபுரிந்த வெள்ளையர்களையும் தம்மகத்தே அன்பால் அரவணைத்து ஆட்சி புரிந்தது இவ்வுலகிற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாகவும் விளங்கினார்.
தென்னாப்பிரிக்காவின் ஒடுக்கப்பட்ட இன வெறிக்கெதிராக கிளர்ந்தெழுந்து கறுப்பின சமுகத்திற்கு விடுதலையினைத் தேடித்தந்த நெல்சன் மண்டேலாவின் பிரிவு சமுகத்தின் விடியலுக்கு உழைக்கும் உண்மைத் தலைவர்கள் அனைவருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு என்பதனை சுட்டிக்காட்டுவதுடன், 95வருடம் இவ்வுலகில் வாழ்ந்து மறைந்த விடுதலை வீரனின் ஆத்ம சாந்திக்காகவும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி பிராத்திக்கின்றது.
பூ.பிரசாந்தன்
பொதுச் செயலாளர்
தமிழ் மக்கள் விடுதலை புலிகள்