12/30/2013

| |

தமிழில் தேசிய கீதத்தை பாடுவதில் என்ன தவறு: அமைச்சர் வாசுதேவ கேள்வி



நான்கு மொழிகளை கொண்டுள்ள தென் ஆபிரிக்காவின் தேசிய கீதம் அந்த நான்கு மொழிகளில் பாடப்படுவதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
மகரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் நடைபெற்ற இளைஞர் நாடாளுமன்றத்தில் சிறப்புரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தென் ஆபிரிக்காவின் நான்கு மொழிகளில் தேசிய கீதத்தை பாடி அந்நாட்டின் சமாதானம் ஏற்பட்டது என்றால் இரண்டு மொழிகளை மட்டும் கொண்டுள்ள இலங்கையில் தமிழில் தேசிய கீதத்தை பாடினால் எந்த தவறு?
சகல பிரஜைகளும் மனதிற்கு இசைவாக தமது மொழியில் தேசிய கீதத்தை பாடுவதற்கு இருக்கும் விருப்பத்திற்கு இடமளிக்க வேண்டும்.
இலங்கையின் சுதந்திர விடுதலைப் போராட்டம் தேசிய தோற்றத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை.
தேசிய சங்கம் ஆங்கிலேயருடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் கொள்கையிலும் தர்மபால போராட்டம் சமயத்தின் அடிப்படையிலும் வடக்கில் இந்துக்கள் தமிழ் நாடு என்ற தோற்றப்பாட்டிலும் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
லங்கா சமசமாஜ கட்சி மட்டுமே சுதந்திரப் போராட்டத்தை தேசிய கொள்கையின் அடிப்படையில் முன்னெடுத்தது. அந்த கட்சி இந்திய சுதந்திரப் போராட்டத்துடன் இணைந்து செயற்பட்டது.
எனினும் தென் ஆபிரிக்க சுதந்திரப் போராட்டம் முழுமையான தேசிய ஜனநாயக ரீதியில் முன்னெடுக்கப்பட்டது. இதனால் சுதந்திரம் அடைந்த தென் ஆபிரிக்காவில் பல இனங்கள் வாழ்ந்த போதும் அங்கும் இனவாதம் தலைத்தூக்கவில்லை.
நெல்சன் மண்டேலா தன்னை தென் ஆபிரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதி என்று அடையாளப்படுத்தி கொள்ளவில்லை. ஜனநாயக தென் ஆபிரிக்காவின் முதலாவது ஜனாதிபதி தான் என்றே அவர் தன்னை கூறிக்கொண்டார்.
அத்துடன் அவர் தன்னை சிறையில் அடைத்த வெள்ளையர்கள் மன நோகும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு கறுப்பினத்தவர்களை தூண்டவில்லை.
கறுப்பு, வெள்ளை என சகல இனத்தவரும் தென் ஆபிரிக்கர்கள் என அவர் கருதி செயற்பட்டதால் அந்நாட்டில் மீண்டும் இனவாதம் தலைத்தூக்கவில்லை என்றார்.