இலங்கையின் விசா விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கும் தமிழ்நாட்டு ஊடகவியலாளர் தமிழ் பிரபாகரனை புலனாய்வுப்பிரிவினர் விசாரித்து வருவதாக கூறுகிறார் இலங்கை காவல்துறையின் சார்பில் பேசவல்ல அதிகாரியான அஜித் ரோஹன.
இந்த விசாரணைகள் முடிந்ததும் அவர் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படுவார் என்றும் இது நடந்து முடிய இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் பிடிக்கும் என்றும் கூறினார் அஜித் ரோஹன இவரை கைது செய்தபோது அவருடன் இருந்த தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், அவர் சுற்றுலாப்பயணியாக மட்டுமே வந்தார், சுற்றுலாப்பயணியாக மட்டுமே நடந்துகொண்டார் என்று பிபிசி தமிழோசையிடம் தெரிவித்திருக்கிறாரே என்று கேட்டபோது, அவர் அதை மறுத்தார்.
தமிழ் பிரபாகரன் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்திருந்தாலும், தமிழ் பிரபாகரனிடம் தாங்கள் கைப்பற்றிய கேமராவை ஆராய்ந்தபோது, அதில் அவர் ராணுவ நிலைகளை மட்டும் தேர்ந்தெடுத்து படம் பிடித்திருந்ததை தாங்கள் கண்ட்தாகவும், குறிப்பாக நாவற்குடா பகுதியில் இருக்கும் இராணுவ முகாம், அந்த பகுதியின் இராணுவ நடமாட்டங்கள், இராணுவ வாகனங்களின் நடமாட்டங்களையெல்லாம் அவர் படம் பிடித்திருந்தார் என்றும் கூறிய அஜித் ரோஹன, ஒரு சுற்றுலா பயணியான அவர் எதற்காக இராணு இலக்குகள், இராணுவத்தினரை மட்டும் குறிவைத்து படம் பிடிக்கவேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.
அவரது கேமராவில் வேறு எந்த படங்களும் எடுக்கப்படவில்லை என்று கூறிய அவர், பாதுகாப்பு விவகாரங்களை மட்டும் அவர் குறிப்பாக படம் பிடித்தது ஏன் என்பதுதான் தங்களின் சந்தேகத்தை அதிகரிப்பதாக கூறுகிறார். இவரது கைது குறித்தும், இலங்கையில் இவரது நடத்தை குறித்தும் இந்திய தூதரகத்திற்கு உரிய முறையில் தாங்கள் தெரிவித்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
அடுத்து என்ன?.தமிழ் பிரபாகரன் விஷயத்தில் இரண்டு வழிகள் இருப்பதாக தெரிவித்த அஜித் ரோஹன, தாங்கள் அவரிடம் தற்போது விசாரித்துக் கொண்டிருப்பதாகவும், அவர் இலங்கைக்குள் வந்து சட்டவிரோத செயல்களை செய்திருந்தாலோ, அல்லது அவரது குற்றச்செயல்கள் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாக இருந்தாலோ, அதற்கான இலங்கை சட்டங்களின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். அப்படியில்லாத பட்சத்தில் அவர் குடிவரவு குடியகல்வு விதிகளை மீறியிருப்பதாக தெரிந்தால் அவரை அந்த துறையிடம் கையளிப்போம் என்றும், குடிவரவு குடியகல்வுத்துறை ஆணையர் தமிழ் பிரபாகரன் மீது உரிய நடவடிக்கையை எடுப்பார் என்றும், பெரும்பாலும் அவர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார் என்றும் கூறினார் இலங்கை காவல்துறையின் சார்பில் பேசவல்ல அதிகாரியான அஜித் ரோஹன.
மறைப்பதற்கு ஒன்றுமில்லையென்றால் இந்த கைது ஏன்?
ஒருபக்கம் இலங்கையில் நிலைமைகள் முன்னேறிவிட்டது, யார் வேண்டுமானாலும் வந்து நேரில் பார்க்கலாம் என்கிறீர்கள், ஆனால் அப்படி வந்த இவரை கைது செய்திருக்கிறீர்களே, இது இலங்கை அரசு முன்னுக்குப்பின் முரணாக செயற்படுவதாக இல்லையா என்று அவரிடம் பிபிசி தமிழோசை கேட்டதற்கு பதிலளித்த அஜித் ரோஹன, இந்த ஆண்டில் மட்டும் 12 லட்சம் சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வந்து சென்றிருப்பதாகவும் அதில் ஆறு பேர் மட்டுமே தாங்கள் கைது செய்திருப்பதாகவும் கூறினார் அவர்.
“12 லட்சம் பேரில் வெறும் ஆறுபேரை மட்டுமே நாங்கள் கைது செய்திருக்கிறோம். அந்த ஆறுபேரைக்கூட குறிப்பிட்ட இலங்கை சட்டங்களை மீறி செயற்பட்டதற்காக மட்டுமே கைது செய்திருக்கிறோம். இதை நாங்கள் மட்டும் செய்யவில்லை. எல்லா நாடுகளும் செய்யும் நடைமுறை தான் இது”, என்றார் அஜித் ரோஹன.
உதாரணமாக இங்கிலாந்திலோ, அமெரிக்காவிலோ இருக்கும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் நின்று சுற்றுலாப்பயணிகள் யாரும் படம் எடுக்க முடியாது என்று கூறிய அவர், அந்த மாதிரியான விதிகள், கட்டுப்பாடுகள் இலங்கையிலும் இருக்கிறது என்றும் எனவே இலங்கை விதிகளை மதித்து நடக்கும் சுற்றுலாப்பயணிகள் யாரையும் தாம் கைது செய்வதில்லை என்றும் கூறினார் இலங்கை காவல்துறையின் சார்பில் பேசவல்ல அதிகாரியான அஜித் ரோஹன.
அதேசமயம் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் பிரபாகரன் தம்முடன் தங்கியிருந்த தமது நண்பர்தான் என்றாலும், அவர் ஊடகவியலாளர் என்பது தனக்குத் தெரியாது என்கிறார் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்.