முன்னொரு காலத்தில் வடக்கில் தலைவிரித்தாடிய சாதி வெறிக் கொள்கை பிரபாகரன் காலத்தில் ஆயுதத்திற்குப் பயந்து அறவே இல்லாமல் போயிருந்தது உண்மையே. இன்று அது மீண்டும் தலைவிரித்தாடுவதைக் காண முடிகிறது. குறிப்பாக தமிழரசுக் கட்சியிலிருக்கும் தலைவர்கள் இந்தப் பாகுபாட்டை வெளிப்படையாகவே காட்டி வருகின்றனர். எனக்கும் அந்தக் கொடுமை நடந்தது என்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சியிலுள்ள பருத்தித்துறைப் பிரதேச சபையின் உப தலைவர் மாணிக்கம் லோகசிங்கம் அவர்கள்.
பொருளாதாரத்துறையில் பட்டம் பெற்ற பிரபல ஆசிரியரான திரு. லோகசிங்கம் தனது மனக்குமுறலை கொட்டித் தீர்த்தபோது பெற்றுக் கொண்ட விடயங்களை இங்கே தருகின்றோம்.
எதனை வைத்து இந்தச் சாதிப் பிரச்சினையை சந்திக்கு இழுக்கிaர்கள்?
நான் இழுக்கவில்லை. தமிழரசுக் கட்சியினர்தான் என்னை பிரச்சினைக்கு இழுத்துள்ளார்கள். நான் நேரடியாகப் பாதிக்கப்பட்டவன். மனம் வெதும்பி இருக்கிறேன். அடிபட்ட வனுக்குத்தான் அதன் வலி தெரியும். எனது ஆதங்கத்தை வெளிப்படுத்துவது தவறா?
தவறில்லை, ஆனால் இந்தக் காலத்தில் சாதிப் பாகுபாடு, சாதி பார்த்தல் என்பதை நம்ப முடியாமலுள்ளது?
நான் சொன்னால் எவருமே நம்பமாட்டார்கள். ஆனால் என்னிடம் ஆதாரங்கள் பல உள்ளது. அத்துடன் என்னைப் போன்று பாதிக்கப்பட்டவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் தமிழரசுக் கட்சியிலுள்ள பல மேட்டுக் குடியினர் தெரிவிப்பது போன்று தம்மை தீண்டத்தகாதவர்கள் என வெளியே சொல்ல விரும்புவதில்லை. அதனால்தான் பல விடயங்கள் கிடப்பிலேயே உள்ளன.
எதனை வைத்து நீங்கள் தீண்டத்தகாதவர் என்பதால் பழிவாங்கப்பட்டதாகக் கூறுகிaர்கள்?
எனக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடச் சந் தர்ப்பம் வழங்கப்ப டவில்லை. காரணம் கேட்டபோது எனக்கு மறைமுகமாக சாதிக்கதை கூறப்பட்டது. அதனை விளங்கிக் கொள்ளாத அளவிற்கு நான் ஒன்றும் படிப்பறிவில்லாதவன் அல்ல. நான் ஒரு பொருளாதாரப் பட்டதாரி. வடக்கின் பொருளாதாரத்தை கைவிரல் நுனியில் வைத்துள்ளேன்.
தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காததுதான் உங்களது இப்பிரச்சினைக்குக் காரணமா?
இல்லை. அண்மைக்காலமாக வடக்கில் தமிழரசுக் கட்சியினர் தமது மேட்டுக்குடித்தனத்தைக் காட்டி வருகின்றனர். அவர்கள் எம்மைப் போன்றவர்களைப் புறந்தள்ளி தமது செயற்பா டுகளை மேற்கொள்கின்றனர். இது தவறு என்பதை உணர வைப்பதே எனது நோக்கம்.
இந்நிலை எப்போதிருந்து ஆரம்பித்தது?
புலிகளின் மறைவிற்குப் பின்னர்தான் இது வெளித்தோன்ற ஆரம்பித்தது. அதுவரை இவர்கள் புலிகளுக்குப் பயந்து அடக்கி வைத்திருந்தார்கள், அடங்கியும் இருந்தார்கள்.
பிரபாகரனும் நீங்கள் கூறும் தீண்டப்படாத சமூகத்திலிருந்து வந்தவர் என்றே பலராலும் கூறப்படுகிறது. ஆனால் அப்பிரபாகரன் கூறியவற்றை இத்தமிழரசுக் கட்சியின் மேட்டுக் குடியினர் கை கட்டி, வாய்மூடி நின்று கேட்டுத்தானே வந்துள்ளனர்?
அது பிரபாகரனின் துப்பாக்கிக்குப் பயந்து கேட்டது. இப்போதுதான் பிரபாகரன் இல்லையே. அதனால் இவர்கள் பழைய குருடி கதவைத் திறவடி என்பதாக நடந்து கொள்கிறார்கள். முன்னொரு காலத்தில் சில தீண்டத்தகாதவர்களை கோவில்களுக்குள் செல்லக் கூட இவர்களைப் போன்றவர்கள் அனுமதிப்பதில்லை. ஆனால் இப்போது எமது அதே ஆட்கள்தான் சுவாமியைக்கூடக் காவுகிறார்கள். இதனை மாற்றி பழைய நிலைக்குச் செல்ல சிலர் முயற்சிக்கிறார்கள். அதனையே தமிழரசுக் கட்சியும் செய்ய முனைகிறது.
மாகாண சபையில் போட்டியிட வாய்ப்புத் தரப்படவில்லையே தவிர நீங்கள் அதே தமிழரசுக் கட்சியில் பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்டு இப்போது ஒரு பிரதேச சபையின் உப தலைவராக இருக்கிaர்களே? அன்று வாய்ப்புத் தந்தபோது தமிழரசுக் கட்சி சாதி பார்க்கவில்லையே?
ஐயோ, அது ஒரு பெரிய கதை. நான் தமிழரசுக் கட்சி சார்பாக பிரதேச சபைத் தேர்தலில் நிறுத்தப்பட வேண்டிய முக்கியமான ஒருவராக இருந்தேன். ஆனால் அவர்கள் என்னை வழமைபோல் புறந்தள்ளிவிட்டார்கள். அதன் பின்னர் தம்பி சுரேஸ் பிரேமச்சந்திரன்தான் எனது ஊரில் எனக்கிருந்த செல்வாக்கை அறிந்து தமிழ்க் கூட்டமைப்பில் தனது கட்சி சார்பாக நிறுத்தினார், நான் வெற்றியும் பெற்றேன்.
இம்முறையும் மாகாண சபைத் தேர்தலில் அவ்வழியையே நாடியிருக்கலாமே?
நாடினோம், நானும் சுரேஸ் எம்.பியும் ஒற்றைக் காலில் நின்றோம். ஆனால் கடந்த முறைக்குப் பழி வாங்கவும், எங்கே தீண்டத்தகாத நான் வெற்றிபெற்று சரிக்குச் சமனாக வந்துவிடுவேனோ என்ற பயத்திலும் என்னைக் கழற்றி விட்டுவிட்டார்கள். நான் மட்டும் இத்தேர்தலில் போட்டியிட்டிருந்தால் இன்று நான்தான் வடக்கின் விவசாய, பொருளாதாரத்துறை அமைச்சராக இருந்திருப்பேன். பெருமைக்காகக் கூறவில்லை. உண்மை இது. மக்களுக்கு இது நன்கு தெரியும்.
ஆரம்பத்திலேயே இவ்விடயம் தொடர்பாக சம்பந்தப் பட்டவர்களுடன் கலந்து பேசியிருக்கலாமே?
யாருடன் பேசச் சொல்லுகிaர்கள்? அப்படியிருந்தும் பேசினேன். அவமானம்தான் பதிலாகக் கிடைத்தது. அவர்கள் திட்டமிட்டுச் செய்தார்கள். எனக்காகப் பேசச் சென்ற சுரேஸ் எம்.பியையே உதாசீனம் செய்துள்ளார்கள். இதனை விடவும் அவர்களது கால்களில் என்னை விழச் சொல்கிaர்களா? அது எனக்குத் தேவையில்லை, ஒருபோதும் செய்யவும் மாட்டேன்.
முதலமைச்சர் வேட்பாளராக இருந்த விக்னேஸ்வரன் அவர்களிடம் முறையிட்டி ருக்கலாமே?
அவர் பாவம். அவருக்கு எதுவுமே தெரியாது. நல்லவர், படித்தவர், பண்பானவர். தெரியாமல் தமிழரசுக் கட்சியின் அரசியல் சாக்கடைக்குள் விழுந்துவிட்டார். அவருக்கு இந்தச் சாதிக் கதைகள் புரிய நியாயமில்லை. அவர் கொழும்பில் வாழ்பவர் அவரது சம்பந்திமார் கெளரவமான பெரும்பான்மையின சமூகத்தினர். அவரிடம் போய் சாதி பற்றி எப்படிக் கதைப்பது. அவருக்குத் தெரிந்தது ஆண் சாதி, பெண் சாதியாகத்தான் இருக்கும்.
சாதிக்கு மதிப்பளிக்காவிடினும் உங்களது படிப்பிற்காக எனினும் தமிழரசுக் கட்சியினர் மதிப்பளித்திருக்கலாம் அல்லவா?
நிச்சயமாக. நான் ஒரு பட்டதாரி. பொருளாதாரத் துறையில் பல ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறேன். என்னிடம் கல்வி கற்ற பல மாணவர்கள் இன்று புகழ்பெற்ற கணக்காளர்களாகவும், பொருளாதார நிபுணர்களாகவும் விளங்குகின்றனர். வடக்கின் பொருளாதாரம் எப்படி அமைய வேண்டும் என்பதை என்னை விடவும் அறிந்தவர்கள் வடக்கில் இருக்க முடியாது. ஆனால் தமிழரசுக் கட்சித் தலைவர்கள் இவற்றைப் பார்க்கவில்லை. அவர்கள் சாதியை மட்டுமே பார்த்தார்கள்.
நீங்கள் பருத்தித்துறை பிரதேச சபையின் உப தலைவர். சபையில் உங்களது செயற்பாடுகள் எப்படி உள்ளது? உங்களது கட்சியைச் சேர்ந்த சக உறுப்பினர்களது ஆதரவு எப்படி?
ஐயோ, அதை ஏன் கேட்பான். அங் குள்ள மேட்டுக் குடியினர் என்னைப் படாத பாடு படுத்தி வருகின்றனர். தலைவர் இல்லாத தருணத்தில் நான் தலைமை வகிக்க நேரிட்டால் தலைமை தாங்கும் கதிரையை தூக்கிச் சென்று சபைக்கு வெளியே வைத்துவிட்டு வருவார்கள். கூச்சல் குழப்பம் விளை விப்பார்கள். எனக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி உறுப்பினர்களே ஆதரவு வழங்குவதுண்டு.
கதிரையை கொண்டு சென்று வெளியே வைத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அமைதியாகச் சென்று விடுவீர்களா?
இல்லை, நான் விட மாட்டேன், நானே சென்று அதனைத் தூக்கி வந்து சபையை நடத்துவேன். என்னை எவரும் நேரடி யாக எதுவுமே செய்துவிட முடியாது. எனக்கு மக்கள் பலம் உள்ளது. அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் சுயேட்சையாக நின்றாலும் இலகுவாக வெற்றி பெறும் அளவிற்கு எனக்கு செல்வாக்கு உள்ளது. அதுதான் தமிழரசுக் கட்சியினரின் பயம்.
இப்போது தங்கள் மீது கட்சி ஒழுக்காற்று விசாரணை நடத்தவுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளாரே. இதற்கு முகங்கொடுக்க நீங்கள் தயாரா?
என்மீது ஒழுக்காற்று விசாரணையா? எதற்கு? தமிழரசுக் கட்சியினர் எனக்குச் செய்த துரோகத்திற்கு அவர்கள் தமக்குத் தாமே விசாரணை நடத்த வேண்டும். எனினும் எனது நிலைப்பாட்டைத் தெளிவாக விளக்கி திரு. மாவை சேனாதிரா ஜாவிற்கு நான் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளேன். அக்கடிதத்தை அவர்கள் முழுமையாக வாசித்தால் என்மீது தவறில்லை என்பதைப் புரிந்து கொள்வார்கள்.
வடக்கில் மாகாண ஆட்சியைக் கைப்பற்றியதன் பின்னர் தமிழ்க் கூட்டமைப்பின் செயற்பாடு எப்படி உள்ளது?
மிகவும் சிரமமாக உள்ளது. கட்சிக்குள் உட்கட்சிப் பூசல்கள் உச்சக்கட்டத்தில் உள்ளது. பதவிப் போட்டி தலை விரித்தாடுகிறது. அவர்கள் எவரிடமும் நிர்வாகத் திறன் துளியளவும் இல்லை. தெரிந்தவர்களிடம் கேட்டு நடக்கவும் அவர்களது வரட்டுக் கெளரவம் விடுவதாக இல்லை. போகிற போக்கில் தம்மால் முடியாது எனக் கூறி மீண்டும் அரசாங்கத்திடம் மாகாண சபையை அவர்கள் கையளிப்பர். இது விரைவில் நடக்கும்.
நீங்கள் தெரிவிக்கும் இந்த விடயங்கள் எதுவுமே வெளியே மக்களுக்குத் தெரிவதில்லை. குறிப்பாக ஊடகங்கள் எதிலுமே இவை வெளிவருவதில்லை. காரணம் என்ன?
உள்ளூர் ஊடகங்கள் பலவும் அவர்களது கட்டுப்பாட்டிலேயே உள்ளன. உண்மை தெரிந்திருந்தாலும் உரைப்பதற்கு இடமில்லை. அதனால் இவர்கள் பாடு கொண்டாட்டமாக உள்ளது. இது நீண்ட காலத்திற்கு நிலைக்காது.
இறுதியாக நீங்கள் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வாக கூற முனைவது என்ன?
தமிழரசுக் கட்சி சாதி பார்ப்பதை நிறுத்த வேண்டும். தமிழரில் சிறுபான்மைத் தமிழன், தீண்டத்தகாத தமிழன், ஆலயத்திற்குள் செல்ல தடை விதிக்கப்பட்ட தமிழன் என்ற பேதம் இருக்கக் கூடாது. என்னைப் போன்று சாதியின் பெயரால் பாதிக்கப்பட்டவர்களை இனம் கண்டு உரிய கெளரவமளிக்க வேண்டும். இனப்பிரச்சினையை இனியும் இழுத்தடிக்காது அரசாங்கத்துடன் பேசி ஒரு நல்ல தீர்வினைக் காண வேண்டும்.