மக்கள் புரட்சிக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் அழைப்பு
தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் கூடியிருக்கும் சுமார் 30,000 அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த கலகம் அடக்கும் பொலிஸாருக்கு உதவியாக இராணுவ துருப்புகள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. அரச கட்டிடத்திற்குள் ஊடுருவ முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைப் பிரயோகம் மற்றும் நீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. பிரதமர் இங்லுக் ஷினவாத்திரவின் அலுவலகம், பொலிஸ் தலைமையகம் உட்பட அரச கட்டிடங்களை ஆக்கிரமிக்கப் போவதாக எதிர்ப்பாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.
அரச எதிர்ப்பு ஜனநாயகத்திற்கான மக்கள் முன்னணி அரசின் மைய அமைப்புகளை ஆக்கிரமிக்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அழைப்பு விடுத்திருப்பதோடு அதற்கு பதில் மக்களின் கெளன்சில் நிறுவப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.
இராணுவ சதிப் புரட்சி மூலம் பதவி கவிழ்க்கப்பட்டு தற்போது நாட்டுக்கு வெளியில் இருக்கும் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாத்ராவே தற்போதைய இங்லுக்கின் அரசை கட்டுப்படுத்தி வருவதாக எதிர்ப்பாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். தக்சின் தற்போ தைய பிரதமர் இங்லுக்கின் சகோதரர் என்பது குறிப் பிடத்தக்கது. தாய்லாந்து தலைநகரில் சுமார் எட்டு இடங்களில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் 30,000 பேரளவில் இருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அதேபோன்று அரச எதிர்ப்பாளர்கள் பல தொலைக்காட்சி நிலையங்களுக்குள் நுழைந்து நிகழ்ச்சிகளை கட்டுப்படுத்த முயற்சிப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடு கின்றன. தற்போதைய சூழல் ஒரு சதிப்புரட்சிக்கான முயற்சிபோல் இருப்பதாக பாங்கொக்கில் இருக்கும் பி. பி. சி. செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தாய்லாந்தின் பீ. பி. எஸ். தொலைக்காட்சி நிலையத்தை அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாக பாங்கொக் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பீ. பி எஸ். தொலைக்காட்சி ஆர்ப்பாட்டக்காரர்களின் தலைவர்களின் உரையை ஒளிபரப்பி வருவதாகக் கூறப்படுகிறது. மறுபுறத்தில் பொலிஸ் தலைமையகத்தை சுற்றிவளைத்திருக்கும் மற்றொரு ஆர்ப்பாட்ட குழுவை பொலிஸார் கட்டுப்படுத்தி வருகின்றனர். எனினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தலைமையகம் அல்லது அரச கட்டிடத்தை ஆக்கிரமிக்க சிறு வாய்ப்பே இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களைத் தடுத்து நிறுத்த அரசு குறைவான படைப்பலத்தையே பயன்படுத்தும் என பிரதமர் இங்லுக் குறிப்பிட்டுள்ளார். எனினும் அரச ஆதரவு மற்றும் எதிர்ப்பு குழுக்களுக்கு இடையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை ஏற்பட்ட மோதலில் இருவர் கொல்லப்பட்டதோடு பலரும் காயம் அடைந்தனர். ஆர்ப்பாட்டம் அமைதியாக தொடர்ந்த போது நேற்று முன்தினம் பாங்கொக் அரங்கிற்கு அரச ஆதரவாளர்களை அழைத்துச் சென்ற வாகனங்கள் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்தே மோதல் வெடித்தது. இதன்போது துப்பாக்கிச் சண்டையும் ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த மோதலில் மூக்கை நுழைக்க தயக்கம் காட்டி வரும் இராணுவ தளபதிகள் கலகம் அடக்கும் பொலிஸாருக்கு உதவியாக படைகளை அனுப்ப இணங்கியுள்ளனர். ஆனால் படையினர் ஆயுதங்களை ஏந்தாமல் இருக்க தளபதிகள் நிபந்தனை விதித்துள்ளனர்.
இந்நிலையில் பிரதமருக்கு ஆதரவானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் மோசமான வன்முறைகள் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பிரதமரின் கட்சி ஆதரவாளர்கள் பாங்கொக்குக்கு வெளியில் ஒன்று திரண்டிருப்பதோடு தலைநகருக்குள் வர முயற்சித்து வருவதாக செய்திகள் கூறுகின்றன. முன்னதாக பிரதமர் இங்லுக் முன்கூட்டிய தேர்தல் நடத்தும் திட்டம் இல்லை என அறிவித்திருந்தார்.
கடந்த ஒரு வாரத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அரச அலுவலகங்களை சுற்றிவளைத்ததோடு இராணுவத் தலைமையகத்தை நோக்கியும் பேரணி நடத்தினர். இதன் போது பொலிஸ் தலைமையகத்திற்கான மின் விநியோகத்தை துண்டித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் நாட்டின் பிரதான குற்றச்செயல் தடுப்பு நிறுவனத்தின் செயற்பாடுகளை முடக்கினர். நாட்டில் ஊரடங்குச்சட்டத்தை அமுல்படுத்தவும் வீதிகளை மூடவும் பிரதமர் உத்தரவிட்ட போதும் அது செயற்படுத்தப்படவில்லை. அதேபோன்று ஆர்ப்பாட்டத் தலைவர் சுதெப் தங்க்சுவாலை கைது செய்ய பொலிஸாருக்கு உத்தரவிட்ட போதும் இதுவரை அவர் கைதாகவில்லை.