12/20/2013

| |

கடற்கரை சமூகங்களுக்கு கிடைத்த முதல் அங்கீகாரம் - சாகித்ய அகாடமி விருது பெற்ற ஜோ டி குருஸ் பேட்டி

கவுரவமிக்க சாகித்ய அகாடமி விருதை கொற்கை நாவல் வென்றுள்ள சூழலில் தி இந்து நாளேட்டுக்காக ஜோ டி குருஸ் அளித்த பிரத்தியேகப் பேட்டி:
  • இந்த நாவலை எழுத 5 ஆண்டு காலத்தை செலவிட்டுள்ளீர்கள். இந்த பெரும் Jody groosஉழைப்புக்கு இவ்வளவு உயர்ந்த தேசிய விருதை எதிர்பார்த்தீர்களா?
நிச்சயமாக இல்லை. ஆனால் எனது பணியை என் சமூகத்தின் தம்பிமார்கள் ஒருநாள் புரிந்து கொள்வார்கள் என எதிர்பார்த்தேன். தமிழ்ச் சமூகம் ஒரு நாள் என்னை அங்கீகரிக்கும் என நம்பினேன். ஆனால் அது எப்படிப்பட்ட அங்கீகாரம் என்பதை என்னால் ஊகிக்க இயலவில்லை.
  • இன்று மிக உயர்ந்த விருது கிடைத்துள்ளதை எப்படி உணர்கிறீர்கள்?
கடற்கரை சமூகங்களுக்கு கிடைத்த முதல் அங்கீகாரமாகக் கருதுகிறேன். அதுவும் தேசிய அளவிலான அங்கீகாரம் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. அதே நேரத்தில் மிரட்சியாகவும் உள்ளது.
  • பெரும் கொண்டாட்டம் தரும் விருது என இதனைக் கருதலாமா?
நிச்சயமாக இல்லை. கொண்டாட இதில் எதுவும் இல்லை. குறிப்பாக கொண்டாடுவதற்கான மனநிலை என்னிடம் இல்லை. மாறாக நான் பிறந்த சமூகத்தின் மீதான எனது பொறுப்புகளையும் கடமை களையும் அதிகப்படுத்தியுள்ளதாக கருது கிறேன். எனக்கு முன்னால் இறைந்து கிடக்கும் மிகப்பெரும் களப்பணியை நினைவூட்டுவதாக எண்ணுகிறேன்.
  • நீங்கள் எப்படி எழுத்துலகுக்கு வந்தீர்கள்?
பொதுவாகவே அனுபவங்களையும், தகவல் களையும் சேகரித்து சிறு சிறு குறிப்புகளாக பதிவு செய்யும் வழக்கம் என்னிடம் உண்டு. ஆனால் அதனை ஒரு இலக்கியமாக பதிவு செய்வேன் என்று ஒரு நாளும் எண்ணியதில்லை. தமிழினி பதிப்பகத்தின் வசந்தகுமாருடன் எனது கடல் சார் வாழ்க்கையின் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட காலத்தில் அவர்தான் என்னை எழுதுங்களேன் என்று முதலில் கூறினார். அதனைத் தொடர்ந்து நான் எழுதிய நாவல்தான் 'ஆழி சூழ் உலகு' என்ற பெயரில் அவர் பதிப்பகத்திலிருந்து வெளிவந்தது. ஆக, வசந்தகுமாருடன் நான் நிகழ்த்திய உரையாடல்களின் நீட்சி தான் எனது எழுத்து.
  • மிகப்பெரும் வணிக நிறுவன த்தில் தலைமைப் பொறுப்பில் உள்ள உங்களால் எப்படி நேரம் ஒதுக்கி எழுத முடிகிறது?
நான் அலுவலகத்தில் எதுவும் எழுதுவதில்லை. வீட்டுக்கு திரும்பிய பிறகுதான் எழுதுவேன். நான் மிகவும் தனிமை விரும்பி. இதனை புரிந்து கொண்ட மையால் வீட்டில் நான் தனிமையில் இருக்கும் நேரத்தில் என் மனைவி அதில் குறுக்கீடு செய்ய மாட்டார். அவரது இந்த ஒத்துழைப்புதான் நான் படிப்பதற்கும், எழுதுவதற்கும் பெரும் உதவியாக உள்ளது.
  • உங்களைப் பற்றிய உங்கள் மனைவியின் ஆசை...?
"ஏன் இப்படியே இருக்கீங்க, ஒரு நாளைக்காவது சிரிங்களேன்" என்று எனது மனைவி அடிக்கடி கூறுவார். நான் சிரிக்க வேண்டும், அதுவும் மனம் விட்டு சிரிக்க வேண்டும் என்பது எனது மனைவியின் ஆசை. ஆனால் அப்படி சிரிப்பதற்கான சூழல் இதுவரை எனக்கு அமைய வில்லை.
  • உங்களுடைய அடுத்த நாவல் பற்றி.?
முதல் நாவல் கட்டுமரத்தை மையப்படுத்தியது. இரண்டாவது நாவல் பாய்மரக் கப்பலோடு தொடர்புடையது. அடுத்து நான் பெரிய கப்பலில் பயணிக்க விரும்பு கிறேன். குறிப்பாக என் தொழில் சார்ந்த வணிகக் கப்பல்கள் மற்றும் அவைகளுடன் தொடர்புடைய மனிதர்களைப் பற்றியதாக அது இருக்கும்.