காலஞ்சென்ற தென்னாபிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் நினைவஞ்சலி நிகழ்வின் போது கியூப ஜனாதிபதி ராவுல் கஸ்ட்ரோவுடன் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கைகுலுக்க நேர்ந்தது முன் திட்டமிடப்பட்டதல்ல என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இருவருக்கும் இடையில் வாழ்த்து பரிமாறிக்கொள்ளப்பட்டதை தவிர வேறு ஒன்றும் இடம்பெறவில்லை என வெள்ளை மாளிகை உதவியாளர் பென் ரோட்ஸ் ஊடகவியலாளர்களிடம் குறிப்பிட்டார்.
எனினும் இந்த கைகுலுக்கல் அமெரிக்க ஆக்கிரமிப்பு முடிவின் ஆரம்பத்தை காட்டுவதாக கியூப அரசு குறிப்பிட்டுள்ளது.
பனிப்போர் காலத்தில் கியூப முன்னாள் ஜனாதிபதி பிடெல் காஸ்ட்ரே சோவியட் ஒன்றியத்துடன் கூட்டுச் சேர்ந்ததை அடுத்து 1961 ஆம் ஆண்டு அமெரிக்கா கியூபாவுடனான இராஜதந்திர உறவை முறித்துக்கொண்டது.
இந்நிலையில் இரு தலைவர்களுக்கும் இடையிலான கை குலுக்கலுக்கு பின் வெள்ளை மாளிகை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், கியூபாவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஒபாமா நிர்வாகம் தொடர்ந்தும் அவதானம் செலுத்தும் என குறிப்பிட்டுள்ளது.
இதற்கு முன்னர் கடந்த 2000 ஆம் ஆண்டு ஐ.நா. பொதுக்குழு கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் பிடெல் காஸ்ட்ரோவுடன் கைகுலுக்கிக் கொண்டார்.