ஆந்திராவில் ‘ராயல தெலுங்கானா’ திட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. ஜனாதிபதியின் கையெழுத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
ஆந்திர மாநிலத்தை இர ண்டாக பிரித்து ‘தெலுங்கானா’ தனி மாநிலம் அமைக்க காங்கிரஸ் காரிய குழுவும் அதைத் தொடர்ந்து மத்திய அமைச்சரவையும் முடிவு செய்தன. இதற்கு ஆந்திராவின் இதர பகுதிகளான கடலோர ஆந்திரா, ராயலசீமா ஆகிய பகுதிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த சூழ்நிலையில், ராயலசீமா பகுதியில் உள்ள 4 மாவட்டங்களில் கர்நூல், அனந்தப்புரம் ஆகிய 2 மாவட் டங்களை தெலுங்கானாவுடன் சேர்த்து, ‘ராயல தெலுங்கானா’ என்ற தனி மாநிலமாக அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதற்கு தெலுங்கானா பகுதியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. தெலுங்கானாவின் 10 மாவட்டங்களிலும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிகளைச் சேர்ந்த 11 எம்.பிக்களும் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து தங்களது அதிருப்தியை தெரிவித்தனர்.
ராயலசீமா பகுதியிலும் எதிர்ப்பு நிலவி வருகிறது. தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, டில்லியில் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆந்திரா பிரிவினை விவகாரத்தில் நாள்தோறும் மாற்றி மாற்றி பேசி மத்திய அரசு குழப்பத்தை அதிகரித்து வருவதாக சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார்.
இந்த சூழ்நிலையில் இப்பிரச்சினை குறித்து காங்கிரஸ் உயர்மட்டக் குழு கூட்டம், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடை பெற்றது. அதில் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர். இக்கூட் டத்தில், ராயல் தெலுங்கானா பிரச்சினை குறித்து விவாதிக் கப்பட்டது. பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் எதிர்க் கட்சிகளை சமாளிப்பது பற்றியும் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தை தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது. சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில், ராயலசீமா வின் 2 மாவட்டங்களை தெலுங்கானாவுடன் சேர்க்கும் ராயல தெலுங்கானா திட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெலுங்கானா என 3 பிராந்தியங்களிலும் இதற்கு எதிர்ப்பு நிலவுவதை கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள் ளது.
அதேசமயம் முன்பு திட்டமிட்டது போல் 10 மாவட்டங்களை உள்ளடக்கிய தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அமைச்சரவை அனுமதி அளித்தது. மந்திரிகள் குழுவின் பரிந்துரைகளின்படி இதற்காக தயாரிக்கப்பட்ட வரைவு சட்ட மகோதாவுக்கு மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.
இதனைத் தொடர்ந்து இந்த சட்ட மசோதா வெள்ளிக்கிழமை ஜனாதிபதியின் அனுமதிக்காக அனுப்பப்படுகிறது. பின்னர் இந்த மசோதா ஆந்திர மாநில சட்ட சபைக்கு அனுப்பப்பட்டு, அதன் கருத்துகளும் கேட்கப்பட உள்ளது. இந்த மசோதா பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற அரசு விரும்புவதாகவும், ஆனால் இது ஜனாதிபதி கையெழுத்து போட்டு அனுப்புவதை பொருத்தே உள்ளது என்று மத்திய அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே கூறினார்.
இந்த மசோதாவின்படி ஆந்திர மாநிலத்தை பிரித்து 10 மாவட்டங்களுடன் புதிய தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படுகிறது. எஞ்சிய 13 மாவட்டங்களுடன் ஆந்திர மாநிலம் இருக்கும் ஹைதராபாத் இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக 10 வருடங்களுக்கு மிகாமல் இருக்கும்.