12/25/2013

| |

தெற்கு சூடான்: போலீஸ் நிலையத்துக்குள் 200 பொதுமக்கள் சுட்டுக்கொலை

தெற்கு சூடானில் மோசமான கொடூரங்கள் இழைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் கூறுகின்றன.
ஒருவாரத்துக்கு முன்னர் அங்கு வெடித்த இன வன்முறைகளில் பெருமளவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.இருநூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூட்டாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்றை நேரில் பார்த்த மூன்று சாட்சிகள் தன்னிடம் பேசியுள்ளதாக ஜூபாவில் உள்ள செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் நியூர் இனக்குழுவைச் சேர்ந்தவர்கள்.
அனைவரையும் போலீஸ் நிலையம் ஒன்றுக்குள் தள்ளிவிட்டு, அவர்களை அரசபடையினர் சுட்டுக்கொன்றதாக நேரில் கண்டவர்கள் கூறியுள்ளனர்.
அண்டையிலுள்ள கிராமங்களுக்குள் நுழைந்த ஆயுததாரிகள், வீடு வீடாகச் சென்று டின்கா இனக்குழுவைச் சேராதவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று தேடித் தேடி சுட்டுக்கொன்றதாக இன்னொருவர் கூறினார்.
இதுதவிர, நாடெங்கிலும் உள்ள ஐநா அலுவலக வளாகங்களில் சுமார் 45 ஆயிரம் பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.
தெற்கு சூடானில் 80 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர்.
அதிகாரபூர்வமான கணக்குகளின்படி, 500 பேர் வரை உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், உயிரிழப்பு எண்ணிக்கை அதனைவிட அதிகம் என்று தொண்டுநிறுவனங்கள் கூறுகின்றன.