11/28/2013

| |

சீன வான் பாதுகாப்பு வலயத்தை மீறி அமெ. யுத்த விமானம் பயணம்

பிராந்தியத்தில் பதற்றம் அதிகரிப்பு
சீனா புதிதாக பிரகடனப்படுத்திய வான் பாதுகாப்பு வலயத்தை மீறி இரு அமெரிக்க யுத்த விமானங்கள் பறந்துள்ளன. இவ்வாறு பறந்த பி - 52 ரக விமானங்கள் கண்காணிக்கப்பட்டதாக சீன பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
ஜப்பான் நாடும் உரிமை கொண்டாடும் கிழக்கு சீன கடற்பகுதியில் இருக்கும் சர்ச்சைக்குரிய தீவுகளையும் உள்ளடக்கியதாக சீனா புதிய வான் பாதுகாப்பு வலயத்தை பிரகடனம் செய்தது. ஆனால் அமெரிக்க யுத்த விமானங்கள் எந்த முன்னறிவிப்பும் இன்றி நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இந்த பாதுகாப்பு வலயத்தினூடாக அத்துமீறி பறந்தது.
எனினும் சீனாவின் வான் வலயத்திற்கு அமெரிக்கா மற்றும் ஜப்பான் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது. சீனா ஒருதலைப்பட்சமாக நிலையை மாற்ற முயற்சிப்பதாகவும் பிராந்தியத்தில் பதற்றத்தை தீவிரப்படுத்துவதாகவும் இந்த இரு நாடுகள் குற்றம்சாட்டின. இதில் ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருக்கும் தீவுகளையும் உள்ளடக்கியதாகவே சீனா கடந்த சனிக்கிழமை பிரகடனம் செய்த வான் பாதுகாப்பு வலயம் அமைந்துள்ளது.
ஜப்பான் சென்ககு என்றும் சீன டியாயு என்று அழைக்கும் இந்த தீவுகளால் கடந்த பல மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் தீவிரமடைந்துள்ளது. சீனாவின் வான் பாதுகாப்பு வலையம் ‘செல்லாதது’ என்று அறிவித்த ஜப்பான் அதனை கடைபிடிக்கத் தேவையில்லை என்று தனது விமானங்களுக்கு செவ்வாய்க்கிழமை அறிவுரை வழங்கியது. இந்த வலயத்தினூடாக பறப்பதில் எந்தப் பிரச்சினையையும் சந்திக்கவில்லை என்றும் ஜப்பான் குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் வழமையான பயிற்சி நடவடிக்கையாக அமெரிக்காவின் ஆயுதம் தரிக்காத விமானம் குவாமில் இருந்து பறந்ததாக அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த யுத்த விமானங்கள் வழமையான பயணப்பாதையில் சென்றதாகவும் சீனாவினூடாகப் பறக்கத் திட்டமிடப்படவில்லை என்றும் பெண்டகன் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த வான் பாதுகாப்பு வலயத்தினூடாக பறக்கும் விமானங்கள் அதற்கு கட்டுப்பட்டே பறக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அவசர பாதுகாப்பு நடவடிக்கைக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் என்று சீனா எச்சரித்திருந்தது.
எவ்வாறாயினும் பாதுகாப்பு வலயத் தினூடாக பறந்த அமெரிக்க யுத்த விமானங்கள் மீது சீனா எந்த அவசர நடவடிக்கையையும் எடுத்ததாக அது நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. சீன பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், “சீன விமானப்படை குறிப்பிட்ட அமெரிக்க விமானம் ஒரு குறித்த காலத்தில் பயணித்ததை அவதானித்தது.
கிழக்கு சீனா கடற்பகுதியின் வான் பாதுகாப்பு வலயத்தினுடாக பறக்கும் அனைத்து விமானங்களையும் சீன கண்காணிக்கும். இந்த வான்மண்டலத்தை கட்டுப்படுத்தும் திறன் சீனாவுக்கு இருக்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க யுத்த விமானங்கள் அத்துமீறி நுழைந்ததன் மூலம் சீனாவின் பாதுகாப்பு மண்டலத்தை ஏற்கவில்லை என்ற தெளிவான சமிக்ஞையை அமெரிக்கா விடுத்துள்ளது.
மறுபுறத்தில் பிராந்தியத்தில் பாதுகாப்பு செயற்பாடுகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள சூழலிலேயே இந்த பதற்றம் வெடித்துள்ளது. ஜப்பான் பாராளுமன்றம் நேற்று நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களில் பிரதமருக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஒன்றை நிறுவியது. அதேபோன்று சீனாவின் லியோனிங் விமானந்தாங்கி கப்பல் தென் சீன கடலை நோக்கி பயணித்தது.