11/01/2013

| |

அறிவுடைச் சமூகமே நல்ல வாசிப்பின் அறுவடை


‘உலகமயமாதலின் வீரியமிகு வேகத்துடன் ஒவ்வொருவரும் போட்டி போட்டுக் கொண்டு நகரவேண்டியதன் அவசியமும் அவசரமும் உணரப்பட்டுள்ள சமகாலத்தில் நிமிடத்துக்கு நிமிடம் புற்றீசலாய் ஆங்காங்கே பிரவாகித்துவரும் தகவல்களை எவ்வளவுக்கெவ்வளவு வாசித்து உள்வாங்குகின்றோமோ, அவ்வளவுக்கவ்வளவு நமது இருப்பை உறுதிப்படுத்த முடிவதுடன், அவ்வாசிப்பின் அறுவடையாய் ஆரோக்கியமானதோர் அறிவுடைச் சமூகத்தை நிட்சயம் நாம் பிரசவிக்கவைக்கமுடியும்’. மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையில் நடைபெற்ற தேசிய வாசிப்பு மாதப் பரிசளிப்பு விழாவில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்ட கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட உதவி நூலகரும், நூலக, தகவல் விஞ்ஞான விரிவுரையாளரும், கிழக்கு மாகாண நூலக, தகவல் விஞ்ஞான ஒருங்கிணைப்பாளருமான தீசன் ஜெயராஜ் மேற்கண்டவாறு தனது சிறப்புரையில் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர் ‘தொழினுட்பம் விருத்தியடைந்துள்ள இக்கால நடைமுறைக் கேற்பவே, தகவல்களும் பல்வேறு வடிவங்களைச் சுமந்து, அச்சு வடிவிலும், மின்னியல் வடிவிலும் தாராளமாய்க் கிடைக்கிறது. இவற்றை நாம் சரியான நேரத்தில் வாசித்து உள்வாங்காவிட்டால் நமது எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். நாம் தேடிநிற்கும் தகவல்களை நேரடியாகத் தந்து நிற்பதாகவோ அல்லது அத்தகவல்களுக்கு வழிகாட்டி நிற்பதாகவோ பல்வேறு ஆவணங்கள் நமது வாசிப்புக்கென நூலகங்களில் ஏராளமாய் காணப்படுகின்றன. ஆகவே நாம் வாசிக்கின்றபோது அதன் உள்ளடக்கங்கள் மனரம்மியமாய் நமக்குள்ளே இறங்கவேண்டும். இதுவே வாழ்வியலின் நடைமுறையில் பிற்காலத்தில் தேவைப்படும்போதெல்லாம் நாம் பிரயோகிக்க வாய்ப்பாக அமையும்’ எனக் குறிப்பிட்டார்.

தேசிய வாசிப்பு மாதத்தையொட்டி மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலை நடாத்திய பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள், மாணவிகளுக்கான பரிசளிப்பு விழா அண்மையில் பாடசாலை குறொவ்ட் மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடந்தேறியது. பாடசாலை அதிபர் திருமதி இராஜகுமாரி கனகசிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பணியகத் திட்டமிடல் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு. எம். குருகுலசிங்கம் அவர்களும், சிறப்பு அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட உதவி நூலகரும், நூலக, தகவல் விஞ்ஞான விரிவுரையாளரும், கிழக்கு மாகாண நூலக, தகவல் விஞ்ஞான ஒருங்கிணைப்பாளருமான தீசன் ஜெயராஜ் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

பாடசாலை பேண்ட் வாத்தியக் குழு இசையுடன் அதிதிகள் மண்டபத்தை அடைந்தனர். இவ்விழாவின் சிறப்பம்சமாக தேசிய ரீதியில் வாசிப்பு மாத வேலைத்திட்டத்திற்கான விருது பெற்ற மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலைக்கென கல்விச் சேவைகள் அமைச்சரினால் வழங்கிவைக்கப்பட்ட கேடயத்தினை பாடசாலை அதிபர் திருமதி ஆர் கனகசிங்கம் அவர்களும், நூலக உதவியாளரான திரு பவளராஜா அவர்களும் பிரதம அதிதி திரு குருகுலசிங்கம் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்கள். வாசிப்பின் மகத்துவம் பற்றிய  சிற்றுரையினை செல்வி விதூசாவும் கவிதையினை பாடசாலை ஆசிரியையும் வழங்கினார்கள்.