11/27/2013

| |

விகிதாசார முறையினால் நேபாளத்தில் பிரதமர் இல்லை

ஐந்து மாதங்களுக்கு மேலாக நேபாளத்தில் பிரதமர் இல்லை. பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கு ஆறு தடவைகள் வாக்கெடுப்பு நடத்தியும் ஒருவரைத் தேர்ந்தெடுக்க முடியவில்லை.
மக்கள் கிளர்ச்சியின் மூலம் மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த பின் அங்கு இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான தேர்தல் 2008 ஆம் ஆண்டு நடைபெற்றது. மொத்தம் 601 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூடுதலான ஆசனங்களைக் கைப்பற்றிய மாவோயிஸ்டுகள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றனர்.
இரண்டு வருட காலத்தில் புதிய அரசியலமைப்பைத் தயாரித்து நடைமுறைப்படுத்துவதற்காகவே இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது. பிரதமராகப் பொறுப்பேற்ற மாவோயிஸத் தலைவர் பிரசண்ட ஆளுநருடனான முரண்பாடு காரணமாகப் பதவி விலகியதும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் மாதவ் குமார் நேபால் பிரதமராகப் பொறுப்பேற்றார். கடந்த மே மாதத்துடன் இடைக்கால அரசாங்கத்தின் இரண்டு வருட காலம் முடிவுக்கு வந்தது. அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான தொடக்க வேலை கூட ஆரம்பிக்கப்பட வில்லை. இந்த நிலையில் பிரதமர் நேபால் பதவியை இராஜினாமா செய்ய, இடைக்கால அரசாங்கத்தின் பதவிக் காலத்தை மேலும் ஒரு வருடத்தால் நீடிப்பதற்கு எல்லாக் கட்சிகளும் சம்மதம் தெரிவித்தன.
இந்த ஒரு வருட காலத்துக்குள் அரசியலமைப்பைத் தயாரித்து நடைமுறைப்படுத்த வேண்டும். பிரதமர் ஒருவரைத் தெரிவு செய்த பின்னரே அது சாத்தியமாகும். மே மாதத்திலிருந்து பிரதமரைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்புகள் இடம்பெற்ற போதிலும் ஒருவராவது பிரதமராகுவதற்குத் தேவையான 301 வாக்குகளைப் பெறவில்லை. ஐந்து மாதங்களுக்கு மேலாகப் பிரதமர் இல்லை. ஆளுநரே பிரதமரின் கடமைகளைப் புரிகின்றார்.
இந்த நிலை ஏற்படுவதற்கு என்ன காரணம்?
நேபாளத்தில் நடைமுறையில் இருப்பது விகிதாசாரத் தேர்தல் முறை. அளிக்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் பார்க்கையில், தொகுதிவாரித் தேர்தல் முறை நடைமுறையில் இருந்திருக்குமேயானால் மாவோயிஸ்டுகளுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைத்திருக்கும். விகிதாசாரத் தேர்தல் முறை காரணமாக எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எந்தக் கட்சியும் மற்றைய கட்சிக்காரர் பிரதமராகுவதை விரும்பவில்லை. நேபாளத்தின் அரசியல் நெருக்கடிக்கு விகிதாசாரத் தேர்தல் முறையே காரணம்.
நீடிக்கப்பட்ட ஒரு வருட காலத்தில் அரைவாசிப் பகுதி கழிந்துவிட்டது. இன்னும் பிரதமரைத் தெரிவு செய்யாத நிலையில் குறிப்பிட்ட காலத்துக்குள் அரசியலமைப்பு தயாரிக்கப்படுவது சந்தேகமே. இந்த நெருக்கடிக்கு உரிய காலத்துக்குள் தீர்வு காணப்படாவிட்டால் மீண்டும் முடியாட்சிக்குப் போகும் நிலை ஏற்படுமா என்ற கேள்வி எழுகின்றது.