11/01/2013

| |

ஆஸி பொதுநலவாய உச்சி மாநாட்டை விடவும் கூடுதல் அரச தலைவர்கள் இலங்கை மாநாட்டில் பங்கேற்பர்

இலங்கையில் நடைபெற உள்ள பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதாக இதுவரை 37 நாடுகள் உறுதிப்படுத்தியுள்ளன. கடைசியாக அவுஸ்திரேலிய பேர்த் நகரில் நடைபெற்ற பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்ற அரச தலைவர்களை விட கூடுதலான தலைவர்கள் இம் மாநாட்டில் பங்கேற்க இருப்பதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இம் மாநாட்டில் பங்கேற்பது தொடர்பில் சந்தேகம் காணப்பட்ட போதும் காங்கிரஸ் மத்திய குழுக் கூட்டத்தில் அவர் பங்கேற்க வேண்டுமென முடிவெடுக்கப்பட்டிருப்பது குறித்து அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் வினவப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது :-
இதுவரை பல நாட்டு தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதாக உறுதியளித்துள்ளனர். இறுதியாக நடந்த மாநாட்டை விட கூடுதல் அரச தலைவர்களின் பங்களிப்புடன் இம்முறை மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டிற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் உரிய காலத்திற்குள் பூர்த்தி செய்யப்படுமென்பதில் உறுதியாக உள்ளோம் என்றார்.
பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு கொழும்பு நகரில் இன்னும் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர்,
யுத்தம் முடிவடைந்த பின்னர் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பொதுநலவாய மாநாட்டிற்காக மட்டும் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. பொது நலவாய மாநாட்டிற்காக சில பகுதிகளில் அபிவிருத்திகள் துரிதப் படுத்தப்பட்டுள்ளன.
பொதுநலவாய மாநாட்டிற்கு மேற்கொள்ளப்படும் செலவு குறித்து சிலர் குற்றஞ்சாட்டினாலும் மாநாட்டினால் இலங்கைக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து குறைவாகவே பேசுகின்றனர் என்றார்.
ஐ. தே. க. அடங்கலான கட்சிகளுக்கு மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படாதது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
மாநாடு நெருங்குகையில் ஐ. தே. க. உட்பட சகல கட்சிகளுக்கும் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படும் என்றார். நவம்பர் 10 ஆம் திகதி கொழும்பில் ஐ. தே. க. ஆர்ப்பாட்டமொன்றை நடத்த தயாராவது குறித்து கருத்து வெளியிட்ட அவர்,
இலங்கையில் மிக முக்கியத்துவமான சர்வதேச மாநாடொன்று நடைபெற இருக்கையில் இவ்வாறு ஆர்ப்பாட்டம் நடத்துவது உகந்ததா என அந்தந்த கட்சிகளே முடிவு செய்ய வேண்டும். அது அவர்களது பொறுப்பு, இந்த மாநாடு ஒரு கட்சிக்கு மட்டுப்படுத்தப்பட்டதல்ல என்றார்.
பொதுநலவாய வர்த்தக ஒன்றிய மாநாட்டில் ஆயிரம் பிரதான வர்த்தகர்கள் பங்கேற்க உள்ளனர். பொதுநலவாய மாநாட்டு வர்த்தகர்கள் மட்டுமன்றி சீனா, அரபு நாடுகள் உட்பட பல நாட்டு வர்த்தகர்கள் பங்கேற்கின்றனர். அவர்களுக்கு நாட்டின் எப்பகுதிக்கும் சென்று வர அவகாசம் உள்ளது. இங்கு முதலீடு செய்ய தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றார்.