11/05/2013

| |

வடமாகாண சபையின் போக்கு தேறாது போல் தெரிகிறதே


ariyaratnam
 வடமாகாண சபையின்உறுப்பினர்  திரு. ப. அரியரத்தினம் உரை 
எங்களுடைய அன்புக்கும் மதிப்புக்கும் உரிய இன்றைய நிகழ்வினுடைய தலைவர் அவர்களே, இன்றைய நிகழ்வினுடைய பிரதம விருந்தினர் அண்ணன் குகராசா அவர்களே, இந்த மாவட்டத்திலே வேட்பாளர்களாக போட்டியிட்டு வெற்றிபெற்று இந்த நிகழ்வுக்கு என்னுடன் வந்து அமர்ந்திருக்கும் என்னுடைய நண்பனும் தற்போதைய கல்வி அமைச்சருமாகிய அன்புக்குரிய குருகுலராஜா அவர்களே, முன்னைநாள் கிராம சேவையாளரும், தற்போதைய வட மாகாண சபை உறுப்பினருமாகிய திருவாளர் பசுபதிப்பிள்ளை அவர்களே, இங்கு வந்திருக்கும் பெரியோர்களே, கரைச்சி பிரதேச சபையினுடைய உறுப்பினர்களே, அன்புக்குரியவர்களே தாய்மார்களே அனைவருக்கும் இந்த நேர வணக்கத்தை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இன்றைய இந்த நிகழ்வு உண்மையிலேயே நீங்கள் எங்களை கௌரவிக்க வேண்டும் என்பதற்காக எடுத்த நிகழ்வு. அதற்காக தலைவர் அவர்களுக்கும் இங்கே வருகை தந்திருக்கும் அனைவருக்கும் என்னுடைய சிரம் தாழ்த்திய நன்றிகளை முதற்கண் தெரிவித்துக்கொள்கிறேன். இரண்டாவதாக நாம் இந்த வட மாகாண சபைத் தேர்தலிலே சென்ற மாதம் 21 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை மேடை மேடையாக பேசினோம். நாம் என்னத்தை பேசினோம். என்னத்தை இதுவரை செய்து கொண்டிருக்கிறோம் என்பதுதான் ஒரு கேள்விக் குறியாக மாறியிருக்கின்றது.

அதேவேளையிலேயே ஏனைய மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களைப் பார்க்க நாங்கள் கிளிநொச்சி மாவட்டத்திலேயே ஒரு சவாலை நிலை நாட்டியிருந்தோம். அதாவது இங்கிருந்த மாற்றுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் செய்த சேவைகள் எல்லாம். ஏனைய மாவட்டங்களைவிட இந்த மாவட்டத்திலே மக்களால் பெரிதும் பேசப்பட்டு வந்த ஒரு நேரம். ஆகவே இந்த தேர்தலில் நாம் பெற்ற வெற்றி என்பது ஏனைய நான்கு மாவட்டங்களிலும் இல்லாத பெரும் சவாலின் மத்தியிலேயே நாங்கள் ஈட்டிக்கொண்ட வெற்றி. அந்த வகையிலேயே எங்கள் மூவரையும் ஏனைய மாவட்டங்களிலே எண்ணாயிரம் ஒன்பதுநாயிரம் வாக்குகளைப் பெற்றவர்கள் மாகாண சபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர். எங்கள் மூவரையும் 26 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெறவைத்து எங்களை வெற்றி பெறச் செய்த இந்த மாவட்ட மக்களை என்றுமே நாம் மறந்துவிட முடியாது.     
அவர்கள் அளித்த ஒவ்வொரு வாக்குகளும் எந்த நேரமும் இந்த மக்களைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்பதை உறுதியாக எப்பொழுதும் எங்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கும் வார்த்தை. அதற்காக நாங்கள் மீண்டும் உங்களுக்கு நன்றி பாராட்ட கடைமைப்பட்டிருக்கின்றோம். அடுத்ததாக நான் இங்கே சில விடயங்களை கூறிக்கொள்ள வேண்டும். ஏனென்றால் நண்பர் கல்வியமைச்சராக இருக்கின்ற காரணத்தினாலேயே அவர்கள் அனைவரும் அமைச்சர்களாக இருப்பார்கள். நாங்கள் 25 பேரும் உறுப்பினர்களாகவே அந்த சபையில் இருப்போம். அப்போது அவர்கள் சில இடங்களிலே எங்களை வைத்து கதைக்க மாட்டார்கள். அவர்கள் அமைச்சரவை. நாங்கள் 25 பேரும் உறுப்பினர்கள். இந்த நிர்வாகக் கட்டமைப்பிலேயே அவர்களுக்கும் எங்களுக்கும் இடையிலேயே சில விடயங்கள் இருக்கும். அதனாலேயே அவர்கள் கூட்டுப் பொறுப்பு, அமைச்சுப் பொறுப்பு என்ற வகையிலேயே சில விடயங்களை கூட்டத்தில் கூற முடியாதவர்களாக இருப்பார்கள்.ஆனால் நாங்கள் சில விடயங்களை கூற வேண்டியவர்களாக இருப்போம்.

என்னைப் பொறுத்தளவிலே நான் திருவாளர் குருகுலராஜா இருவரும் ஒரு நாள் ஆசிரியர்களாக இந்த பதவியிலேயே வந்தவர்கள். தொடர்ந்து அனைத்து பதவிகளிலுமே சம காலத்தில் வகித்தவர்கள். எனவே எனக்கும் அவருக்கும் இடைய ஒரு நீண்டகால ஏறத்தாழ ஒரு 40 வருட காலமாக ஒரு நெருக்கமான சிநேகிதபூர்வமான உறவு இருவருக்கும் இடையே இருந்தது.  நான் எனக்கு இந்தப் பதவி தான் வேண்டும் என்று எவரையும் கேட்டதில்லை. இனிவரும் காலங்களிலும் எவரையும் கேட்கப்போவதும் இல்லை. அதை நான் தெளிவாகக் கூற விரும்புகிறேன்.

எமக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதனை மாகாண சபை உணர்ந்து எந்தப் பதவியை எமக்குத் தருகிறதோ அந்தப் பதவியை விசுவாசத்துடன் செய்ய வேண்டிய ஒரு சத்தியப்பிரமாணத்தை மக்களுக்கு கொடுத்துள்ளோம். அந்த நிகழ்வுக்காக எங்களுக்கு அவர்கள் வாக்களித்திருக்கிறார்கள். இந்த வகையிலே எங்கள் அனைவரிமிருந்து எங்களுடைய சுய விபரங்களை இந்த மாகாண சபை பெற்றுக் கொண்டது. நான் நினைக்கின்றேன் அன்றைய தண்ணீர்க் கூட்டத்திலும் ஒரு கருத்தைச் சொன்னேன். அதாவது எங்களை இந்த வன்னி மக்களை ஒரு குறைந்த நோக்கத்தோடு பார்க்கும் பார்வை இந்த வட மாகாணத்திற்கு எப்பொழுதும் இருக்கின்றது. அதை நாங்கள் மறந்துவிடக் கூடாது.

நான் இந்த மாவட்டத்திலேயே படித்து இந்த மாவட்டத்திலே பல்கலைக்கழகத்திற்குச் சென்று இந்த மாவட்டத்திலேயே கல்விப் பணிப்பாளராக, மேலதிக கல்விப் பணிப்பாளராக கிட்டத்தட்ட 44 வருங்களாக இந்த மாவட்டத்திலே முல்லைத்தீவிலே துணுக்காயிலேயே வட மாகாணத்திலே மன்னார் தொடக்கம் வேலை செய்தவன். எல்லோருக்கும் தெரியும் எங்களை சற்று தாழ்வு மனப்பாண்மையுடன் பார்க்கும் தன்மை இந்த வட மாகாணத்திற்கு உண்டு.   

எங்களுடைய வட மாகாண சபை பல விடயங்களை கொழும்பிலேயே சிந்தித்து கொழும்பிலேயே கலந்துரையாடி அந்த முடிவுகளை வந்து அறிவிக்கும் இடமாகத்தான் எங்களது  மாகாண சபை மாறிக்கொண்டு போகின்றது.  எங்கள் அனைவரிடமும் கேட்டார்கள் உங்களது சுயவிபரங்களை எழுதித் தரச் சொல்லி நான் உட்பட திருவாளர் பசுபதிப்பிள்ளை உட்பட 25 பேரும் எங்களுடைய கல்வித்தராதரங்கள் நாங்கள் பார்த்த தொழில்கள் அனைத்தையும் எழுதிக் கொடுத்தோம். பிறகு பத்திரிகையில் பார்த்தோம் என்னை உள்ளுராட்சி அமைச்சுக்கும், திருவாளர் பசுபதிப்பிள்ளை அவர்களை மின்சாரமும் இணைப்புக்கும் நியமித்திருக்கிறார்கள். இவ்வாறே அனைவருக்கம் பொறுப்புகளைக் கொடுத்திருக்கிறார்கள். இந்த பொறுப்புக்களை கொடுப்பதற்கு முதல் இந்த  25 பேரையும் அவர்கள் ஒன்றும் கேட்கவும் இல்லை. இது தொடர்பாக கதைக்கவும் இல்லை. எங்களுக்கு அந்த துறையிலே என்ன ஆற்றல் இருக்கின்றது. என்ன தகுதி இருக்கின்றது. அவற்றை நாம் எவ்வாறு கொண்டு செல்வோம். இன்னுமொரு விடயத்தையும் நாங்கள் அவர்களிடம் கூறினோம். தெளிவாக நேற்று பசுபதிப்பிள்ளை அண்ணை வழமையாகவே கூட்டத்திலே பேசுகின்ற அந்த ஆக்ரோசத்தோடு நேற்று பேசினார்.

எங்களிடத்தில் இந்த பொறுப்பை தந்திருக்கின்றீர்கள். இப்பொழுது உதாரணத்திற்கு உள்ளுராட்சி அமைச்சை எனது பொறுப்புக்குத் தந்திருந்தால் உள்ளுராட்சி அமைச்சுக்குரிய செயலாளருக்கு என்னைத் தெரியாது. உள்ளுராட்சி ஆணையாளருக்கு எங்களைத் தெரியாது. நாங்கள் சில நேரம் அவர்களுடைய சபைக்குப் போய் ஏதாவது ஒரு விசயத்தைக் கேட்டால் சில நேரம் அவர் என்னை வெளியால போ என்று சொல்லக்கூடும். அதற்காகத்தான் நாம் அவர்களிடம் சொல்லியிருந்தோம் அந்த குறித்த அமைச்சின் செயலாளர்கள் மற்றும் உள்ளுராட்சி ஆணையாளர்களை அழைத்து அவர்களையும் எங்களையும் அறிமுகப்படுத்தி நாங்கள் இந்த விடயங்களுக்கு வரும்போது அதற்கு அனுசரணையாக நடந்துகொள்ளளுமாறு கூறியிருந்தோம். அதற்குச் சொன்னார்கள் இந்த விடயம் தொடர்பாக அடுத்தடுத்த கூட்டத்திலே யோசிப்போம் என்று.

உதாரணத்திற்கு என்னைப் பொறுத்தவரையில் நான் உள்ளுராட்சி அமைச்சுக்கு பொறுப்பாக இருந்தால் என்னுடைய முதல் பணியாக இருக்கும் என்னவென்றால் இந்த உள்ளுராட்சி பணியை நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கு என்ன என்ன துறையிலே என்ன என்ன பிரச்சினை இருக்கிறது என்பதனை ஆராய்ந்திருப்பேன்.

நிதி விடுவிக்கப்படவில்லை. எனவே நிதி விடுவிக்கப்படவில்லை என்றால் நான் மாகாண திறைசேரி அமைச்சின் செயலாளரைக் காண வேண்டும். கதைக்க வேண்டும். ஆனால் எனக்கு அவரை பேசனலாகத் தெரியும். ஆனால் நான் போகும் போது கேட்பார் நீர் யார் என்று உமக்கு யார் இந்த அதிகாரம் தந்தது. அப்ப அந்த ஏற்பாடு ஒன்றையும் மாகாண சபை இதுவரை செய்யவில்லை. இன்றைக்கு மாகாண சபை பதவிக்கு வந்து நான் நினைக்கிறேன் ஏறத்தாழ முப்பத்தியாறு முப்பதியேழு நாள். அப்ப எங்களுக்கு ஒரு பதவியை உதாரணத்திற்கு மின்சாரம் வழங்கும் உங்களுக்குத் தெரியும் இப்ப மின்சாரம் கொடுக்கிறவனோட கதைக்கிறதே அது கடவுளோட கதைக்கிறதுக்கு சரி பசுபதிப்பிள்ளை அண்ணை போய் ஏன் இந்த வீட்டுக்கு மின்சாரம் கொடுக்கவில்லை என்று கேட்டால் எப்படி பதில் இருக்கும். இதை சிந்தித்து பார்க்க வேண்டும். இதுதான் கெழும்பிலே வைச்சு எடுக்கிற முடிவு.

இன்னுமொரு வேதனையான சம்பவம் அதனை நான் நிச்சயம் கூறித்தான் ஆகவேண்டும். ஏன் என்றால் நீங்கள் எங்களுக்கு வாக்களித்தீர்கள். நாங்கள் ஏதோ ஒன்று செய்வோம் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள். முதல் நாள் நிகழ்ச்சியிலே கடகடவென்று ஒரு ஏழு, எட்டுப் பேரை மக்களிடம் சேர்த்துச் சொன்னார்கள் அதில் ஒருவர் தமிழரசுக் கட்சி மற்ற அனைவரும் வேறு கட்சிக்காரர்கள்.  பேந்து பேசுவதற்கு விட்டார்கள் தமிழரசுக் கட்சியிலே அனந்திக்கு ஒரு மூன்று நிமிசம் மற்றது எல்லாம் மற்ற உறுப்பினர்கள். ஆகவே யார் பேசுவது என்று சொல்லி கொழும்பில் இருந்து எழுதிக்கொண்டு வந்து இங்கு வாசிக்கின்றார்கள். ஒரு கூட்டத்திலே பார்க்காமல் பேசமுடியாதவர்களும் வந்திருக்கிறார்கள். நான் இங்கு பார்த்தேன். ஏதாவது எழுதிக்கொண்டு வந்துதான் வாசிக்கக் கூடியவர்கள். இந்த நிகழ்ச்சிகளை நாம் பார்க்கும்போது உண்மையிலேயே இந்த மாகாண சபை எங்களுடைய பிரதேச மக்களுடைய தேவைகள், இந்த கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு உள்ள பிரச்சினைகள் எவ்வளவு எவ்வளவு அவர்கள் எவ்வளவற்றை எதிர்பார்த்தார்கள். நான் நினைகின்றேன் இந்த நிர்வாகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாண சபையைக் கைப்பற்றி ஒரு ஜனநாயக ரீதியாக நிர்வாகம் என்று வந்தும்கூட, ஒரு வேலையுமே செய்யாமல் பல செயல்கள் இரகசியமாக நடந்துகொண்டிருக்கின்றன.
நான் நினைக்கிறேன் இந்த முதலாவது சத்தியப்பிரமாணத்தை செய்துபோட்டு வந்தவுடனேயே 19 ஆம் திகதி தள்ளி நின்றார்கள். நான் ஒரு உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் எங்களுடைய சகோதரங்கள் நீங்கள் எங்களை மதிச்சீங்கள். எங்களுடைய வாக்காளப் பெருமக்கள் எங்களை மதித்தார்கள். ஆனால் எங்களை மதிக்கின்ற சில தன்மைகள் இருக்கின்றன. 11 ஆம் திகதி காலையில 12ம் திகதி காலையில என்னுடைய வீட்டினுடைய இந்த சிவர்தான் பளை ஆஸ்பத்திரி.  இந்த வைத்தியசாலை அந்தன்று திறப்பதாக சனங்கள் சொன்னார்கள். இது உங்களுக்குத் தெரியாதா என்று என்னைக் கேட்டார்கள். அப்போது நான் சொன்னேன், எனக்கேனப்பா சொல்ல வேண்டும். நான் ஒரு நாளுமே ஆஸ்பத்திரிக்குச் போகாதவன். இல்லை இல்லை இப்ப திடீரென்று டக்ளஸ் தேவானந்தாவின் ஆக்கள் எல்லாம் வந்து இடத்தைப் பார்த்துக் கொண்டு போறார்கள். அப்ப இந்த நேஸ்மார் எனக்குச் சொன்னார்கள் இது பிறகு பிறகு விட்டால் புதிய அமைச்சர் வருவார் அதுக்கிடையில இண்டைக்குத் திறந்துவிட்டால் கரைச்சல் இல்லை என்று இது யதார்த்தமான உண்மையான சம்பவத்தைத்தான் உங்களுக்குச் சொல்லுகின்றேன். அப்ப அதுக்குப் பிறகு எனக்கு கொஞ்சம் சிநேகிதம் வந்து சொன்னது இந்த மாகாண சபை உறுப்பினர்களுக்கு கொடுத்த நேரம் வேறயாருக்கும் சொல்லியிருக்கலாம் ஒண்டு. அப்போது எங்களுடைய சுகாதார அமைச்சர் மன்னாரில் நின்டார் அவருக்கு ரெலிபோன் எடுத்துக் கேட்டேன் சேர் அவர் ஏற்கனவே மாகாண சபை உறுப்பினராக வர முதல் அவர் என்னுடைய ஒரு மாணவன். அந்த ஒரு உறவு எனக்கும் அவருக்கும் உண்டு. அப்ப சேர் என்றுதான் கேட்டேன் எப்படியோ அவர் ஒரு டொக்டரெல்லா அதிலும் விட அவர் தற்போது அமைச்சரல்லா. எப்படித்தான் குருகுலராஜா பிறண்ட் என்டாலும் அவரை நான் குருகுலராஜா என்று சொல்லேலாது ஏன் என்றால் அவர் மினிஸ்ரரெல்லா. பதவியை நாங்கள் ஒவ்வொருவரும் மதிக்க வேணும். அப்போது கேட்டன் இப்படி இது என்று எப்பொழுது எனக்குத் தெரியாதே இல்லை இல்லை இப்ப பத்து மணிக்கு மினிஸ்ரற்ற ஆக்கள் எல்லாம் வந்து இடம் பாத்துக்கொண்டிருக்கிறார்கள்.
பொலிஸ் எல்லாம் வந்து செக் பண்ணி றெடியாக இருக்குது. ஆ சரி பாப்பம். அவர் இப்படி சொல்லீட்டார் தானே சொன்னால் பிறகு நான் ஒருக்கா கொஸ்பிற்றலுக்குப் போனன். அதுக்குப்பிறகு இண்டைக்கு இதோ என்டாப்பிறகு அவர் சொன்னார் படார் என்று அது யாரோ மினிஸ்ரற்ற சொல்லி அவர் உடனடியாக அதை நிறுத்தச் சொல்லியிருக்கிறார் என்று நான் பிறகு பாத்தன் நான் பேந்து அதுக்குள்ள நிண்டா இன்னும் கொஞ்சம் மரியாத கெட்டிடும் எண்டு அதை விட்டுவிட்டேன்.

அதைப்போல் பல சம்பங்கள் நடைபெற்றிருக்கிது. இப்ப பாத்திங்கள் என்றால் இந்த காணி கொடுக்கிறதில தட்டுவன்கொட்டியிரல காணியும் வீடும் இருக்கின்ற சிலருக்கு 50 ஆயிரம் ரூபா வீடு கொடுக்கிறது என்று இப்படி பல விசயங்கள் மிக விரைவாக நடந்துகொண்டிருக்கின்றன. அப்ப அந்த இடத்திலே ஒரு சாதாரணமான பொதுச் சனம் என்ன செய்யும். அவர் ஒரு மாகாண சபை உறுப்பினர் என்றால் அவர் அதில் தலையிடுவார் அல்லது தடுத்து நிறுத்துவார் என்று அவ்வாறான இடத்திற்குப் போகும்போது நாங்கள் எவ்வாறான நேற்று சேர் சொன்னார் நான் போக பொலிஸ்காரன் விடமாட்டன் எண்டுட்டான். உள்ளுக்கு விடேலாது எண்டு நான் சொன்னேன் இல்லை இல்லை நான் ஒரு மாகாண சபை உறுப்பினர் என்ட பிறகுதான் ஆ சரி என்று விடுகிறான். அந்தப் பதவியில் இருந்து நாம் இன்னுமே விலகவில்லை. எங்களுடைய அந்த பிறநிதித்துவ ஆட்சி முறை இன்னுமே மாறவில்லை.

அப்ப நான் நினைக்கிறேன் இதைத்தான் பசுபதிப்பிள்ளை அண்ணையும் சொல்லுவார். எங்களுக்கு சில பொறுப்புக்கள் தரப்பட்டுள்ளது என்பது உண்மை. ஆனால் நேற்று முதலமைச்சர் ஒண்டை சொன்னார் இது தற்காலிகமாக நாங்கள் சில பொறுப்புகளைத் தந்திருக்கிறோம் ஒருமாதம் இரண்டு மாதம் போனதற்கு பின்னர் நாங்கள் மீளாய்வு செய்வோம் என்டு. அது மீளாய்வு செய்யாவிட்டாலும் பறவாயில்லை. ஆனால் சம்பந்தப்பட்ட திணைக்கள உத்தியோகத்தர்களை அழைத்து இவர்கள் இந்த பொறுப்புகளுக்கு நியமிக்கப்ட்டிருக்கின்றார்கள் அவர்களோடு கலந்து பேச வேண்டும் என்று ஏனென்டால் இப்பொழுது மாகாண சபைக்கு வருகை தந்திருக்கும் பிரதம உத்தியோகத்தர்கள் அனைவரையும் நேற்றுப் பார்த்தேன் எல்லாருமே எழுபத்தொன்பதையும், எண்பதையும் வயதையுடையவர்கள். முதன் முதலிலே பூநகரியிலே உதவி அரசாங்க அதிபராக இருந்தவர் கிருஸ்ணமூர்த்தி அப்ப நான் அந்த பூநகரியிலேயே எம்.பி.சி.எஸ் பொதுமுகாமையாளர் என்னுடைய பிறசிடென்ட் என்னுடைய தலைவர் அவர்தான் இப்போது மாகாண சபை அசம்பிளியின் செயலாளர். அவருக்கு இப்போது சரியாக எண்பது (80) வயது. திருவாளர் அமிர்தலிங்கம் என்று உங்களுக்குத் தெரியும் கிளிநொச்சி கச்சேரியிலே லாண்ட்டுக்கு பொறுப்பாக இருந்தவர் அவர் பொதுச்சேவை ஆணைக்குழுவின் ஒரு உத்தியோகத்தர்.

முதலமைச்சர் கொழும்பில் இருந்து வந்திருக்கிறார் அவர் மேலே படிக்கட்டில் ஏறுவதற்கு ஒருவர்தான் கையைக் கொடுத்து தூக்கிவிட்டார். இவர்களுக்கு எங்களுடைய வன்னி மக்களினுடைய வாழ்க்கை கிளிநொச்சி மக்களுடைய வாழ்க்கை எங்களுடைய மக்கள் இதுவரை காலமும் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்ற பிரச்சினைகள் அவர்களுக்கு வாழ்வாதார பிரச்சினைகள் அடிப்படைப் பிரச்சினைகள் என்பதனைப் பற்றி உணர்வதில்லை. ஒருக்கால் எண்டாலும் அந்த முள்ளிவாய்க்கால் மட்டும் போய் வந்தவனுக்குத்தான் எவ்வாறு எங்களுடைய மக்களினுடைய வாழ்க்கை இருக்கிறது. எவ்வளவு காலமாக எங்களை ஏமாற்றி வந்த அரச அதிகாரிகள் மீண்டும் மாகாண சபைக்குள்ளே வந்து எங்களுக்கு பணிப்புரைகள் சொல்லப் போகின்றர்கள் என்பதுதான் தற்போது இருக்கின்ற முக்கியமான பிரச்சினை.