11/09/2013

| |

பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டின் உத்தியோகப+ர்வ நிகழ்வுகள் நாளை ஆரம்பம்

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் உத்தியோகபூர்வ நிகழ்வுகள் நாளை கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளன. இவற்றுக்கான சகல ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளன. பொதுநலவாய இளைஞர் மாநாடு ஹம்பாந்தோட்டையிலும், பொதுநலவாய மக்கள் மன்றம் ஹிக்கடுவையிலும் நடைபெறவுள்ளன.
நாளை 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ள இரண்டு மாநாடுகளும் எதிர்வரும் 14 ஆம் திகதி நிறைவடைய வுள்ளன. பொதுநலவாய இளைஞர் மாநாட்டை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்க உள்ளதோடு அதே தினம் மாலை காலியில் நடைபெறும் பொதுநலவாய மக்கள் மன்றத்திலும் ஜனாதிபதி பங்கேற்கிறார். இவற்றையொட்டி காலி, ஹிக்கடுவை மற்றும் ஹம்பாந்தோட்டை நகரங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளதோடு விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
பொதுநலவாய உச்சிமாநாட்டின் இளைஞர் மாநாடு மற்றும் வர்த்தக மாநாடுகள் ஹம்பாந்தோட்டை சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற வுள்ளதுடன் அதற்கான சகல முன்னேற் பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. ஹம்பாந்தோட்டை நகரம் மற்றும் நகரை அண்டிய பிரதேசங்கள் பொதுநலவாய நாடுகளின் கொடிகள் மற்றும் சிறப்பு இலச்சனைகள் பதாகைகளினால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளன.
மாநாட்டு மண்டபத்திற்காக பாதைகள் புனரமைக்கப்பட்டு புதிய வீதி ஒழுங்குகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. சாதாரண பயணிகளுக்கான வீதிகள் மாநாட்டுப் பிரதிநிதிகள் பயணிப்பதற்கான வீதிகள் பாதைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பொதுநலவாய இளைஞர்கள் மாநாட்டுக்கு வருகை தரும் பிரமுகர்களை வரவேற்கும் பதாகைகள் ஹம்பாந்தோட்டை நகரின் சகல சுற்றுவட்டங்களிலும் வைக்கப்பட்டுள்ளன.
மாநாட்டு மண்டப முன்றலின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் மாநாட்டு மண்டப வாயிலில் பொதுநலவாய நாடுகள் அனைத்தினதும் கொடிகளுடன் தேசியக்கொடியும் பறக்க விடப்பட்டுள்ளன. இந்த முன்னேற்பாடு களை ஜனாதிபதி அவர்கள் நேற்றுப் பார்வையிட்டார். நான்கு நாட்கள் ஹம்பாந்தோட்டை
சர்வதேச மாநாட்டு மண்டபத்திலும் காலி கோட்டை நீதிமன்ற சதுக்கம் மற்றும் ஹிக்கடுவ சாயா டிரான்ஸ் ஹோட்டல்களிலும் நடைபெறவுள்ள இளைஞர் மற்றும் மக்கள் மாநாடுகளில் பொதுநலவாய தலைமை பதவியை ஏற்கவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் அமைச்சர் உள்நாட்டு வெளிநாட்டு பிரமுகர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
பொதுநலவாய இளைஞர் மாநாடு கடந்த வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு வைபவ ரீதியாக ஆரம்பித்து காலை 11.00 மணி வரை இடம்பெறவுள்ளது. இந்த மாநாட்டில் இலங்கையின் சார்பில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் தலைவர்களும், வெளிநாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர்களும் கலந்து சிறப்பிக்கவுள் ளதுடன் இன்றைய இளைஞர்கள் எதிர்நோக்கும் சவால்களும் வாய்ப்புக்களும் என்ற தலைப்பில் ஆராயவுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து பொதுநலவாய இளைஞர்கள் மாநாட்டின் பிரதிநிதிகளுக்கு இலங்கை ஜனாதிபதியினால் விசேட பகல் போசன விருந்துபசாரம் வழங்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 14ம் திகதி பல்வேறு மட்ட சந்திப்புக்களும் கூட்டங்களும் இடம்பெறவுள்ளன. இதேவேளை பொதுநலவாய மக்கள் மன்றத்தின் மாநாடு அன்றைய தினம் மாலை 5.00 மணிக்கு காலி கோட்டையிலுள்ள நீதிமன்ற சதுக்கத்தில் ஆரம்பமாகி இரவு 7.00 மணிக்கு நிறைவடையவுள்ளது.
இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் இலங்கை மற்றும் வெளிநாடுகளின் சிவில் சமூகத்தின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொள்ளவுள்ளதுடன் பொதுநலவாய நாடுகளில் வாழும் சிவில் சமூகத்தினர் எதிர்கொள்ளும் விடயங்கள் தொடர்பாக இந்த மாநாட்டின் போது ஆராயவுள்ளனர். இந்த மாநாட்டின் ஆரம்ப நாளின் இறுதியாக பொதுநலவாய நாடுகளின் மக்கள் மன்ற பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் விசேட இரவு நேர இராபோசன விருந்து வழங்கப்படவுள்ளது.
பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு கட்டுநாயக்க விமான நிலையம் தொடக்கம் கொழும்பு, ஹம்பாந்தோட்டை, ஹிக்கடுவை மற்றும் காலி வரையிலான பிரதேச எங்கும் அலங்கரிக்கப்பட்டு விழா கோலம் பூண்டுள்ளது.
இளைஞர் மாநாடு
இதேவேளை பொதுநலவாய இளைஞர் மாநாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ருகுனுபுர சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகிறது. இதில் 53 நாடுகளைச் சேர்ந்த 106 பிரதிநிதிகளும் 20 கண்காணிப்பாளர்களும் 5 செயலணி உறுப்பினர்களும் பங்கேற்கின்றனர். இலங்கையிலிருந்து 25 பிரதிநிதிகளும் 20 கண்காணிப்பாளர்களும் 5 செயலணிக் குழு உறுப்பினர்களும் பங்குபற்றவுள்ளனர்.
8 முக்கிய தலைப்புகள் தொடர்பில் இங்கு ஆராயப்படவுள்ளதோடு இலங்கை அரச தலைவர்களுக்கும் இளைஞர் தலைவர்களுக்குமிடையிலான சந்திப்பும் இடம்பெறவுள்ளது. பொதுநலவாய வர்த்தக மாநாடு 12 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெறுகிறது. இதில் 60 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 1300 முக்கிய வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் பங்கேற்கும் முதலீட்டாளர்கள் இலங்கை வர ஆரம்பித்துள்ளனர்.
15ம் திகதி கொழும்பில் கோலாகலமாக நடைபெறவுள்ள அரச தலைவர்களின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு 14ம் திகதி தொடக்கம் அரச தலைவர்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். இதனை முன்னிட்டு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் தொடக்கம் அரச தலைவர்கள் கொழும்பில் தங்கியிருக்கவுள்ள ஹோட்டல்கள் வரை விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
விசேட பாதுகாப்பு கடமைகளில் மாத்திரம் சுமார் 20,000 பொலிஸார் மேலதிகமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவற்றில் இலங்கை வரும் அரச தலைவர்கள் மற்றும் பிரமுகர்களின் தங்கு தடையின்றிய பயணத்தை கவனத்திற் கொண்டு மாத்திரம் 5000 போக்குவரத்து பிரிவு பொலிஸார் போக்குவரத்து கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.