நோர்வே பிரஜையும் கவிஞரும்,பிரபல நடிகருமான ஜெயபாலன் இன்று இரவு குடிவரவு குடியகல்வு அதிகாரிகளினால் அவரது சொந்த நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டார்
வீஸா விதிமுறைகளை மீறியமை தொடர்பான அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து இன்று இரவு 9.20 மணிக்கு துருக்கி ஊடாக அவர் நோர்வேக்கு நடு கடத்தப் பட்டதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா கேசரியிடம் தெரிவித்தார்.
' TK731 Turkis ' என்ற விமானம் மூலம் அவர் துருக்கி நோக்கி அனுப்பப்பட்டதுடன் அங்கிருந்து நோர்வேக்கு திருப்பியனுப்பப்பட்டார்
தமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்து சுற்றுலா விஸா விதிமுறைகளை மீறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த வெள்ளியன்று ஜெயபாலன் வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு குடிவரவு குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
வவுனியா, மாங்குளம் பகுதியில் தனது தாயாரின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்த முற்பட்ட போதே அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
இதனை அடுத்து கடந்த சனிக்கிழமை முதல் மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்ட ஜெயபாலன் குடிவரவு குடியகல்வு அதிகாரிகரினால் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அந்த விசாரணைகளில் ஜெயபாலன் வீஸா விதிமுறைகளை மீறியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா சுட்டிக்காட்டியதுடன், அதனை அடுத்தே அவரை திருப்பியனுப்பியதாகவும் குறிப்பிட்டார்.
முன்னதாக, ஜெயபாலனை ஞாயிரன்று நோர்வே தூதரக அதிகாரிகளும் சந்தித்திருந்தனர்.இன்னிலையிலேயே திருப்பியனுப்பல் இடம்பெற்றுள்ளது.
கவிஞர்,எழுத்தாலரான ஜெயபாலன் நோர்வே குடியுரிமைக் கொண்டவர் என்பதுடன் தென்னிந்திய திரையுலகில் சில திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ப்லராலும் அறியப்படுபவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.