சர்வதேச சமூகத்திடம் சீனா வேண்டுகோள்
மனித உரிமைகளை முன்னேற் றுவதிலும் நாட்டை கட்டியெழு ப்புவதிலும் முன்னேற்றத்தை காட்டுகின்ற இலங்கைக்கு எதிராக பல்வேறு குற்றச் சாட்டுக்களை முன்வைத்து நாட்டுக்குள் குழப்ப நிலைமையை ஏற்படுத்துவதற்கு காரணமாகின்ற நடவடிக்கைகளை பொருட்படுத்த வேண்டாம் என சீனா சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுத் துள்ளது.
நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு உரிய சூழ்நிலையை கட்டியெழுப்புவதற்கு கைகொடுப்பதே சிறந்ததென சுட்டிக்காட்டுகின்ற சீனா, மனித உரிமைகளை முன்னேற்றுவதிலும் நாட்டை கட்டியெழுப்புவதிலும் அதே போன்று சகல துறைகளிலும் முன்னேற்றத்தை காட்டுகின்ற இலங்கைக்கு மேலும் ஒத்துழைப்பு வழங்குவதாக சீனா மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளது. மனித உரிமைகளை பேணவும் நாட்டை கட்டியெழுப்பவும் இலங்கை கடந்த காலங்களில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இது குறித்து தொடர்ந்து நடவடிக்கை எடுத்துவரும் இலங்கை அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் வலிமையும் ஆற்றலும் உள்ளன எனவும் சீனா நம்பிக்கை கொண்டுள்ளது.
இலங்கையில் மனித உரிமைகளை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சீன வெளிநாட்டமைச்சு விடுத்ததாக கூறப்படும் உரை மற்றும் பொதுநலவாய மாநாட்டின் போது இலங்கை மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் திகதி நிர்ணயித்து பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூன் கூறிய கூற்று தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள சீனா, இவ்வாறு தெரிவித்துள்ளதாக இலங்கையிலுள்ள சீன தூதுவர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படும் யுத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன் விசாரணை செய்வதற்கு நம்பிக்கையான பொறிமுறையொன்றை (இயந்திரமொன்றை) ஏற்படுத்த வேண்டும் என டேவிட் கெமரூன் தெரிவித்தார். அவ்வாறு செய்யாவிடின் சர்வதேச விசாரணையொன்றை நடத்துமாறு சர்வதேசத்திடம் வேண்டுகோள் விடுப்பதாக அவர் கூறியிருந்தார்.
எவ்வாறாயினும் இலங்கை தொடர்பில் சீனாவின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என இலங்கையில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. சீன வெளிநாட்டமைச்சின் கூற்றை அநேகமான ஊடகங்கள் திரிபுபடுத்தி உள்ளதாகவும் இலங்கையிலுள்ள சீன தூதரகம் அறிவித்துள்ளது.