பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்கு வருகைதந்திருந்த இளவரசர் சார்ள்ஸ் 16 ஆம் திகதி சனிக்கிழமை நுவரெலியாவுக்கு விஜயம் செய்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டதுடன் லபுக்கலை தேயிலை தொழிற்சாலையையும் சார்ள்ஸ் பார்வையிட்டதுடன் அந்த தொழிற்சாலையில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத் தையும் திறந்து வைத்தார்.
இந்த தோட்டத்திற்கு பிரித்தானிய மகாராணி 1954 ஆம் விஜயம் செய்திருந்தார். நுவரெலியாவில் அமைந்துள்ள விசேட தேவையுடையவர்களுக்கான பாடசாலைக்கும் சென்றுள்ள சார்ள்ஸ் அந்த சிறுவர்களுடன் சிறிது நேரம் செலவு செய்ததுடன் இளவரசர் சார்ள்ஸ் மற்றும் அவரது மனைவி இளவரசி கமிலா ஆகியோர் லபுக்கலை அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தை பார்வையிட்டார்.
இந்த வார ஆரம்பத்தில் நிகழ்ந்த இளவரசரின் 65 வது பிறந்த நாளை முன்னிட்டு மேக்வூட் எஸ்டேட்டில் கேக் வெட்டி மகிழ்ந்தார்.
சார்ள்ஸின் வருகையை முன்னிட்டு அகலவத்த பெருந்தோட்ட கம்பனி லபுக்கலை தோட்டத்தில் பாரிய அளவிலான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செய்து வந்தது.
கடந்த சில நாட்களாக விசேட உலங்கு வானூர்தி பரீட்சார்த்தகரமாக தரையிறக்கப்பட்டு முன்னேற்பாடுகள் செய்யப்பட்திருந்தன. இத் தோட்டத்தில் அமைந்துள்ள பல குடியிருப்புகளின் கூரைகளுக்கு வர்ணம் பூசப்பட்டுள்ளதோடு தோட்டத்தில் சூழுவுள்ள பல இடங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு அழகுமயப்படுத்தப்பட்டிருந்தது.
இளவரசர் வருகிறார் என்றவுடன் லபுகலை தோட்டம் பல கோடி ரூபாய் செலவில் தயார் செய்யப்பட்டது.
1841ஆம் ஆண்டு இலங்கையில் மெக்வூட்ஸ் என்பவரால் முதலில் தேயிலை தயாரிக்கப்பட்ட இடமான இந்த இடத்துக்கு இளவரசர் சார்ல்ஸ் விஜயம் செய்தது என்னவோ தனது முன்னைய சாம்ராஜ்ய நினைவுகளுடன் கூடிய சாதாரண நினைவாக வேண்டுமென்றால் இருக்கலாம்.
ஆனால் ஏறத்தாழ 190 வருடங்காளாக கொத்தடிமைகளாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட எம் மக்களுக்கு அவரது விஜயம் வெறும் செங்கம்பளம் விரித்து வரவேற்க்கக் கூடியதொன்றல்ல. இந்த விஜயம் கரை படிந்த பக்கங்களை திருப்பிப் பார்க்கும் தருணமே இது.
ஆண்டானை வரவேற்கும் அடிமை கூட்டமல்ல இனியும் நாங்கள் என்பது அவருக்கு விளங்கியிருக்காது.
பிரிட்டன் இளவரசர் சார்ள்ஸ் நுவரெலியாவில் தேயிலை தோட்டத்தை பார்வையிட சென்றபோது, அவருக்கு எம் மக்களை ஏதோ நிம்மதியாகவும் வசதியாகவும் வாழ வைக்கப்பட்ட கூட்டமாகவே காட்டுவதற்காக தோட்ட நிர்வாகம் ரொம்ப தான் பிரயத்தனப்பட்டது.
தொழிலாளர்களை புத்தாடை அணிந்து வேலைக்கு வருமாறு உத்தரவிட்டிருந்தது நிர்வாகம். அத்துடன், அன்றைய தினம் சலுகைகள் சிலவும் அள்ளி வீசப்பட்டுள்ளன. இதை பார்த்த இளவரசர் பிரமித்துப் போனாராம்.
நம் தொழிலார்களின் அவல நிலையை எடுத்துக்கூற ஆங்கிலம் எங்கிருந்து வரும். அவர்கள் அருகில் மொழிபெயர்ப்புக்கு அனுப்பட்ட மொழிபெயர்ப்பாளர்கள் அதனை செய்வார்கள் என்கிறீர்களா... அவர்கள் என்ன தொழிலாளர்களின் நலன்விரும்பிகளா... நிர்வாகிகளின் விசுவாசிகள் தானே.
எம்மக்களின் தொடர் அவலநிலைக்கு தார்மீக பொறுப்பை ஏற்க வேண்டிய பிரித்தானிய அரசு என்றும், இன்றும் கரிசனை கொண்டதில்லையே இன்று மட்டும் அக்கறைகொள்ள என்ன வழியிருக்கிறது? அதை எடுத்து சொல்லத்தான் எங்கு நமக்கொரு அரசியல் தலைமை.
வந்தார்கள், வென்றார்கள், சென்றார்கள். இன்று மீளவும் தமது காலனித்துவ எச்சங்களை, காலனித்துவ பெருமிதத்தோடு கண்டுகளிக்க வந்தவரிடம் நாம் எதனை தான் எதிபார்க்க இயலும்.