11/17/2013

| |

53 நாடுகளின் பொதுநலவாய அமைப்பிற்கு தலைவரானார் ஜனாதிபதி மஹிந்த


பொதுநலவாயஅரச தலைவர்களின் உச்சி மாநாடு இன்று பிற்பகல் நடைபெறும் செய்தியாளர் மாநாட்டுடன் நிறைவடைகிறது. பொதுநலவாய அமைப்பிற்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளார். பொதுநலவாய அமைப்பின் மாநாட்டை மிகக் கோலாகலமாக நடத்தியமைக்கு உலகத் தலைவர்கள் ஜனாதிபதிக்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.
இலங்கை பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் மீண்டெழுந்த ஒரு நாடு. ஆனால் சமாதானத்துடன் சுதந்திரமும் அதிக சுபீட்சமும் இங்கு தோன்றியுள்ளது. நாங்கள் அதனைப் பாராட்டவே இங்கு வந்துள்ளோமே தவிர தீர்ப்பு கூறுவதற்காக அல்ல என்று அவுஸ்தி ரேலிய பிரதமர் ரோனி அபோட் தெரிவித்தார். பொதுநலவாய மாநாட்டை நடத்த முன்வந்ததன் மூலம் இலங்கை ஜனநாயக பன்முகத்தன்மை மற்றும் சட்டத்தை அடிப்படையாகக்கொண்ட சுதந்திரம் என்பவை தொடர்பான தனது அர்ப்பணிப்பை வெளிக்காட் டியுள்ளது. அத்துடன் அதன் பிரஜைகளுக்கு “நேற்றைய தினத்தைவிட இன்றும் இன்றைய தினத்தைவிட நாளையும் சிறப்பாக இருக்கும்” என்பதை மீள உறுதிசெய்துள்ளது என்றும் ரோனி அபோட் தெரிவித்தார்.
பொது நலன்கள் பற்றிப் பேசுவதற்கு முன்னர் பொது வறுமையைப் பற்றிப் பேசக்கூடாதா என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த மாநாட்டில் கேள்வி எழுப்பினார்.
அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக பொதுநலவாய நாடுகள் கூட்டாக செயற்பட்டு பொருளாதார நன்மைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடாதா எனவும் அவர் கேள்வி எழுப்பினார். அரசியல் இலக்குகளைவிட அடிப்படை வசதிகள், சுகாதார பராமரிப்பு, கல்வி, உற்பத்தித்திறன்மிக்க தொழில் வாய்ப்பு, உணவு மற்றும் பாதுகாப்பான குடிநீர் வழங்குதல், வறுமை மற்றும் பசி என்பவை குறைந்த முக்கியத்துவம் வாய்ந்தவையா எனவும் ஜனாதிபதி பொதுநலவாயத் தலைவர்களிடம் வினவினார்.
கொழும்பு மஹிந்த ராஜபக்ஷ தாமரைத்தடாக அரங்கில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் உச்சிமாநாட்டின் ஆரம்ப வைபவத்தில் ஜனாதிபதி உரையாற் றினார்.
பொதுநலவாய அரச தலைவர்களின் உச்சி மாநாடு நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் கொழும்பு தாமரைத்தடாக மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் கோலாகலமாக ஆரம்பமானது. இந்த மாநாட்டை தமது தாயாரான இரண்டாம் எலிசபெத் மகாராணியின் சார்பில் முதற்தடவையாக இளவரசர் சார்ள்ஸ் ஆரம்பித்து வைத்தார். 53 நாடுகளைக் கொண்ட இந்தப் பொதுநலவாய அரச தலைவர்கள் உச்சி மாநாட்டில் இம்முறை இந்தியா, கனடா, மொறிசியஸ் ஆகிய நாடுகளின் பிரதமர்கள் பங்குபற்றமுடியவில்லை என அறிவித்திருந்தனர். இந்தியப்பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் சார்பில் வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்துகொண்டார். கனேடியப் பிரதமர் ஸ்ரீபன் ஹாப்பரின் சார்பில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் தீபக் ஒபராய் கலந்துகொண்டார். மொறிசியஸ் பிரதமர் ராம் குலம் சார்பில் வெளிவிவகார அமைச்சரும் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சருமான கலாநிதி அர்வின் புளேல் கலந்துகொண்டார்.
தாமரைத் தடாக அரங்கிற்குக் காலை 8.30 முதல் அரச தலைவர்கள் வருகைதர ஆரம்பித்தனர். வாகனப் பேரணியாக வந்தவர்களை முதலில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க வரவேற்றார், ஜனாதிபதி, பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா ஆகியோர் தத்தமது பாரியார் சகிதமும் அரச தலைவர்களை வரவேற்றனர். இவர்களுடன் பதவி விலகிச் செல்லும் தலைவர் என்ற வகையில் அவுஸ்திரேலிய பிரதமர் ரோனி அபோட் இணைந்துகொண்டு அரச தலைவர்களை வரவேற்றார். தலைவர்களின் வருகையின்போது அவர்கள் இலங்கையின் கலாசாரப் பண்பாடுகளுக்கு ஏற்ப வரவேற்கப்பட்டனர். ஆரம்ப வைபவத்தில் இம்முறை அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா, தலைமைப் பதவியில் இருந்து விலகிச்செல்லும் அவுஸ்திரேலிய பிரதமர் ரோனி அபோட், இளவரசர் சார்ள்ஸ் ஆகியோர் உரையாற்றினர்.
அங்கு தொடர்ந்து உரை நிகழ்த்திய ஜனாதிபதி, “இலங்கைக்கும் ஆசியாவுக்கும் வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த இந்த மாநாடு 24 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தப் பிராந்தியத்திற்கு மீண்டும் வந்துள்ளது. நவீன பொதுநலவாய அமைப்பின் எட்டு ஸ்தாபக அங்கத்துவ நாடுகளில் ஒன்றான இலங்கை இம்மாநாட்டை நடத்துவது தொடர்பாக பெருமிதமடை கிறது.
அத்துடன் முரண்பாட்டுக் காலத்திற்குப் பிந்திய இலங்கையின் சிக்கலான சூழ்நிலையைப் புரிந்துகொண்டதுடன் எமக்கு ஆதரவு அளித்து வருவதற்காக உறுப்பு நாடுகளுக்கு நன்றி” எனவும் குறிப்பிட்டார்.
மற்றவர்களின் தவறுகளைக் கண்டு கொள்ளாமல் இருப்பதுடன் அவர்கள் எதைச் செய்தார்கள் அல்லது எதைச் செய்யவில்லை என்பதை ஆராய்ந்து கொண்டிருக்காமல் ஒருவர் என்ன செய்தார் எதைச் செய்யாமல் விட்டுச்சென்றார் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என புத்த பகவான் புகட்டியதையும் அவர் அங்கு நினைவுகூர்ந்தார்.