11/30/2013

| |

வந்தாறுமூலையில் கொம்புமுறிப்பு விழா



(மட்டு செய்தியாளர்)

மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மழைவேண்டி கொம்பு முறித்தல் விழா சிறப்பாக இடம்பெற்றது. கடந்த இரு வாரங்களாக கலாச்சார நிகழ்வுகளுடன் இடம்பெற்று வந்த இவ் விழாவானது வடசேரி, தென்சேரி என்று ஊர்மக்கள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து நின்று கொம்பு முறித்தல் விழாவில் ஈடுபட்டனர். இதன்போது பெரும் திராளான மக்கள் கூடி நின்று வழிபாட்டில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெரும்போக வேளான்மைச் செய்கை இடம்பெற்று வருகிறது. பருவகால மழை வீழ்ச்சி இல்லாது வரட்சி நிலவுவதால் வேளான்மை செய்கையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்க்கவே மழை வேண்டி தங்களது குலதெய்வங்களை பிரார்த்தனை செய்தும் நேர்த்திக்கடன் மற்றும் இந்து மத கலாச்சார ரீதியிலான பாரம்பரிய கொம்பு முறி;த்தல் விழாக்கள் இப்பகுதி ஆலயங்களில் இடம்பெற்று வருகின்றமை குறிக்கப்பிடத்தக்கது.








»»  (மேலும்)

11/29/2013

| |

விக்கியின் சர்வாதிகாரத்துக்கு எதிராக சீறும் பெண் புலி!

வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் ஒரு சர்வதிகாரி, வட மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுடன் இணங்கி வேலை செய்யாமல் சர்வாதிகாரத்துடன் நடக்கின்றார் என்று தெரிவித்து உள்ளார் இம்மாகாண சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களில் ஒருவரான அனந்தி சசிதரன்.
வட மாகாண மக்களால் போருக்கு பின்னர் வட மாகாண சபை உறுப்பினர்களை தெரிவு செய்ய முடிந்தது, ஆனால் வட மாகாண சபையில் இருந்து சேவைகளை பெறுகின்ற உரிமையை இழந்து விட்டார்கள் என்று தெரிவித்து உள்ள அனந்தி இதற்கு பிரதான காரணம் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் சர்வதிகார போக்கு என்று சுட்டிக் காட்டி உள்ளார்.
மாகாண சபை அமைச்சர்களுக்கு கொடுக்கப்பட்ட அலுவலகங்களுக்குக்கூட வசதிகள் கிடையாது, செயலாளர்கள் நிலைமையை நன்கு அறிவார்கள், ஆனால் முதலமைச்சரின் அனுமதியை பெறாமல் எதையும் செய்ய முடியாமல் உள்ளது என்று கூறி உள்ளார்.
»»  (மேலும்)

| |

பிக்குவின் செயற்பாட்டை கண்டித்து 14 பிரதேச செயலகங்களில் ஆர்ப்பாட்டம்

பௌத்த தேரரின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகங்களிலும் பகிஸ்கரிப்பும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு - மண்முனை தென்மேற்கு - பட்டிப்பளை பிரதேச செயலகம் உள்ளிட்ட 14 பிரதேச செயலகங்களிலும் பகல் 12.05க்கு வேலைப்பகிஸ்கரிப்பும் ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டுகொண்டிருக்கின்றது.
மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் பட்டிப்பளை பிரதேச செயலகத்தினுள் நேற்று பதன்கிழமை புகுந்து வன்முறையில் ஈடுபட்டமைக்கும், பிரதேச செயலாளரை தகாத வார்த்தைகளினால் ஏசியமை, தவறான தகவல்களை வெளியிட்டமை உள்ளிட்ட செயற்பாடுகளை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இதே நேரம், நேற்றைய தினம் பகல் முதல் பட்டிப்பளை பிரதேச செயலகம் இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டிப்பளை பிரதேச செயலக ஆர்ப்பாட்ட புகைப்படங்கள்
»»  (மேலும்)

11/28/2013

| |

சீன வான் பாதுகாப்பு வலயத்தை மீறி அமெ. யுத்த விமானம் பயணம்

பிராந்தியத்தில் பதற்றம் அதிகரிப்பு
சீனா புதிதாக பிரகடனப்படுத்திய வான் பாதுகாப்பு வலயத்தை மீறி இரு அமெரிக்க யுத்த விமானங்கள் பறந்துள்ளன. இவ்வாறு பறந்த பி - 52 ரக விமானங்கள் கண்காணிக்கப்பட்டதாக சீன பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
ஜப்பான் நாடும் உரிமை கொண்டாடும் கிழக்கு சீன கடற்பகுதியில் இருக்கும் சர்ச்சைக்குரிய தீவுகளையும் உள்ளடக்கியதாக சீனா புதிய வான் பாதுகாப்பு வலயத்தை பிரகடனம் செய்தது. ஆனால் அமெரிக்க யுத்த விமானங்கள் எந்த முன்னறிவிப்பும் இன்றி நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இந்த பாதுகாப்பு வலயத்தினூடாக அத்துமீறி பறந்தது.
எனினும் சீனாவின் வான் வலயத்திற்கு அமெரிக்கா மற்றும் ஜப்பான் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது. சீனா ஒருதலைப்பட்சமாக நிலையை மாற்ற முயற்சிப்பதாகவும் பிராந்தியத்தில் பதற்றத்தை தீவிரப்படுத்துவதாகவும் இந்த இரு நாடுகள் குற்றம்சாட்டின. இதில் ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருக்கும் தீவுகளையும் உள்ளடக்கியதாகவே சீனா கடந்த சனிக்கிழமை பிரகடனம் செய்த வான் பாதுகாப்பு வலயம் அமைந்துள்ளது.
ஜப்பான் சென்ககு என்றும் சீன டியாயு என்று அழைக்கும் இந்த தீவுகளால் கடந்த பல மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் தீவிரமடைந்துள்ளது. சீனாவின் வான் பாதுகாப்பு வலையம் ‘செல்லாதது’ என்று அறிவித்த ஜப்பான் அதனை கடைபிடிக்கத் தேவையில்லை என்று தனது விமானங்களுக்கு செவ்வாய்க்கிழமை அறிவுரை வழங்கியது. இந்த வலயத்தினூடாக பறப்பதில் எந்தப் பிரச்சினையையும் சந்திக்கவில்லை என்றும் ஜப்பான் குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் வழமையான பயிற்சி நடவடிக்கையாக அமெரிக்காவின் ஆயுதம் தரிக்காத விமானம் குவாமில் இருந்து பறந்ததாக அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த யுத்த விமானங்கள் வழமையான பயணப்பாதையில் சென்றதாகவும் சீனாவினூடாகப் பறக்கத் திட்டமிடப்படவில்லை என்றும் பெண்டகன் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த வான் பாதுகாப்பு வலயத்தினூடாக பறக்கும் விமானங்கள் அதற்கு கட்டுப்பட்டே பறக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அவசர பாதுகாப்பு நடவடிக்கைக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் என்று சீனா எச்சரித்திருந்தது.
எவ்வாறாயினும் பாதுகாப்பு வலயத் தினூடாக பறந்த அமெரிக்க யுத்த விமானங்கள் மீது சீனா எந்த அவசர நடவடிக்கையையும் எடுத்ததாக அது நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. சீன பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், “சீன விமானப்படை குறிப்பிட்ட அமெரிக்க விமானம் ஒரு குறித்த காலத்தில் பயணித்ததை அவதானித்தது.
கிழக்கு சீனா கடற்பகுதியின் வான் பாதுகாப்பு வலயத்தினுடாக பறக்கும் அனைத்து விமானங்களையும் சீன கண்காணிக்கும். இந்த வான்மண்டலத்தை கட்டுப்படுத்தும் திறன் சீனாவுக்கு இருக்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க யுத்த விமானங்கள் அத்துமீறி நுழைந்ததன் மூலம் சீனாவின் பாதுகாப்பு மண்டலத்தை ஏற்கவில்லை என்ற தெளிவான சமிக்ஞையை அமெரிக்கா விடுத்துள்ளது.
மறுபுறத்தில் பிராந்தியத்தில் பாதுகாப்பு செயற்பாடுகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள சூழலிலேயே இந்த பதற்றம் வெடித்துள்ளது. ஜப்பான் பாராளுமன்றம் நேற்று நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களில் பிரதமருக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஒன்றை நிறுவியது. அதேபோன்று சீனாவின் லியோனிங் விமானந்தாங்கி கப்பல் தென் சீன கடலை நோக்கி பயணித்தது.
»»  (மேலும்)

| |

சுவிஸ் உதயம் நாட்டில் உறவுகளுக்கு உதவிடும் விழா

சுவிஸ் உதயம் அமைப்பின் வருடாந்த  நாட்டில் உறவுகளுக்கு உதவிடும் விழா இம்முறையும் மிகச்சிறப்பாக சூரிச்மாநகரில்   நடைபெற்றது
26.12.2004 வருட இறுதியில் அதாவது கடந்த 9 வருடங்களுக்கு முன்னர் இலங்கை யில்  சுனாமி பெரும் தாக்கதை ஏற்படுத்தியதை நாம் அறிவோம்
அந்த பேரழிவால் பாதிக்கப்பட்டு தாய் தந்தை இழந்து உறவுகளை தொலைத்து ஆதரவின்றி தவித்த   சிறுவர் சிறுமியர்களுக்கு தங்களால் இயன்ற ஆதரவினை வழங்குவதற்கொன சுவிஸ் நாட்டில் வாசித்து வரும் கிழக்குமாகாண மக்கள் கடந்த 2004 இறுதியில்  உதயம் எனும் மக்களுக்கு உதவிடும் அமைப்பினை ஆரம்பித்தனர் .
மக்களின் மத்தியில் மிககுறுகிய காலப்பகுதியிலே பேராதரவுதனை பெற்ற உதயம் அமைப்பு கடந்த 9 வருடங்களாக  உறவுகளுக்கு உதவிடும் உதயம் விழாவினை  நடாத்தி வருகின்றது
கலைகலாசார நிகழ்வுகள் சிறுவர் சிறுமிகளின்  நடனங்கள் சிறப்பு விருந்தினர்களின் வருகை  உள்ளிட்ட பல கலை நிகழ்வுகளை நடாத்தி மக்களின் அனுசரனையுடன்  இலங்கையில்  இன்னல்களில்  வாழும் மக்களுக்கு தன்னால்  இயன்ற உவிகளை புரிந்து வரும் உதயம் அமைப்பினர் இவ்வருடமும் கலை நிகழ்வினை சுவிஸ் நாட்டில் சூரிச்மாநகரில் 24.11.13 அன்று வெகு சிறப்பாக நடாத்தினர்
உறவுகளுக்கு உதவிடும் உதயம்   விழா திருமதி ஜெயந்திமாலா குணசீலன் நிகழ்ச்சித் தொகுப்பு  வழங்களில் விழா 13.00 மணியளவில் வெகு சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது..
 உதயம் அமைப்பின் தலைவர்  தேவசகாயம்  செயளாலர்  குணசீலன்  பொருளாளர்  துரைநாயகம்  மற்றும் ஆதரவாளர்களின் குத்துவிளக்கு  ஏற்றிவைத்தனர்   தொடரும் விழாவாக முத்தமிழ் வித்தகன் 'சுவாமி விபுலானந்தர்' சுவாமி  அடிகளாரின்
வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ
வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது.
என்ற பாடலுடன் கலைகாலாசார நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது.
விழாவின் கலைநிகழ்சிகளாக கவிதை களம்;. சிறுவர் சிறுமியர் அபிநய நடனம். பரதநாட்டியம்.கரோக்கி இசை நிகழ்வு.பெரியோர் அபிநய நடனம். மதிய உணவு. கேள்வி பதில் போட்டி நிகழ்வு. குறும்படம் (தமிழ் இனி ) நாடகம் என்னும் பல்வேறு  சுவையான நகைச்சுவை நிகழ்வுகள். விமான பயணசீட்டுகள் ஏலம். வெல்வது யார்?உதயம் அமைப்பினரின் அதிஸ்டசாலி  யார் ? போன்ற பல நிகழ்வுகள் இடம்பெற்  கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்குபற்றி சிறப்பித்த கலைஞர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டது
அத்துடன் மீன்மகள் பாடுகிறாள் வவிமகள் ஆடுகிறாள் மட்டுநகர் அழகான வீதியம்மா என்ற இனிய கானத்தின் மக்கள் நடனத்துடன் உதயம் விழா மிகமிக இனிதே நிறைவு பெற்றது.
மக்கள் அதிகளவில் தங்கள் ஆதரவினை தெரிவித்தனர் புதிதாக பல குடும்பங்கள் உதயம் அமைப்பினில் தங்களை அங்கத்தினராக இணைந்ததையும் செயலாளர் தெரிவித்தார்
»»  (மேலும்)

| |

ஆக குளோபல் தமிழ் குருபரனின் புலனாய்வு செய்திகள் வெறும் டூப்புத்தான்

"கவிஞர் ஜெயபாலன் கடத்தப்பட்டு பின்னர் கைதானதாக அறிவிக்கப்பட்டது"என்று வெளியான  குளோபல் தமிழ் குருபரனின் புலனாய்வு செய்திகள் வெறும்  டூப்புத்தான்  என்று உறுதியாகியுள்ளது.ஜெயபாலன் தனது தாயின் சமாதியை பார்க்க அனுமதிக்கப்பட்டு கெளரவமாக அழைத்து செல்லப்பட்டுள்ளார்.இதனை விடுதலையான கவிஞரே பி .பி .சிக்கான நேர்காணலில் ஒப்புக்கொண்டுள்ளார். தனக்கு வேண்டியவர்களுக்கு அறிவிக்கவும் ,தொலைபேசியை பயன்படுத்தவும் அனுமதிக்கும் கடத்தல்காரர்கள் . நல்லாத்தான்  கோமாளித்தனம் பண்ணுகிறார் முன்னால் புளட் குருபரன். 
»»  (மேலும்)

11/27/2013

| |

விகிதாசார முறையினால் நேபாளத்தில் பிரதமர் இல்லை

ஐந்து மாதங்களுக்கு மேலாக நேபாளத்தில் பிரதமர் இல்லை. பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கு ஆறு தடவைகள் வாக்கெடுப்பு நடத்தியும் ஒருவரைத் தேர்ந்தெடுக்க முடியவில்லை.
மக்கள் கிளர்ச்சியின் மூலம் மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த பின் அங்கு இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான தேர்தல் 2008 ஆம் ஆண்டு நடைபெற்றது. மொத்தம் 601 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூடுதலான ஆசனங்களைக் கைப்பற்றிய மாவோயிஸ்டுகள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றனர்.
இரண்டு வருட காலத்தில் புதிய அரசியலமைப்பைத் தயாரித்து நடைமுறைப்படுத்துவதற்காகவே இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது. பிரதமராகப் பொறுப்பேற்ற மாவோயிஸத் தலைவர் பிரசண்ட ஆளுநருடனான முரண்பாடு காரணமாகப் பதவி விலகியதும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் மாதவ் குமார் நேபால் பிரதமராகப் பொறுப்பேற்றார். கடந்த மே மாதத்துடன் இடைக்கால அரசாங்கத்தின் இரண்டு வருட காலம் முடிவுக்கு வந்தது. அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான தொடக்க வேலை கூட ஆரம்பிக்கப்பட வில்லை. இந்த நிலையில் பிரதமர் நேபால் பதவியை இராஜினாமா செய்ய, இடைக்கால அரசாங்கத்தின் பதவிக் காலத்தை மேலும் ஒரு வருடத்தால் நீடிப்பதற்கு எல்லாக் கட்சிகளும் சம்மதம் தெரிவித்தன.
இந்த ஒரு வருட காலத்துக்குள் அரசியலமைப்பைத் தயாரித்து நடைமுறைப்படுத்த வேண்டும். பிரதமர் ஒருவரைத் தெரிவு செய்த பின்னரே அது சாத்தியமாகும். மே மாதத்திலிருந்து பிரதமரைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்புகள் இடம்பெற்ற போதிலும் ஒருவராவது பிரதமராகுவதற்குத் தேவையான 301 வாக்குகளைப் பெறவில்லை. ஐந்து மாதங்களுக்கு மேலாகப் பிரதமர் இல்லை. ஆளுநரே பிரதமரின் கடமைகளைப் புரிகின்றார்.
இந்த நிலை ஏற்படுவதற்கு என்ன காரணம்?
நேபாளத்தில் நடைமுறையில் இருப்பது விகிதாசாரத் தேர்தல் முறை. அளிக்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் பார்க்கையில், தொகுதிவாரித் தேர்தல் முறை நடைமுறையில் இருந்திருக்குமேயானால் மாவோயிஸ்டுகளுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைத்திருக்கும். விகிதாசாரத் தேர்தல் முறை காரணமாக எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எந்தக் கட்சியும் மற்றைய கட்சிக்காரர் பிரதமராகுவதை விரும்பவில்லை. நேபாளத்தின் அரசியல் நெருக்கடிக்கு விகிதாசாரத் தேர்தல் முறையே காரணம்.
நீடிக்கப்பட்ட ஒரு வருட காலத்தில் அரைவாசிப் பகுதி கழிந்துவிட்டது. இன்னும் பிரதமரைத் தெரிவு செய்யாத நிலையில் குறிப்பிட்ட காலத்துக்குள் அரசியலமைப்பு தயாரிக்கப்படுவது சந்தேகமே. இந்த நெருக்கடிக்கு உரிய காலத்துக்குள் தீர்வு காணப்படாவிட்டால் மீண்டும் முடியாட்சிக்குப் போகும் நிலை ஏற்படுமா என்ற கேள்வி எழுகின்றது.
»»  (மேலும்)

| |

கே.எஸ். சிவகுமாரன் பார்வையில் இலக்கியச் சுவை கொட்டும் அனாரின் கவிதைகள்...

Photo : Anar (Issath Rehana Azeem), Tamil poet from Sri Lanka: http://thne.ws/1aPNYhH #LFL2014 #chennaiசாந்தமருதுவைச் சேர்ந்த இஸ்ஸத் ரீஹானா முஹம்மட் அkமை உங்களுக்குத் தெரியாமலிருக்கலாம். ஆனால் வித்தியாசமாக இலக்கியம் சமைப்பவர்களும், இரசிப்பவர்களும் அனார் என்ற பெண்ணையும் அவரின் கவிதையாற்றல்களையும் அறிந்திருப்பர். இரு பெயர்களும் ஒருவரையே குறிக்கும்.
பல விருதுகளைப் பெற்றுள்ள இவருடைய கவிதை நூல்கள் ஓவியம் வரையாத தூரிகை, எனக்குக் கவிதை முகம், உடல் பச்சை வானம் என்பனவாகும் தமிழ்நாடு நாகர்கோவிலில் இருந்து வெளியாகும் காலச்சுவடு என்ற இலக்கிய ஏட்டினர் மூன்றாவது நூலை வெளியிட்டுள்ளனர்.
இந்நூலில் இடம்பெற்ற கவிதைகளில்,
“இயற்கை பெண்ணுடலாகிறது.
இயற்கை பெண்ணாகிறது” என்று சுகுமாரன்
எழுதிய கூற்று பின்னட்டையில், கவிஞரின் நிழற் படத்துடன் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள பொதுவாசகர்கள் அனாரை அதிகம் அறிந்திருக்காவிட்டால்
அதற்குக் காரணம், அவருடைய கவிதைகள் அதிகமாக பிறநாடுகளின் தமிழ் ஏடுகளில் வெளிவந்தமையாய் இருக்கக்கூடும். கடந்த மூன்றாடுகளில் அனார் எழுதிய 34 கவிதைகள் இந்நூலிலே சேர்க்கப்பட்டுள்ளன.
‘புதுக்கவிதை’ என்ற பெயரிலே கேள்வி சார்ந்த வசனங்களையும், அரசியல் சார்ந்த சுலோகங்களையும் நெஞ்சிலோ, உணர்விலோ எந்தவிதமான பற்றுமில்லாமல் பறைசாற்றித் தம்மைக் கவிஞர்களாக கருத்திக் கொள்வோரின் படைப்புகளின்று வெகுதூரம் உயர்ந்த மட்டத்தில் கவிதா நெஞ்சத்துடன் அழகான தமிழ்ச் சொற்களைக் கையாண்டு கவிதையாகவே சொற் சித்திரங்களைத் தந்திருக்கும் அனார் எனது கணிப்பில் பாராட்டுக்குரியவர்.
எனது கணிப்புகள் பெரும்பாலும் அகவயமானது என்பதனை எனது முதலாவது கட்டுரையில் வாசகர்களுக்குத் தெளிவுபடுத்தியிருந்தேன்.
அனாரின் படைப்புலகம் அவருக்கே உரித்தானது. அது என்ன என்று அறிந்துகொள்ள நாம்தான் அகவயமாக அவர் மனதில் நுழைந்து புரிந்து கொள்ள வேண்டும்.
நாமும் கவியுள்ளங் கொண்டே இத்தகைய கவிதைகளை அணுக வேண்டும். வெளியேயிருந்து நாம் வரித்துக் கொண்ட கொள்கைகள், கோட்பாடுகள் போன்றவற்றை வெளியொதுக்கிவிட்டு, இறைவனைப் புரிந்து கொள்ள நாம் நம்மையே மறக்கவேண்டும் என்பதுபோல, பெரும்பாலான அகவயப் படைப்பாளர்களைப் புரிந்து கொள்ள நாம்தான் சிரத்தையுடன் அத்தகையோர் படைப்புகளை அணுகவேண்டும்.
அது சரி ஐயா, “விமர்சனம்” என்னாவது? நீங்கள் குறிப்பிடும் “திறனாய்வு” என்னாவது என்கிaர்களா? ஒரு படைப்பாளியின் பங்களிப்பை பரந்த இலக்கியப்படுதாவில் இனங்கண்டு கண்டித்து, பாராட்டுவது “ஆழமான”, “விமர்சகர்”களின் பணியாக இருக்கலாம்.
ஆயினும் என் போன்ற இரசிகனுக்கு படைப்பாளியின் கண்ணோட்டத்தைப் புரிந்து அனுபவ வெளிப்பாட்டைத் தெரிவிப்பது மேலென நினைக்கிறேன்.
தவிரவும் இந்த இலக்கிய மதிப்பீடுகள் சாசுவதமான துமல்ல. ஒரு காலத்தில் புறக் கணிக்கப்பட்ட படைப் பாளிகள் மற்றொரு காலத்தில் மறுமதிப்பீடு செய்யப்படுவது ஒன்றும் புதிதானதல்ல. அதனாற் போலும் ‘மெளனி’ என்ற எழுத்தாளர் சமூகப் பிரச்சி னைகளைக் கையாளாதனால் ஏளனம் செய்யப் பட்ட போதிலும், அந்தச் சிறுகதை ஆசிரி யரின் பெயர் இன்றும் பேசப்பட்டு வருகிறது.
அனாரின் கற்பனைக் கனவுகளை இனங்கண்டு சஞ்சரிக்கும் பொழுது ஓர் இலக்கியச் சுவையை நாம் உணரமுடியும். அவருடைய படைப்புலகம் சாதாரண வாசகர்களாகிய நமக்கு அன்னியமாகப் படலாம். அதை நாம் நிராகரிக்கவும் கூடும். இருந்தபோதிலும் அனார் நம்மை அந்த உலகுக்கு அழைத்துச் செல்லும் பாங்கு நிச்சயமாக நல்ல கவிதைகளில் காணப்படும் அழகுதான்.
இதை எப்படி விளக்குவது?
ஆழமான விமர்சனம் என்ற பெயரில், ஒரு மலரைச் சின்னாபின்னமாக்குவது போல, பகுப்பாய்வு என்ற பெயரில் கிழித்துக் கண்டனம் செய்கையில் படைப்பு வெறும் வெறுமையாகத்தான் இருக்கும். கவிதைக்கு முக்கியமான உறுதிப் பொருள்கள் இருப்பது அவசியம். அவற்றுள் ஒன்று புத்தாக்கம் கொண்ட சொல்லாட்சி. சொற்கள் வகிக்குமிடத்தைப் புறக்கணிக்க முடியாதல்லவா? கவிதைக்கழகு லயமுங்கூட. அவற்றை நீங்கள் இக்கவிதைகளில் காணலாம்.
உதாரணமாக எடுத்துக் காட்டுவதென்றால், கவிதை வந்தமர்ந்த சொற் பிரயோகங்களைக் காட்ட முடியும். அவற்றுள் பல என் இதயத்தை மென்மைப்படுத்தின. அவற்றுள் வித்தியாசமானவையும் இருந்தன.
அனார் ஆங்கிலக் கவிதைகளைப் படிக்கிறாரோ தெரியாது. அத்தகை நல்ல கவிதைகள் போன்று அணிச் சேர்ககை என்னைப் பரவசமூட்டின. இங்கே பாருங்கள்:
“மந்தமாகப் பெய்யும் மழைக்குள்
வெயில் கீற்று
வயலின் ஒலியாக ஊடுருவும்போது
மறுபடியும் நாம்
காதலைச் சொல்லிக் கொள்கிறோம்”
இந்த அழகிய அர்த்தம் மிகுந்த வரிகளை விளக்கித்தான் கூற வேண்டுமா? இரசியுங்கள்:
“உவகை பொங்கும் உறவின் கண்களில்
உண்மை கொடுங்கனவாகித் தெரிகின்றது”
“அபூர்வமான மெழுகுக் கடல்
ஓர் காலைப் பொழுதெனத் தெரிகின்றது”.
இவர் எழுதிய “மருதம்” என்ற கதையோட்டம் போன்ற விவரணைக் கவிதை எனக்கு மிகவும் பிடித்தது. நீங்களும் சுவையுங்கள்.


*நன்றி தினகரன் 
»»  (மேலும்)

| |

கவிஞர் ஜெயபாலன் அவரது சொந்த நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டார்

நோர்வே பிரஜையும் கவிஞரும்,பிரபல நடிகருமான ஜெயபாலன் இன்று இரவு குடிவரவு குடியகல்வு அதிகாரிகளினால் அவரது சொந்த நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டார் 
வீஸா விதிமுறைகளை மீறியமை தொடர்பான அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து இன்று இரவு 9.20 மணிக்கு துருக்கி ஊடாக அவர் நோர்வேக்கு நடு கடத்தப் பட்டதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா கேசரியிடம் தெரிவித்தார்.
 
' TK731 Turkis ' என்ற விமானம் மூலம் அவர் துருக்கி நோக்கி அனுப்பப்பட்டதுடன் அங்கிருந்து நோர்வேக்கு திருப்பியனுப்பப்பட்டார் 
 
தமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்து சுற்றுலா விஸா விதிமுறைகளை மீறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த வெள்ளியன்று ஜெயபாலன் வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு குடிவரவு குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். 
 
வவுனியா, மாங்குளம் பகுதியில் தனது தாயாரின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்த முற்பட்ட போதே அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
 
இதனை அடுத்து கடந்த சனிக்கிழமை முதல் மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்ட ஜெயபாலன் குடிவரவு குடியகல்வு அதிகாரிகரினால் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அந்த விசாரணைகளில் ஜெயபாலன் வீஸா விதிமுறைகளை மீறியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா சுட்டிக்காட்டியதுடன், அதனை அடுத்தே அவரை திருப்பியனுப்பியதாகவும் குறிப்பிட்டார்.
முன்னதாக, ஜெயபாலனை ஞாயிரன்று நோர்வே தூதரக அதிகாரிகளும் சந்தித்திருந்தனர்.இன்னிலையிலேயே திருப்பியனுப்பல்  இடம்பெற்றுள்ளது.
 
கவிஞர்,எழுத்தாலரான ஜெயபாலன் நோர்வே குடியுரிமைக் கொண்டவர் என்பதுடன் தென்னிந்திய திரையுலகில் சில திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ப்லராலும் அறியப்படுபவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
 
»»  (மேலும்)

11/26/2013

| |

மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு போக்குவரத்துக்கள் தடையாய் இருந்தால் அதனை நாங்கள் எதிர்வருகின்ற ஜனவரிமாதம் தீர்த்துத் தருவோம்.


மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு போக்குவரத்துக்கள் தடையாய் இருந்தால் அதனை நாங்கள் எதிர்வருகின்ற ஜனவரிமாதம் தீர்த்துத் தருவோம்.
சி.சந்திரகாந்தன்.
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு போக்குவரத்துக்கள் தடையாய் இருந்தால் அதனை நாங்கள் எதிர்வருகின்ற ஜனவரிமாதம் தீர்த்துத் தருவோம். ஜனாதிபதி அவர்களின் 2014 ஆம் அண்டு வரவு செலவுத் திட்டத்தில் கிராமிய போக்குவரத்திற்கு பல ஒதுக்கீடுகள் செய்யப் பட்டுள்ளதாக சொல்லப் பட்டுள்ளது. அந்த வகையில் பிரச்சனைகளை இனம் கண்டு கொண்டால் கிராமிய போக்குவரத்து மற்றும் பாடசாலை போக்குவரத்துக்கள் போன்ற வற்றிற்குரிய பஸ் வண்டிகளை நாங்கள பெற்றுத்தர முயற்சிப்போம்.
என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட சாதனையாளர் பாராட்டு விழா கடந்த 23 அன்று கொக்கட்டிச்சோலை கலாசர மண்டபத்தில் நடைபெற்றது இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்குகையில்
மட்டக்களப்பு மாவட்டத்திலே அமைந்துள்ள மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் பல சாதனைகளையும் பல மாற்றங்களையும் ஏற்படுத்திக் கொண்டு வருகின்றது. இந்த மாற்றத்தினை தொடர்ந்தும் கொண்டு செல்லக் கூடிய பொறுப்பு எங்கள் எல்லோருக்கும் வந்துள்ளது. இந்தக் கல்வி வலயத்தின் பரிசழிப்பு விழாவில் கிழக்கு மாகாகண முதலமைச்சர் அவர்களையும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் அவர்களையும் நேரடியாக் கொணர்ந்து இந்தப் பிரதேசத்தினை அவர்கள் நேரடியாகக் காணக்கூடிய வாய்ப்பும் இன்று ஏற்பட்டிருந்தது.
மாணவர்கள் ஊக்கத்தோடு இருக்கின்றார்கள் அவர்களின் வாய்ப்புக்களை இன்னமும் பெருக்கிக் கொண்டால் மேலும் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பதுதான் எமது எதிர்பார்ப்பாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களுடைய கல்வியினை வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு எங்கள் எல்லோருக்கம் இருக்கின்றது. இதற்காக வேண்டி நாங்கள் பல திட்டங்களைத் தீட்டியிருக்கின்றோம். இதில் அரசியல் பேதங்களை மறந்து வர்த்கர்கள் ஆலயங்கள் போன்ற அனைவரும் இணைந்து இந்தக் கல்விப் பணியினை ஆற்றினால் எமக்கு பாரிய வெற்றியினைத்தரும். இந்த வெற்றி இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இதன் பெறுபேறு வெளிவர வேண்டும் என்பதுதான் எமது எதிர்பார்ப்பாகும்.
இவைகளை ஒருங்கிணைப்பது என்பது மிகவும் கடினமான பணியாகும் இதனை மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் மிகவும் எழிதாக மேற்கொள்கின்றார். இந்த இணைந்த செயற்பாடுகள் ஏனைய கல்வி வலயங்களிலும் வரவேண்டும் என்பதுதான் எமது எத்திர்பார்பாகவுள்ளது.
கடந்த கால யுத்தத்தினாலும் பல இன்னல்களாலும் பெரிதும் பாத்திக்கப்பட்ட மாகாணம் கிழக்கு மாகாணம்தான் அதிலும் மட்டக்களப்பு மாவட்டம்தான் அதிக பாதிப்புக்களைளும் இழப்புக்களையும் சந்த்தித்தது. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் மட்டக்களப்பிலே அமைந்துள்ள கல்குடா கல்வி வலயத்திற்கும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கும் முன்னுரிமை வழங்குகின்றோம் ஆனால் ஒப்பீட்டு அடிப்படையிலே மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம்தான் மிகச்சிறப்பாக இயங்குகிறது. கல்குடா கல்வி வலயத்தில் தமிழர்களுடைய கல்வி வீழ்ச்சி காணப்படுகின்றது. ஏனெனில் வாகரை போன்ற பிரதேசங்களில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் கடந்த காலங்களில் போக்குவரத்து பிரச்சனை என்று சொன்னார்கள் தற்போழுதும் அதனைத்தான் சொல்கின்றார்கள்.
இதனை ஏற்றுக் கொள்ளமுடியாத விடம் ஏனெனில் நாங்கள் எப்போதும் எமது சமூகம் சார்ந்த எண்ணம் இருக்க வேண்டும் ஆசிரியர்கள் சமூகப் பற்றோடு மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டிய பொறுப்பபு உள்ளது. இதனை உணர்ந்து ஆசிரியர்கள் செயற்படுவார்களேயானால் நிட்சயமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரியதொரு மாற்றத்தினை விரைவில் ஏதிர் பார்க்கலாம் என நினைக்கின்றேன்.
தற்போதைய நிலையில் வித்தியாசமான சிந்தனைகளையுடைய மாணவர்களை தற்போது நாம் காண்கின்றோம். தற்போதைய நிலையில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உயிரோடு வாழ்கின்ற நாங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு போக்குவரத்துக்கள் தடையாய் இருந்தால் அதனை நாங்கள் எதிர்வருகின்ற ஜனவரிமாதம் தீர்த்துத் தருவோம். ஜனாதிபதி அவர்களின் 2014 ஆம் அண்டு வரவு செலவுத் திட்டத்தில் கிராமிய போக்குவரத்திற்கு பல ஒதுக்கீடுகள் செய்யப் பட்டுள்ளதாக சொல்லப் பட்டுள்ளது. அந்த வகையில் பிரச்சனைகளை இனம் கண்டு கொண்டால் கிராமிய போக்குவரத்து மற்றும் பாடசாலை போக்குவரத்துக்கள் போன்ற வற்றிற்குரிய பஸ் வண்டிகளை நாங்கள பெற்றுத்தர முயற்சிப்போம்.
வர்தகர்கள் கல்விக்காக செலவு செய்கின்றார்கள் அவை முறையான திட்டமிடலுடன் செயற்பட்டால் இன்னும் நன்றாக இருக்கும் ஆனால் சில ஆலயங்களில் அதிகளவான நிதிகள் இருக்கின்றன ஆனால் கல்விப் பணிக்காக செலவு செய்கின்றார்களில்லை. ஆலயங்களில் தற்போது லெட்சக் கணக்கில் காசுகள் இருக்கின்றன அங்கு சண்டைகள் பல பிரச்சனைகள் எழுகின்றன. ஆலயங்களில் வெறுமனே கட்டிடங்களைக்கட்டுவது மாத்தரமல்லாமல் சமூக மற்றும் கல்விப்பணிக்காகவும் சேவையாற்ற வேண்டும். இதற்காக வேண்டி நாங்கள் ஒரு நிறுவன அமைப்பினை உருவாக்க வேண்டும் என நாங்கள் உத்தேசித்துள்ளோம்.
மண்முனை துறையிலிருற்து வவுணதீவுக்குச் செல்லும் வீதி புணரமைக்கப் படவுள்ளது அதற்காக வேண்டி 540 மில்லியன் ரூபா நிதியினை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. இவவாறு பெரிய தொகைகளை அரசாங்கம் ஒதுக்கீடு செய்து அபிவிருத்திகளை மேற்கொண்டு வரும் அதேவேளை சிறிய அளவிலான நிதிகளை ஒக்கீடு செய்வது என்பது கடினமாகவுள்ளது. இதற்கு தனியான அமைப்புக்கள் வெளிநாடுகளின் உதவிகளைப்பெற்று செயற்பட்டு வருகின்றார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்த வரையில் வறுமை மற்றும் ஏனைய விடையங்களையும் எதிர் நோக்கியுள்ளது. மட்டக்களப்பிலே எல்லோரும் வறுமை வறுமை என்று எந்த நேரமும் சொல்லிக் கொண்டிருக்க முடியாது பிறக்கும் போது வறுமையாக இருந்தாலும் இறக்கம்போது வறுமையாக இருக்கமுடியாது. இந்த எண்ணம் எல்லா பெற்றோர்களுக்கும் எல்லா மாணவர்களுக்கும் இருக்க வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பெறுத்த வரைக்கும் நாங்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழக்கூடிய தேவைப்பாடு எமக்கில்லை கடந்த காலங்களிலேதான் புறச் சூழல்கள் அரசியல் சூழல்கள் ஏற்பட்டிருந்தன.
இவற்றினைப் போக்க வேண்டும் அதற்காக வேண்டி அதிகமாக உழைக்க வேண்டும் அதிகமாக தொழில்களில் ஈடுபாடுஇருக்க வேண்டும். கஷ்ற்றப்பட்டு உழைக்கும் பணத்தினைச் சேமிக்க வேண்டும்.
கிழக்கு மாகாணத்திலே காணி மற்றும் சமூகம் சம்மந்தப்பட்ட பிரச்சனை எழுந்துள்ளது. இதில் உணர்ச்சி வசப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்க முடியாத சூழல் காணப்படுகின்றது. அம்பாறை மாவட்டத்திலே முஸ்லிங்கள் காணிகளைப் பிடிக்கின்றார்கள் அதனைக் காப்பாற்றுவதற்கு சிங்களவர்கள் தமிழர்களுக்கு உதவி செய்கின்றார்கள். மட்டக்களப்பு மாவட்டத்திலே சிங்களவர்கள் காணிகளைப் பிடிக்கின்றார்கள் அதற்கு தமிழர்கள் எதிர்ப்புக் காட்டுகின்றார்கள், திருகோணமல மாட்டத்திலே முஸ்லிங்களுடைய காணிகளை சிங்களவர்கள் பிடிக்கின்றார்கள் அதற்கு சிங்களவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றார்கள்.
கிழக்கு மாகாணத்திற்குள்ளேயே இந்த விடயத்தில் ஒரு பரந்துபட்ட பிரச்சனை எழுந்துள்ளது. இதனை சட்டத்தினூடாகவும் சாந்தப் போக்குடனும்தான் தீர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர உணர்ச்சிவசப்பட்டு இதனைக் கையாள முடியாது.
பட்டிப்பளை பிரதேசத்தின் எல்லை அம்பாரை மாவட்டத்தின் பிரதான வீதியினைத் கடந்து அமைந்துள்ளது. கடந்த காலத்தில் அங்கு எம்மவர்கள் செல்ல முடியாத சூழல் இருந்தது அதுபோல் இப்பொழுதும் தமிழ் மக்கள் அப்பகுத்திக்குச் செல்ல முடியாத சூழல் இருக்கின்றது. இதனை மிகவும் கவனமான முறையில் கையாண்டு சாந்தப் போக்குடன் சட்டத்திற்குட்ட வரைகையில்தான் தீர்க்க வேண்டும். எழுந்தமானமாக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.
»»  (மேலும்)

11/25/2013

| |

கவிஞர் கைதும்..... கதை அளப்புக்களும்.....

Jeyabalan arrestரூபனா-

துநலயடியடயn யசசநளவமுன்னாள் புளட் அமைப்பின் முக்கியஸதர் பின்னாள் கவிஞர் இந்நாள் நடிகர் ஜெயபாலன் காவல்த்துறையினரால் கைது செய்யப்பட்டு விட்டார் என்ற செய்தி கவலை அளிப்பதாக இருந்தாலும் சிலரை  சிந்திக்கவும் பலரை சிரிக்கவும் வைத்துள்ளது.

இந்த கைது புலியை பிடிப்பதாக நினைத்து எலியை பிடித்ததாக இஇவரை கைது செய்த அதிகாரிகள்இ மேல் மட்டத்தினால் தண்டிக்கவோ இகண்டிக்கவோ படுவதற்கான வாய்பை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஜெயபாலன் கைது செய்யப்பட்டு விட்ட விடயம் தெரிந்ததும்இ பல பகுதிகளிலுமிருந்த பல்வேறுதுறை சார்ந்த நண்பர்களிடமும் ஒரேவிதமான எண்ணமே இருந்தது. ஜெயபாலன் எதை விரும்பினாரோ எதை நோக்கி நகர்ந்தாரோ அது நடந்து விட்டது. அவர் எதிர்பார்த்து இலங்கை வந்தஇ காவல்த்துறையின் வாகனத்தில் ஏறுவது என்கின்ற அவா நிறைவேறியதன் மூலம் நானும் ரௌடிதான் என வடிவேலு பாணியில் உரத்து கூவி தமிழகத்திலும் புலம் பெயர் தேசியவாதிகள் மத்தியிலும் மீசையை முறுக்கிக்கொண்டு வீர நடை போடும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டுவிட்டார். ஒரு தியாகியாகஇ சிறைமீண்ட செம்மலாகஇ பயிற்சி பெறாத போராளியாக உலா வரப்போகிறார். இவையே அவரை 1970களில் இருந்து அறிந்த பலரின் கருத்தாக இருந்தது

எல்லா நண்பர்களும் சொல்லி வைத்ததைப் போல வடிவேலுவின் நகைச்சுவை காட்சியைத்தான் நினைவுகூர்ந்தார்கள். ஒரு மருத்தவர் சொன்னார்- 'என்ன இந்தாள் நான் ஜெயிலுக்கு போறன் ஜெயிலுக்கு போறன் என சந்தோசமாக சொல்லிக் கொண்டு போறார்' என. இலங்கை வருவதான ஜெயபாலனின் பகிரங்க அறிவிப்புஇ அதனை தொடர்ந்து அவர் வெளியிட்ட  கருத்துக்கள்இ இலங்கையில் அவர் நடந்து கொண்ட முறைமை எல்லாம் அவர் ஜெயிலுக்கு போவதை இலக்காக கொண்டே இலங்கை வந்தார் என்கின்ற தோற்றப்பாட்டை அப்பட்டமாக வெளிப்படுத்தியருந்தது

இலங்கை ஜெயில்கள் அத்தனை சாதாரணமானதா......? ஜெயிலுக்குப் போவதெல்லாம் சகஜமான விடயமா......? ஜெயபாலனின் போராட்ட உணர்வை கொச்சைப்படுத்தலாமா.....? எனப்பலர் முறுகலாம்.

வெளிநாட்டு பிரஜாவுரிமை பெற்றஇ செயல்களால் அல்லாமல் எழுத்துக்களினால் மடடும் சீவிப்பவர்கள்- இவை பற்றி எல்லாம் அச்சப்படத் தேவையில்லை. இலங்கையின் உள்நாட்டு மோதல் முடிவுக்கு வந்த 2009இன் பின்னர் உருவாகியிருக்கும் இ குறிப்பாக தமிழர்கள் தொடர்பான அரசாங்கத்தின் 'பொறுப்புக்கூறல்' என்பதுதான் இவர்களின் கவசம். அவர்கள் இலங்கைக்குள் வேண்டப்படாதவர்கள் என அரசாங்கம் கருதும் பட்சத்தில் அவர்களை பிடித்து வெளியே அனுப்பிவிடும். போரின் பின்பு கைது செய்யப்பட்டஇ பொதுவிடயம் (அரசியல் - கலை - இலக்கியம்) சார்ந்த அனைவரின் விடயத்திலும் நமது தமிழ் அப்புக்காத்துக்களை போல சட்டநுணுக்கம் பார்த்துத்தான் அரசாங்கம் செயற்பட்டிருக்கின்றது. நமது தமிழ்வீரர்களிற்கு இதனை சகித்துக்கொள்ள சற்று சிரமமாகத்தான் இருக்கும்.

கோத்தபாய ராஜபக்சவையே இரண்டுநாள் தூக்கமில்லாமல் கலங்கடித்த கடத்தப்பட்ட குமார் குணரட்ணம் அவரிற்கிருந்த வெளிநாட்டு பிரஜாவுரிமையாலும்இ அதன் அடிப்படையிலான மேற்குநாடுகளின் சில சக்திகளின் அழுத்தத்தினாலுமே காப்பற்றப்பட்டார்.

அடுத்து தோழர் அ.மார்க்ஸ் விவகாரம். மார்க்ஸ் அவர்கள் ராஜபக்ச குடும்பம் உட்கார்ந்திருக்கும் நாற்காலிகளை பெயர்த்தெறிபவரோ அல்லது அப்படியான நோக்கத்துடன் வந்தவரோ அல்ல. கூட்டமொன்றில் பேச வந்த அழைப்பை மதித்து இங்கு வந்தவர். இலங்கை மற்றும் இந்தியாவிற்கிடையில் பிரயாணம் செய்யும் இருநாட்டவர்களுமேஇ பெரும்பாலும் சுற்றுலா விசாவில்த்தான் செல்கிறார்கள். இலகுத்தன்மையான இந்த வழியில் இங்கு வந்த தோழர் மார்க்ஸை இலங்கைக்கு அழைத்த குழுவிற்குள் ஏற்பட்ட குடுமிப்பிடி சண்டைஇ சிக்கலில் மாட்டியது. ராhஜபக்சவின் விசுவாசி என்ற பழிச்சொல்லிற்குக் கூட ஆளாகிக் கொண்டிருந்தவரை ராஜபக்சவே போராளியாக்கி விமானமேற்றி அனுப்பி விட்டார். மார்க்ஸ் பேசவிருந்த கூட்டத்துடன் தொடர்புடைய யாரோ ஒரு கறுப்பாடுஇ குடிவரவுத்துறையில் இருந்த தனது நண்பர்களிற்கு சுற்றுலா விசாவில் வந்து பகிரங்ககூட்த்தில் பேசப்போகிறார் என போட்டுக் கொடுக்க இ இலகுவான போராளிப் பட்டத்தை அவர் பெற்றுக் கொண்டார்.

இந்தியா உடபட உலகின் பல நாடுகளிலும் சுற்றுலா விசாவில் வந்தவர் சுற்றுலா மட்டுமே செல்லலாம் என்பது பொதுவிதியாகவே உள்ளது. கூட்டங்களில் பேசுவதுஇ மாநாடுகளில் கலந்து கொளவதுஇ அரசியலில் ஈடுபடுவதுஇ பத்திரகையாளர் சந்திப்புகளை நடாத்துவது போன்றனவற்றிற்கு வேறுவிதமாக விசா பெற வேண்டியுள்ளது. இந்த சட்டம் அமுலில் உள்ள நாடுகள் அனைத்திலுமேஇ அது தீவிரமாக கண்காணிக்கப்படுகிறதா......? கண்காணிக்கப்பட வேண்டுமா....? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்

உலகின் அனைத்து நாடுகளும் தனது எதிரிகளை பழிவாங்கஇ அல்லது தனக்கு உவப்பில்லாதவர்களுடன் கடுமையாக நடந்து கொள்ள இது போன்ற சட்டங்களை துணைக்கழைக்கின்றன. பல நாடுகளில் உள்ளூரிலேயே சில சட்டங்கள் சிலருக்கு மட்டுமே அல்லது சில நேரங்களில் மட்டுமே பிரயோகிக்கப்படுகின்றன. இதன் அர்த்தம் பிரித்தானியாவிலும் இலங்கையிலும் ஒரே அளவான சட்ட ஆட்சிதான் நடக்கின்றது என்பதோ  இலங்கையில் நடக்கும் ஜனநாயகமீறல்களிற்கு சமாதானம் சொல்வதோ அல்ல

சுற்றுலா விசாவில் வந்து வேறு பொது விடயங்களில் ஈடுபடக்கூடாது என்பது ஒரு சட்டவிதியாகவே இருக்கின்றபோதுஇ அதை நீக்க அல்லது மீற வேறு மார்க்கங்கள் இல்லாத நிலையில் ஒருவர் இலங்கையில் என்ன செய்யப் போகிறாரோ அதற்கு தோதான விசா பெற்று வருவது மட்டுமே மார்க்கம்.

இலங்கை அரச எதிர்ப்பாளர்களும்இ தீவிர விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களும் எத்தனைபேர் சத்தமின்றி நாட்டிற்குள் வந்து தேனெடுத்துக் கொண்டு சென்று கொண்டிருக்கிறார்கள். எத்தனை அரச எதிர்ப்பு ஊடகவியலாளர்கள் நாட்டிற்குள் வந்து வேண்டியதை பிடித்துக் கொண்டு செல்கிறார்கள்.

ஏன் ஏற்கனவே இலங்கை அரசுக்கு எதிராக செங்கடல் படம் எடுத்து உலகம்முழுக்க புலிஆதரவாளாகள் மத்தியில் காணபித்து அவர்கள் ஆசீர்வாதத்தை பெற்ற லீனா மணிமேகலை என்பவர் அதன்பின்னர் இதே சுற்றுலா விசாவில் மூன்று தடவை இலங்கை வந்து மீண்டும் அரசாங்கத்திற்கு எதிராக படம் தயாரிக்கவில்லையா.....? அது அவர்களின் புத்திசாதுரியம் வியாபார தந்திரம்.

புலம் பெயர் நாடுகளின் எண்ணற்ற புலி ஆதரவு பொது அமைப்புக்களும் பல அரச எதிர்ப்பாளர்களும் சத்தமின்றி சுற்றுலாவில் வந்து இங்குள்ள பாதிக்கப்பட்டவர்களிற்கு உதவி செய்து செல்கிறார்கனே. இது அவர்களின் பொது நோக்கு.

அண்மையில் இலங்கை வந்த இந்தியாவின் தெஹல்கா ஊடகவியலாளர் ஒருவரை சந்தித்த போதுஇ என்ன விசாவில் வந்தீர்கள் என கேட்க. சிரித்துக் கொண்டு பாக்கிலிருந்த சில பட்டுப்புடவைகளை காட்டினார். அவர் இங்கே வந்தது ஒரு அப்பாவி வியாபாரியாக. இதுதான் செயல் பாட்டாளர்களுக்கும் வேடதாரிகளுக்குமிடையிலான வேறுபாடு.

இலங்கை அரசை கடுமையாகசாடும் கருத்துக்களையும் குறிபபாக வன்னியுத்தத்தின் பின்னர்

"நீதியற்ற வெற்றியில்  களி கொண்ட வீடுகளில் நாளை ஒப்பாரி எழும். வெண்புறாக்களாய்க்  கொல்லப் படுபவர் புலம்பி அழுத தெருக்களில் நாளை குதூகலம் நிறையும்.தீப்பட்ட இரும்பென்  கண்கள் சிவந்தேன் சபித்துப் பாடவே வந்தேன். முகமூடிகளும் ஒப்பனையுமற்ற  உருத்ர தாண்டவப் பாடலிது. என் தமிழின் மீதும் என் கவிதைகள் மீதும் ஆணையிட்டு நான் அறம் பாடுகிறேன். எனது சமரசங்களிலாத  சத்தியத்தின் பெயரால் சபிக்கிறேன் எனது மக்களின் இரத்தத்தில் கைகளும் மனங்களும் தோய்ந்தவர்களே  உங்களுக்கு ஐயோ. தர்மத்தின் சேனையே என்னை களபலியாக எடுத்துக்கொள்".

என்கின்ற வரிகள் அடங்கிய அறம்பாடலை வெளியிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி மகிழ்ந்தவர் ஜெயபாலன். கருத்து வெளியிடுவதும் அறம்பாடுவதும் அவரவர் சுதந்திரம். ஆனால் இப்படி அதிதீவிர அரச எதிர்பாளனாக இருக்கும் இவர் பகிரங்கமாக நான் இலங்கை போகிறேன் என அறிவித்து விட்டு வந்ததும் இங்கு வந்த பின்னர் அவர் நடந்கொண்ட விதமும் இவரது கபட நாடகத்தை வெளிப்படுத்துகிறது. ஜெயபாலன் தனது தாயாரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதை தடுப்பது சரியென்று வாதிடுவதோ அல்லது பல்லாயிரக்கணக்கானவர்களின் நினைவிடங்களும் பல வாழ்விடங்களும் உயர்பாதுகாப்பு வலயமாக்கப்பட்டதோ அல்லது மரணித்தவர்களிற்கான அஞ்சலி உரிமைகள் மறுக்கப்படுவதை நியாயப்படுத்தவதோ நியாயமானதாகாது.

தனது தயாரை இறுதிநாட்களில் தவிக்க விட்ட வெப்பியாரத்தை      ஜெயபாலன் முகப்புத்தகத்தில் ஏற்கனவே எழுதிஇ தாயின் கல்லறையிலிருந்து புதிய கல்வெட்டு எழுத ஆரம்பிக்கப் போவதாக வேறு சொல்லியிருக்கிறார். தாய்மாரின் கண்ணீருக்கு மகன்களே காரணமாயிருப்பதும்இ அனாதையாய் தாய்மார் இறந்து போகும் துயரக்கதையும்தானே நமது மரபாகவே ஆகிவிட்டிருக்கின்றது. அவர் எதையும் எழுதட்டும். ஆனால் இப்படி நாள்இ இடம் இநேரம் எல்லாம் குறித்து எழுதப்படுமளவிற்கு நமது தமிழ்கவிதைச் சூழல் இயந்திரத்தன்மையாகிவிட்டது என்பதுதான் வேதனை.

உண்மையில் அவர் தனது தயாரின் கல்லறைக்கு அஞ்சலிசெலுத்த வந்திருந்தால்இ அதனை ஆர்ப்பாட்டமின்றி செய்திருக்கலாம். அதனை ஒரு புரட்சி செயலாகவோ அல்லது அரசியல் செயற்பாடாகவோ பிம்ப உருவாக்கம் செய்திருக்க வேண்டியதில்லை. ஒருவன் தனது தாயாரின் கல்லறையில் வந்து அஞ்சலி செலுத்துவதில் என்ன புரட்சி இருக்கிறது. சில வேளைகளில் அஞ்சலி செலுத்தாதவன்தான் எதாவது புரட்சி நியாயங்கள் சொல்லலாம்.

பகிரங்க முன்னறிவுப்புடன் இலங்கை வந்த ஜெயபாலன் விமானநிலையத்தில் தனக்கு எதுவும் நடக்கவில்லையே என்கின்ற வேக்காட்டுடன் அன்று மாலையே கொழும்பு தமிழ்சங்கத்தில் நடந்த விழா ஒன்றில் அழையா விருந்தாளியாக நுழைந்து அரச எதிர்ப்பு கருத்துக்களை ஆவேசத்துடன் வெளிப்படுத்தி அங்கே பரபரப்பு எற்பட முறைத்துக் கொண்டு வெளியேறினாராம்.

சில வாரங்களின் பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள (புலிகள் அமைப்பில் செயல்பட்டு இன்று அமைதியாக இருக்கும்) நண்பர்கள் சிலரை வற்புறுத்திஇ அவர்களுக்கிருந்த தொடர்புகளை பயன்படுத்தி யாழ் ஊடக மையத்தில் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார். இதில் இவர் வெளியிட்ட கருத்துக்களும் காட்சிகளும் (இவராலேயே அனுப்பப்பட்டு) வெளிநாட்டு உள்நாட்டு ஊடகங்களில் வெளிவந்த நிகழ்வே இவர் கைதுக்கு காரணமாக அமைந்தது எனலாம்.

அதே வேளை கைது செய்யப்படுவதற்கு முதல்நாள் வவனியா காவல்த்துறையினருக்கு நோர்வேயில் இருந்து வந்த தொலைபேசி அழைப்புத்தான் ஜெயபாலன் பற்றிய விபரங்களை காவல்த்துறைக்கு தெரியப்படுத்தியது எனவும் இது கவிஞரின் ஏற்பாடே எனவும் சொல்லப்படுகிறது.

நடக்கும் சம்பவங்கள் இதனையும் நம்பவைக்கும் வகையிலேயே உள்ளன. ஜெயபாலன் கடத்தப்பட்டார் என்பது முதல் செய்திஇ ஓரிரு மணித்தியாலங்களில் அவர் வவுனியா காவல்நிலையத்தில் உள்ளார்இ லண்டனுக்கு கதைத்தார்இ இந்தியாவுக்கு கதைத்தார் இஅமைச்சர் பசீர் சேகாதாவுத் தொடாபில் உள்ளார் இப்படி தொடர்இ தொடர்பு அறிவிப்புக்கள்

குமார்குணரட்ணம் பற்றிய மர்மம் எத்தனைநாள் நீடித்தது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இங்கே கடத்தப்பட்டதாக சொல்லப்பட்டவர் உடனேயே உலகமெல்லாம் தொலைபேசி இ'நான் காவல்நிலையத்தில் இருக்கிறேன்' ஆரம்பிக்கிறது அளப்பறை.

ஜெயபாலனுடன் இப்பொழுதுதான் பேசினேன்இ காரில் போகிறார்இ இப்பொழுது சிறுநீர் கழிக்கிறார்இ முதுகு சொறிகிறார்இ இப்பொழுது கொலைகார காவல்த்துறையின் ஒருவனின் அருகில் உட்கார்ந்திருக்கிறார் இப்படி பில்டப்புகள்.

அதிலும் ஒரு இணையத்தளம் சகித்து கொள்ளவே முடியவில்லை. இலங்கையில்- அதுவும் பயங்கரவாத தடுப்பு பிரிவினால் கடத்தப்பட்ட ஒருவர்இ அவர்களின் வாகனத்தில் இருந்தபடி தொலைபேசியில் கதைக்கிறார்... அது ஒலிபரப்பப்படுகிறது..... இதற்கு இவர்களின் பெயர் கடத்தல்.

கடத்தப்பட்டு காணாமல் போனவர்களின் உறவுகள் போராடிக் கொண்டிருக்கும் இந்த காலத்தில்த்தான் இந்த 'மணல்விளையாட்டுக்களும்'  நடக்கின்றன. இப்படியொரு கடத்தலும்இ இதன் தொடர்ச்சியான சம்பவங்களும் உலக வரலாற்றிலேயே இதுதான் முதன் முதலாக நடப்பது எனலாம்.

ஜெயபாலன் இலங்கைக்கு அச்சுறுத்தலானவர் என்பதாலோ இலங்கையின் தமிழர் அரசை மலர வைக்க வந்தவர் என்பதாலோ கைது செய்யப்படவில்லை என்பது இங்குள்ள அப்பாவிக்கும் புரிகிறது பாவம் அங்குள்ள மக்கள்.

»»  (மேலும்)

| |

இலங்கை தொடர்பான குற்றச்சாட்டுகளை பொருட்படுத்த வேண்டாம்

சர்வதேச சமூகத்திடம் சீனா வேண்டுகோள்
மனித உரிமைகளை முன்னேற் றுவதிலும் நாட்டை கட்டியெழு ப்புவதிலும் முன்னேற்றத்தை காட்டுகின்ற இலங்கைக்கு எதிராக பல்வேறு குற்றச் சாட்டுக்களை முன்வைத்து நாட்டுக்குள் குழப்ப நிலைமையை ஏற்படுத்துவதற்கு காரணமாகின்ற நடவடிக்கைகளை பொருட்படுத்த வேண்டாம் என சீனா சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுத் துள்ளது.
நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு உரிய சூழ்நிலையை கட்டியெழுப்புவதற்கு கைகொடுப்பதே சிறந்ததென சுட்டிக்காட்டுகின்ற சீனா, மனித உரிமைகளை முன்னேற்றுவதிலும் நாட்டை கட்டியெழுப்புவதிலும் அதே போன்று சகல துறைகளிலும் முன்னேற்றத்தை காட்டுகின்ற இலங்கைக்கு மேலும் ஒத்துழைப்பு வழங்குவதாக சீனா மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளது. மனித உரிமைகளை பேணவும் நாட்டை கட்டியெழுப்பவும் இலங்கை கடந்த காலங்களில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இது குறித்து தொடர்ந்து நடவடிக்கை எடுத்துவரும் இலங்கை அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் வலிமையும் ஆற்றலும் உள்ளன எனவும் சீனா நம்பிக்கை கொண்டுள்ளது.
இலங்கையில் மனித உரிமைகளை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சீன வெளிநாட்டமைச்சு விடுத்ததாக கூறப்படும் உரை மற்றும் பொதுநலவாய மாநாட்டின் போது இலங்கை மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் திகதி நிர்ணயித்து பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூன் கூறிய கூற்று தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள சீனா, இவ்வாறு தெரிவித்துள்ளதாக இலங்கையிலுள்ள சீன தூதுவர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படும் யுத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன் விசாரணை செய்வதற்கு நம்பிக்கையான பொறிமுறையொன்றை (இயந்திரமொன்றை) ஏற்படுத்த வேண்டும் என டேவிட் கெமரூன் தெரிவித்தார். அவ்வாறு செய்யாவிடின் சர்வதேச விசாரணையொன்றை நடத்துமாறு சர்வதேசத்திடம் வேண்டுகோள் விடுப்பதாக அவர் கூறியிருந்தார்.
எவ்வாறாயினும் இலங்கை தொடர்பில் சீனாவின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என இலங்கையில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. சீன வெளிநாட்டமைச்சின் கூற்றை அநேகமான ஊடகங்கள் திரிபுபடுத்தி உள்ளதாகவும் இலங்கையிலுள்ள சீன தூதரகம் அறிவித்துள்ளது.
»»  (மேலும்)

11/24/2013

| |

புலிகளால் கொல்லப்பட்ட முன்னாள் மாநகர முதல்வர் செழியன் பேரின்பநாயகம் அவர்களின் நினைவாக

முன்னாள் மட்டக்களப்பு மாநகர முதல்வரும்
பத்திரிகை எழுத்தாளரும் சிறந்த பேச்சாளரும் வானொலி நிருபரும்,சமூக சேவையாளருமான செழியன் ஜே பேரின்பநாயகம் அவர்களின் நினைவாக அவரது புதல்வர் வித்தியாவர்மன் மண்டூர் ஸ்ரீ இராமகிருஷ்ண வித்தியாலயத்தில் கல்விகற்கும் மாணவர்களுக்கு இலவச அப்பியாசபுத்தகங்களை வழங்கி வைத்தார். இந்நிகழ்வு 23.11.2013 அன்று வித்தியாலய அதிபர் வே. ஜெயரத்னம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது
இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி சங்க உப தலைவர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் நிகழ்வில் உரையாற்றிய அதிபர் தனது உரையில் செழியன் பேரின்பநாயகம் அவர்கள் தனது பிறந்த ஊரான மண்டூருக்கு ஆற்றிய பல்வேறு சேவைகள் பற்றி நினைவுகூர்ந்தார்.
இவ்வருடம் 5ம் தர புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

11/23/2013

| |

இலங்கையை கெமரூன் கையாண்ட முறை தவறாகும்: இந்தியா

பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் இலங்கையில் யுத்தக் குற்றத்தை கையாண்ட முறையை கேள்விக்கு உள்ளாக்கியதுடன் இவ்வாறான முறை தீங்கானது எனவும் இந்தியா கூறியுள்ளது.

சாதாரண மக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டை விசாரிக்க சுயாதீனமான ஒரு செயன்முறையை அமைக்க இலங்கைக்கு 4 மாத அவகாசம் வழங்கி இது நடைபெறாதுவிடின் இலங்கை ஐ.நா ஆதரவுடனான ஒரு சர்வதேச விசாரணைக்கு முகம்கொடுக்க வேண்டியிருக்குமென கெமரூன் கூறியிருந்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதற்கு பதிலளிக்கும் வகையில் 'கண்னாடி வீட்டிலிருப்போர் கல்லெறியக் கூடாது' என கூறினார். 'இலங்கை இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க தேவையெனக் கருதும் காலத்தை எடுக்கும்' எனவும் ஜனாதிபதி கூறியிருந்தார்.

டெல்லியிலுள்ள அரசாங்க வட்டாரங்கள் கெமரூனின் அணுகுமுறையை நிராகரித்தன. 'கெமரூன் மாதிரி நாம் நடந்துகொள்ள மாட்டோம்' என அவர்கள் கூறினர்.

வெளிவிவகார அமைச்சர் பொதுநலவாய தலைவர்கள் உச்சிமாநாட்டுக்கு சென்றமை இலங்கை பற்றிய இந்தியாவின் அக்கறையின் வெளிப்பாடாகும் எனவும் இந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. 
»»  (மேலும்)

| |

பொதுநலவாயத்தின் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் வாழ்த்து

பொதுநலவாய அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
இலங்கைக்கும் ரஷ்யாவுக்கு மிடையிலான இருதரப்பு நல்லுறவுகளை வலுப்படுத்திக்கொள்ள விரும்புவதாகக் தெரிவித்த ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு இலங்கையின் விருப்பமும் அதுவென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாடு 2013 ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 17) நிறைவு பெற்றது.  பொதுநலவாயத்திற்கு உபசரணையளித்த நாட்டின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தலைமை பதவியை வகிப்பார்.
அபிவிருத்தியை உள்ளடக்கிய சமத்துவத்துடனான வளர்ச்சி என்பது இவ்வாண்டின் பொதுநலவாய மாநாட்டின் தொனிப்பொருளாக இருந்தது. அடுத்த பொதுநலவாய மாநாடு 2015ல் மோல்ட்டாவில் நடைபெறும்.
பொதுநலவாய மாநாடு 2013 பற்றிய மேலதிக தகவல்களையும் அது தொடர்பிலான நிகழ்ச்சிகளையும் www.chogm2013.lk என்ற பொதுநலவாய உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்க்க முடியும்.
»»  (மேலும்)

11/22/2013

| |

ஆரையம்பதியில் தனிப்பட்ட சிலரின் பிரச்சினையை சமூகப் பிரச்சினையாக மாற்ற எத்தனிக்கக் கூடாது - பூ.பிரசாந்தன்

தமிழர்களிடம் ஆளும் அரசியல் அதிகாரம் இல்லை என்பதற்காகவும் கடந்த கால யுத்தத்தின் கொடுமையால் நொந்துபோயுள்ளார்கள் என்பதற்காகவும் மேலும் மேலும் அவர்களை இல்லாமல் ஆக்க முயற்சிப்பதும் விரும்பத்தக்கசெயல் அல்ல என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
அண்மையில் மாவட்ட செயலக வாயிலை அடைத்து முஸ்லிம்கள் சிலர் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பரீட் தலைமையில் ஆரையம்பதி மக்கள் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுவதாகவும் மீள்குடியேற விடுவதில்லையெனவும் அதற்கு பிரதேச செயலாளரும் முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தனும் காரணம் எனத்தெரிவித்து கோஷங்களிட்டுது தொடர்பாக கருத்துதெரிவித்த போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
ஆரையம்பதியில் முஸ்லீம்களின் காணிகளை தமிழர்கள் அபகரிக்கின்றனர். இதற்கு பிரதேசசெயலாளரும், நானும், சமுக அமைப்புக்களும் துணை போவதாக குறிப்பிட்டு கச்சேரி வாயிலை மூடி சில காத்ததான்குடி அரசியல் தலைமைகளால் ஆர்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
அவ் ஆர்பாட்டத்தின் போது என்னை முஸ்லிம்களின் எதிரியாக காட்ட முற்பட்டதுடன் என்னை அச்சுறுத்தும் வசனங்களும் பொறிக்கப்பட்ட பதாதைகள் காட்சிபடுத்தப்பட்டது.
ஆரையம்பதித் தமிழர்களின் காணியே திட்டமிட்ட சில முஸ்லீம் வர்த்தகர்களாலும் சில அரசியல் தலைமைகளாலும் அபகரிக்கப்படுகின்றதே தவிர ஆரையம்பதி மக்கள் எந்தக் காணியையும் பிடிக்கவில்லை தமது இருப்பை மாத்திரமே தக்கவைக்கப் போராடுகின்றனர்.
சுமார் 12 கிராமசேவையாளர் பிரிவுகளில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களுக்கு பொது மயானம் இல்லாது அல்லல்படுகின்றனர். பிரதேச சபையினாலும் ஆரையம்பதி ஆசிரியர் தியாகலிங்கம் அவர்களினாலும் மயானத்திற்கென வழங்கப்பட்ட காணியைகூட திட்டமிட்டு கபளிகரம் செய்யமுற்படும் சில அரசியல் தலைமைகளுக்கு எதிராகவே ஆரையம்பதி மக்கள் கொதித்தெழுந்தனர்.
ஆனால் இதனை திசைமாற்றவே மாவட்ட அபிவிருத்திகுழுக் கூட்டத்தில் என்னை முஸ்லீம் சகோதரர்களின் எதிரியாகக் காட்ட முற்பட்டனர். காத்தான்குடி நகரசபைத் தலைவர் அஸ்வர் அவர்களும் இப்பகுதியில் தனது காணி இருப்பதாக பிரதேச செயலாளரிடம் பிரஸ்தாபித்துக் கொண்டிருப்பதாக அறிகின்றேன்.அது அவரது சொந்தப் பிரச்சினை. இது இன ஒடுக்கு முறையல்ல. இலங்கை ஜனநாயக நாடு யாரும் யரையும் அச்சுறுத்துவதோ அடக்கியாள முயல்வதோ சட்டத்திற்கு முரணாணதாகும்.
அப்பாவி முஸ்லீம்கள் யாரும் காணி கோரி பிரதேச செயலாளரை அணுகியதாக நாம் அறியவில்லை. எல்லா வளமும் இருந்தும் மேலும் மேலும் காணிகளை அடத்தாக பிடித்து வியாபாரம் செய்யமுற்படுவதும் அது தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கையெடுக்க முற்படும் பிரதேச செயலாளரை இனவாதியாகக் காட்டி இன பிரச்சனையாக உருவாக்க முற்படுவதும் மனிதாபிமானமற்ற செயலாகும் என சுட்டிக்காட்டியதுடன், கிழக்கு மாகாணத்தில் தமிழர்,சிங்களவர், முஸ்லிம் என மூன்று இனமும் தனித்துவத்துடன் வாழவேண்டும் என்கின்ற தலைவர் கௌரவ சி.சந்திரகாந்தன் வழிக்காட்டலில் வளர்க்கப்பட்டவர்கள் நாம். ஒரு இனம் இன்னொரு இனத்தினை அடக்கி ஆழ முற்படக்கூடாது என்ற இலக்கில் பயணிப்பவர்கள். ஆனால் இங்கு தமிழர்களிடம் ஆளும் அரசியல் அதிகாரம் இல்லை என்பதற்காகவும் கடந்தகாலயுத்தத்தின் கொடுமையால் நொந்துபோயுள்ளார்கள் என்பதற்காகவும் மேலும் மேலும் அவர்களை இல்லாமல் ஆக்க முயற்ச்சிப்பதும் விரும்பத்தக்கசெயலும் அல்ல. அதனை வேடிக்கை பார்க்கதிருத்தற்கு யாரும் தயாரும் இல்லை.
என்னையும் நான் சார்ந்தமக்களையும் அச்சுறுத்தும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதனை விடுத்து அரசியல் அதிகாரம் உள்ளவர்கள் மாவட்ட அபிவிருத்திகுழுக் கூட்டத்திற்கு மக்கள் பிரதிநிதிகளை அழைத்து பேச்சு நடத்த வேண்டும். மாறாக முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பதுபோல் பழிகளை என் மீதும் எமதுமக்கள் மீதும் சுமத்தி தப்பித்துக்கொள்ள நினைப்பது வேடிக்கையானது.
அத்தோடு எம்மை ஏளனமாகபேசியதுடன் எச்சரிக்கைவிடுத்த காத்தன்குடி நகரசபையின் தலைவர்; அஸ்வர்,முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினர் பரீட், ஆகியோர் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவிடவும் பொலிசாரிடமும் முறைப்பாடு செய்ய உள்ளதாகவும் பூ.பிரசாந்தன் குறிப்பிட்டார்.
»»  (மேலும்)

| |

விசா விதிகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ்இலங்கைக் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் கைது

இலங்கைக் கவிஞரும், நடிகருமான வா ஐ ச ஜெயபாலன் இலங்கையில் மாங்குளம் பகுதியில் கைது செய்யப்பட்டதாக இலங்கை காவல்துறையின் சார்பில் பேசவல்ல அதிகாரி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
விசா விதிகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் போலிஸ் துறைக்காகப் பேசவல்ல அஜித் ரோஹன தெரிவித்தார்.
சுற்றுலா விசாவில் வந்திருந்த ஜெயபாலன், இலங்கையில் இனங்களுக்கிடையே ஒற்றுமையை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ரோஹன தெரிவித்தார்.
அவர் தற்போது தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார் என்றும், அடுத்த கட்ட நடவடிக்கைகளை குடிவரவு,குடியகல்வு துறை அதிகாரிகள் எடுப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
»»  (மேலும்)

| |

கிளிநொச்சி கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டது தற்காலிக கருத்தடையே-திருமதி யூட்!

கிளிநொச்சி கிராமங்களில் கருத்தடை மேற்கொண்டது உண்மையே ஆனால் கட்டாயகருத்தடை அல்ல என்கிறார் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி யூட் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கிராமங்களான வேரவில் கிராஞ்சி வலைப்பாடு கிராமங்களில் 52 பெணகளுக்கு கருத்தடை மெற்கொண்டது உண்மையே அனால் அவை கட்டாயத்தின் பெயரில் மேற்கொள்ளப்படவில்லை என்பதுடன் அவர்களின் விருப்பத்தின் பெயரிலேயே மேற்கொள்ளப்பட்டது அதுவும் தற்காலிக கருத்தடை சிகிசையே முறையே மேற்கொள்ளப்பட்டது என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் திருமதி எஸ் . ஆர் . யூட் அவர்கள் தெரிவித்துள்ளார்

கிளிநொச்சி மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களான வேரவில் வலைப்பாடு கிராஞ்சி பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டதான கருத்தடை தொடர்பில் பிபிசி மற்றும் பல பத்திரிகைகளிலும் வெளியான செய்தி தொடர்பில் நேற்று(20.11.2013) கிளிநொச்சியில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வடக்கு மாகாண சபை எதிர்கட்சி தலைவர் கமலேந்திரன் அவர்களால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் இதனை தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பில் மாகாண மட்டத்தில் குழு ஒன்று அமைத்து விசாரணைகள் மேற்கொண்டோம் அந்த விசாரணை அறிக்கையில் இது ஒரு சாதாரண தேசிய மட்ட நிகழ்ச்சி கடந்த யூன் மாதம் போசாக்கு மாதமாக இலங்கை பூராகவும் அறிவிக்கப்பட்டது அந்த காலப்பகுதியில் ஜந்து வயதிற்கு உட்பட்ட சிறார்களுக்கு அவர்களின் நிறைகள் அளக்கப்பட்டு இதன் போது வேரவில் கிராஞசி வலைப்பாடு பகுதிகளில் பிள்ளைகளின் நிறைகள் குறைவாக காணப்பட்ட காரணத்தினால் இந்த பிரதேசங்களில் சுகாதார சம்மந்தமாக விசேட வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்று ஆதாவது சுகாதார கல்வி மற்றும் சிறுவர்களின் போசாக்கு சம்மந்தமாக கிளிநொச்சி மாவட்ட தாய்சேய் நலனுக்கு பொறுப்பான வைத்திய அதிகாரிக்கு பணித்திருந்தார்கள் .

அதனடிப்படையில் அந்த வைத்திய அதிகாரி ஏனைய நான்கு அதிகாரிகளுடன் இணைந்து போசாக்கு மற்றும் சுகாதார கல்வி தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடாத்தி அன்றையதினமே குடும்ப கட்டுப்பாடு தொடர்பாகவும் வருகைதந்திருந்த தாய்மார்களுக்கு விளக்கமளித்தார் இதனை தொடர்ந்து அவர்களின் விருப்பத்தின் பெயரிலே கருத்தடை சிகிசை மேற்கொள்ளப்பட்டது எனக்குறிப்பிட்டார்.

மேலும் இந்த கருத்தடை முறையானது முற்றுமுழுதாக தற்காலிகமானது எந்த தாயாவது தனக்கு வேண்டாம் என்று விரும்பினால் அந்த நிமிடமே அதனை எடுத்துவிடவும் முடியும் இதன் பின்னர் குறித்த தாய் கர்ப்பம் அடையமுடியும் எனக்குறிப்பிட்டார்.

இதனைவிட எங்களுடைய விசாரணையில் அந்த பிரதேசங்களில் எந்த தாயும் வற்புருத்தப்படவில்லை ஆனால் இதில் அங்கு சென்ற மருத்துவ குழுவினர் குடும்ப கட்டுப்பாடு தொடர்பான ஆலோசனை வழங்கிய பின்னர் தாய்மார்களுக்கு கால அவகாசம் வழங்கி அவர்களை தங்களுடைய கணவனுடனும் குடும்பத்துடனும் கலந்தாலோசித்து பின்ன்ர் இந்த கருத்தடை மேற்கொண்டிருந்தால் இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்காது அந்த தாய்மார்களின் உரிமை மதிக்கப்பட்டிருக்கும் இதனைவிடுத்த சுகாதார கல்வி வழங்கப்பட்ட அன்றே மேற்கொள்ளப்பட்டதுதான் அனைவர் மத்தியிலும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது எனத்தெரிவித்தார்.
»»  (மேலும்)

11/21/2013

| |

அநாகரிகமாக கைகலப்பில் ஈடுபடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரபலங்களை கருணாம்மான் விலக்கு பிடிக்க வேண்டிய நிலை


மட்டகளப்பு கச்சேரியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திசபை கூட்டத்தில் விவசாயிகள் எதிர் நோக்கும் மேச்சல் தரை ஒதுக்கீடுகள் பற்றிய விவாதம்,முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் எல்லை பிரச்சனைகள் போன்றன இடம்பெற்றன.அதில் தமக்குள்ளேயே அநாகரிகமாக கைகலப்பில் ஈடுபடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரபலங்களை கருணாம்மான் விலக்கு பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.கடந்த மாகாண சபை ஆட்சிகாலத்தில் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பிமார் புலிகளின் வேண்டுகோளின் பேரில் இந்த கச்சேரி கூட்டங்களை  பகிஸ்கரித்து வந்தனர் .அப்போது எல்லாம் நாகரிகமாகவும் சுமுகமாகவும் நடந்தது.இப்போது இவர்கள் வந்து கூட்டமைப்புக்குள்  இருக்கும் தத்தமது  கட்சி கோபதாபங்களை எல்லாம் பொது மன்றிலே காட்ட புறப்பட்டுவிட்டனர்.இதனால் மக்களின் தேவைகளும்  தீர்வுகாண வேண்டிய பிரச்சனைகளும் பின்தள்ள படுகின்றன என கச்சேரி ஊழியர் ஒருவர் புருபுருத்துகொண்டு வெளியேறினார்.கைகலப்பில் ஈடுபடும் எம்பிக்கள் யோகேஸ்வரன்,செல்வராஜா,அரியநேந்திரன்,மாகாண சபை உறுப்பினர் துரைரெட்னம் போன்றோரை வீடியோவில் பாருங்கள் தமிழினமே.
»»  (மேலும்)

| |

மாத்தறையில் சேர் பொன்னம்பலம் இராமநாதன் வீதி


தென் மாகாணத்திலுள்ள வீதியொன்றுக்கு தமிழரொருவரின் பெயர் முதற் தடவையாக சூட்டப்பட்டுள்ளது. மாத்தறை நகரிலுள்ள வீதியொன்றுக்கே தேசியத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டவரும் இலங்கை சட்டவாக்கப் பேரவையின் அதிகாரபூர்வமற்ற உறுப்பினராக பதவி வகித்தவருமான  சேர் பொன்னம்பலம் இராமநாதனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவியேற்பு தினம் மற்றும் பிறந்த தினம் ஆகியவற்றை முன்னிட்டே குறித்த வீதிக்கு விசேட பெயர் சூட்டப்பட்டுள்ளது.

குறித்த வீதியின் பெயர் சூட்டும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, டலஸ் அழகப்பெரும மற்றும் யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.
»»  (மேலும்)

| |

நெல்சன் மண்டேலா உரையாடும் சக்தியை இழந்தார்

தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதுடன், அவர் உரையாடும்  சக்தியை இழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் சுகவீனம் காரணமாக நெல்சன் மண்டேலா  சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.  நெல்சன் மண்டேலா  தனது 95ஆவது பிறந்தநாளின்போதும் வைத்தியசாலையிலேயே கழித்திருந்தார்.  

இதன் பின்னர்  நெல்சன் மண்டேலா வைத்தியசாலையிலிருந்து வெளியேறி  ஜோஹன்நெஸ்பேர்க்கிலுள்ள வீட்டுக்குச் சென்றதாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவித்திருந்தன. 

தற்போது இவரது உடல்நிலை சற்று கவலைக்கிடமாக இருப்பதுடன்,  இவரால் உரையாடுவதற்கு முடியவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ள நெல்சன் மண்டேலாவின் மனைவி,  மண்டேலா தனது முக அசைவுகள் மூலமே குடும்பத்தினருடன் கருத்துகளை பகிர்ந்து கொள்வதாகவும் கூறியுள்ளார். 

இந்த நிலையில் நெல்சன் மண்டேலாவின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக அவரது இல்லத்திற்குச் சென்ற தென் ஆபிரிக்க ஜனாதிபதி ஜாகோப் சூமா, மண்டேலாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். 
»»  (மேலும்)