வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொள்வதற்கு மறுத்திருந்த 9 மாகாண சபை உறுப்பினர்களில் ஒருவராகிய எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று திங்கட்கிழமை முள்ளிளாய்க்காலில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளாகிய ஈபி.ஆர்எல்எவ், டெலோ, புளொட் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 9 மாகாண சபை உறுப்பினர்கள் கடந்த 11 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சத்தியப்பிரமாண நிகழ்வைப் புறக்கணித்திருந்தார்கள். இவர்கள் அனைவரும் இன்று திங்கட்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதி யுத்த மோதல்கள் இடம்பெற்ற பகுதியாகிய முள்ளிவாய்க்காலில் சத்தியப் பிரமாணம் செய்து கொள்வதாக இருந்தது.
எனினும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களின் வேண்டுகோளை ஏற்று, இந்தச் சத்தியப்பிரமாண நிகழ்வு பின்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஏற்கனவே தீர்மானித்திருந்தமைக்கமைய முள்ளிவாய்க்காலில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இவருக்கான சத்தியப் பிரமாணத்தை வல்வெட்டித்துறையைச் சேர்ந்த டாக்டர் மயிலேறும் பெருமாள் செய்து வைத்தார்.
இந்தச் சத்தியப்பிரமாண நிகழ்வு குறித்து கருத்து வெளியிட்ட சிவாஜிலிங்கம், முள்ளிவாய்க்காலில் சத்தியப் பிரமாணம் செய்து கொள்வதைக் கைவிடுமாறு கோரியதாகத் தெரிவிக்கப்படுகின்ற மன்னார் ஆயர் அவர்களோ அல்லது இதுபற்றி மன்னார் ஆயருடன் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனோ தனக்கு எதுவும் கூறவில்லை என்றும், இந்த நிலையிலேயே தான் சத்தியப்பிரமாணத்தை முள்ளிவாய்க்காலில் மேற்கொண்டதாகக் கூறினார்.
அதேநேரம் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குள் பிளவு எதுவும் ஏற்படவில்லை என்றும், மக்கள் அளித்த தீர்ப்புக்கமைய அரசாங்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்காகவே இவ்வாறு தான் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள 30 மாகாணசபை உறுப்பினர்களும் மக்களுக்கான சேவையை சரியான முறையில் செய்யவுள்ளதாகவும் சிவாஜிலிங்கம் கூறினார்.
தனது சத்தியப் பிரமாணம் குறித்து விளக்கமளிப்பதற்காக சிவாஜிலிங்கம் இன்று யாழ்ப்பாணத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றையும் நடத்தியுள்ளார்.