10/03/2013
| |
மண் ஏற்றும் தொழிலாளர்களிடம் மாட்டிக்கொண்ட கூட்டமைப்பு எம்.பி.
இன்று(2013.10.02) மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட(செங்கலடி) மண் அகழ்வாளர்களுடனான விசேட கலந்துரையாடல் ஒன்று உதவி பிரதேச செயலாளர் திருமதி முகுந்தன் நவரூபரஞ்சினி தலைமையில் இடம்பெற்றது. இவ்விசேட கூட்டத்திற்கு முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பனர்களான பொன் செல்வராஜா,சீ.யோகேஸ்வரன்,பா.அரியநேந்திரன் மாகாணசபை உறுப்பினர் துரைராஜசிங்கம், கச்சேரியின் பிரதம கணக்காளர் நேசராஜா, நீர்ப்பாசன பொறியியலாளர் நிரஞ்சன்,மற்றும் விவசாய அமைப்புக்களின் தலைவர்கள், கிராம சேவை உத்தியோகஸ்த்தர்கள், மண் அகழ்வு தொழிலாளிகள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
மண் அகழ்வாளர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டபோது தமிழ் தேசிய கூட்டமைப்பிப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராஜசிங்கம் மண்அகழ்கின்ற பேரில் ஆற்றையே கொண்டு செல்கின்றார்கள் இதனால் மண்அகழ்வை முற்றாக தடை செய்ய வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த மண்அகழ்வாளரான திரு மேகநாதன் என்பவர் ஐயா அவர்கள் கதைப்பது முற்றிலும் வேதனைக்குரியது ஏன் என்றால் தாங்களும் வந்தாறுமூலை பிரதேசத்தை சோர்ந்தவர். இங்குள்ள ஏழை மக்களின் நிலைமை தங்களுக்கு நன்கு தெரியும். மிகவும் பல கஸ்டங்களுக்கு மத்தியிலே வெட்ட வெயிலிலே நின்று கொண்டு உழைத்தால் ஒரு நாளைக்கு 700 அல்லது 800 ரூபாயோ காசு கிடைக்கிறது. அதனைக் கொண்டு தங்களது குடும்பத்தை நடாத்தி வருகின்றார்கள். இம் மண் தொழிலால் செங்கலடி பிரதேசத்தில் சுமார் 500 குடும்பம் நேரடியாகவும் மறைமுகமாக சுமார் 500குடும்பங்களும் நன்மை அடைகின்றன. இதனை இல்லாதொழிப்பதற்கா தாங்கள் வழி சொல்கின்றீர்கள் எனக் கேட்டார்.
அதன் போது குறுக்கிட்ட விவசாயமோ அல்லது விவசாய பாதைகளோ ஏன் செங்கலடி பிரதேசமே தெரியாத பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராஜா நீங்கள் அப்படி சொல்ல முடியாது என்றார் மேகநாதனைப் பார்த்து.
அதன் பின்னர் மண் அகழ்வாளரான திரு யோகராஜா அவர்கள் ஐயா எனக்கு கதைப்பதற்கு 5 நிமிடங்கள் தாருங்கள் எனக் கேட்டு தனது கதையைத் தொடர்ந்தார். மதிப்பிற்குரிய பராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா ஐயா அவர்களே! ஏழைகளின் வோட்டால்தான் தாங்கள் இந்த கதிரையிலே இருக்கின்றீர்கள். அப்படியானால் ஏன் ஏழைகள் மண்ஏற்றி பிழைப்பு நடாத்துவதை தடுக்கின்றீர்கள். நாங்கள் வோட்டு போடாவிட்டால் இந்த கூட்டத்திற்கு தாங்கள் வந்திருக்கமாட்டீர்கள்தானே? அதுதான் உங்களுக்கு நாங்கள் வோட்டு போட்டதுதான் ஏழைகளான நாங்கள் செய்த பாரிய பிழை என்றார். அதன் போது தன்னிலை மறந்த எம்.பி. செல்வராஜா சொல்ல முடியாத வார்த்தைகளால் யோகராஜாவை திட்டி தீர்த்தார். உடனே மண்அகழ்வாளர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கூக்குரல்இட்டு எம்.பி செல்வராஜாவுடன் வாக்குவாதப்பட்டார்கள். மீண்டும் அதிகாரத் தொனியில் அவர்களை ஏசினார் பின்னர் ஓரளவு சபையை கட்டுப்படுத்தி கூட்டத்தை நிறைவு செய்தார்கள்.
கூட்டம் நிறைவுபெற்றதும் வெளியில் வந்த எம்.பி செல்வராஜாவை மண்அகழ்வாளர்கள் சுற்றி வழைத்து மன்னிப்பு கேட்கும்படி கோர ஒன்றுமே செய்ய முடியாது மன்னிப்பு கோரி விட்டு இனிமேல் இந்தப் பக்கமும் நான் வரமாட்டேன் எனக் கூறி தனது வாகனத்தில் ஏறிச் சென்று விட்டார்கள்.