10/12/2013

| |

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரத்தை எதிர்கொள்ளும் அவலநிலை’‏

இலங்கைத்தலித் சமூக மேம்பாட்டு முன்னணி(பிரான்ஸ்)-

21-09-2013 இல் நடந்து முடிந்த வடமாகாண சபைத் தேர்தல் குறித்த எமது அபிப்பிராயங்களையும், அதில் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மிகப்பெரும்பான்மையில் வெற்றி கொள்ளவைத்தது தொடர்பாகவும் நாம் உடனடியாக எவ்வித கருத்தையும் முன்வைக்கவில்லை. முன்வைக்கவும் முடியாத நிலை என்றும் கூறவேண்டியுள்ளது.
பலரைப்போலவே பேசப்பட்டுவரும் தமிழ்த் தேசியம் குறித்த கருத்தாடல்களிலும், அதனை ஒரு இனவாதக் கோசமாக முன்னெடுத்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதும் அதன் அரசியல்-சமூக செயல்பாடுகளில் மீதும் நம்பிக்கையற்றவர்களாகவும், அவர்களது பாரம்பரிய அரசியல் செயல்பாடுகளிலிருந்து எவ்வித மாற்றங்களையும் கண்டு கொள்ள முடியாத நிலையிலேயே நாமும் இருக்கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்-சமூகக் கோட்பாடானது தமிழ்பேசும் தலித்,முஸ்லிம்,மலையக மக்கள்  உட்பட சிங்கள முற்போக்கு சக்திகளையும் ஒன்றிணைக்கும் ஒரு சக்தியாக தன்னை அடையாளப்படுத்திய வரலாறோ, அல்லது வெறும் ஒரு சம்பவமோ எப்போதும் நிகழ்ந்ததில்லை! தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற தொடர்ச்சிகள் யாவற்றிலும்  இவ்வாறான அனுபவங்களையே நாம் பெற்று வந்திருக்கின்றோம்.
இவ்வாறான தமிழ்த் தேசியத்தின் வரலாற்றுப் போக்குகளையும் அதனது பன்முக நிராகரிப்புகளையும் அம்பலப்படுத்திய பலமான சக்தி எதுவும் எம்மிடத்திலிருந்து எழவில்லை. ஒரு ஊடகமாகவோ, ஒரு அரசியல் கட்சியாகவோ பாராம்பரியமான தமிழ்த் தேசியவாத கருத்தியலுக்கு எதிரான ஒரு மாற்று சக்தி தோன்றவில்லை. 25 வருடங்களாக நிகழ்ந்த யுத்தகாலமும் புலிகளின் அதிகாரமும் எவ்வித மன நிலையை மக்களுக்கு ஏற்படுத்தியிருந்ததென்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. தமிழ் மக்களிடமிருந்து பல்வேறு கட்சிகள் போட்டியிடவில்லை. தமிழ் வேட்பாளர்களைக் கொண்டதாக இருந்த போதும் பல்வேறு சிங்களக் கட்சிகளுக்கு எதிராக ஒரே ஒரு தமிழ்க் கட்சி போட்டியிட்டது என்பதுதானே வெளிப்படையான உண்மை! பெரும்பான்மை மக்களின் வாக்களிப்பு மனநிலையும் அவ்வாறு சிந்திக்க தூண்டியிருக்கலாம். தமிழ் கட்சிகளாக, இயக்கங்களாக இருந்தபோதும் வெற்றிலைச் சின்னம் என்பது மக்களை அவ்வாறு சிந்திக்க தூண்டியிருக்கலாம். இவ்வாறான பின்புலங்களை கவனத்தில் கொண்டே மக்களின் வாக்களிப்பு நிகழ்ந்திருப்பதாகவும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.
நடந்து முடிந்த மாகாணசபைத் தேர்தலின் வெளிப்பாடுகள், மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அதிகப்படியான வாக்குகளை அளித்ததன் மனநிலை குறித்த மீழ் ஆய்வின் அவசியத்தை நாம் உணருகின்றோம். தலித்துக்களின் அரசியல்-சமூக  அக்கறை குறித்து கவனம் செலுத்திவரும் எம்மிடையே பொதுவாக ‘யாழ் பெரு மன நிலைக்கும்’ இனவாத சாதிய-சமூக ஒடுக்குமுறைக்கும் எதிரான தார்மீக வெறுப்பு உணர்வு என்பது மேலோங்கியிருப்பது உண்மையே! தவிர்க்க இயலா இவ் யதார்த்த சூழலை சமூகவியல் நோக்கில் சிந்திக்கும் புத்திஜீவிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். அதிகமான தலித் மக்களே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்திருக்கின்றார்கள் என்பது இந்த அவலநிலையில் மறைந்திருக்கும் ஓர் உண்மை என்பதையும் நாம் கவனத்தில் கொள்கின்றோம். தமிழத் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்த மக்களை நாம் தமிழ்த் தேசியக் கருத்தியலுக்கு ஆதரவானவர்களாக கருதிவிட முடியுமா? இதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  வெற்றியாகவும், அக்கட்சியின் பாராம்பரியமான சமூக -அரசியல் சிந்தனைக்கு கிடைத்த வெற்றியாகவும் கருதமுடியுமா? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் அனைவரும் (திரு. விக்னேஸ்வரன் உட்பட) தமிழ் இனவாத தேசியக் கருத்துடையவர்கள்தானா? போன்ற கேள்விகளும் எமக்கு எழுகின்றது. நாம் ஒரு ‘மையவாத கருத்து நிலையில் நின்று தொடர்ந்து ஒன்றை விமர்சிப்பதற்கும் அவ் ‘மையவாதக் கருத்து நிலையின்’ விசுவாசத்தை காட்டுபவர்களாகவும் எம்மால் பயணிக்கமுடியாது. அரசியல் ஆட்சி அதிகாரங்கள் மீதான பல்வேறு அபிப்பிராயங்கள் விமர்சனங்கள் இருப்பினும் அவ் ஆட்சி அதிகாரங்களை எதிர்கொள்ள வேண்டியதன் அவசியத்தை நாம் உணர்ந்து கொள்ள வேண்டியவர்களாக கருதுகின்றோம். அந்தவகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரத்தை எதிர்கொள்ளும் அவசியத்தையும் உணருகின்றோம். இவ்வாறான சிந்தனைப் பரிமாணத்தின் விளைவே, தேர்தல் குறித்த எமது அபிப்பிராயத்தை வெளிப்படுத்த தாமதமாக இருந்தது.

மக்களால் அளிக்கப்பட்ட வாக்கென்பது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மீதான ஆதரவு வாக்குகள் அல்ல அவை அரசிற்கு எதிரான வாக்குகள், எமது சுயநிர்ணய இறையாண்மை கொண்ட அரசியல் அதிகாரத்தை பெறுவதற்கான வாக்குகள் என்ற கருத்துகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றது. அதுவே ஒரு முற்று முழுதான உண்மையாக இருப்பின் எமது சமூகம் அரசியல் விழிப்புணர்வில் மிகப்பாரிய வளர்ச்சி பெற்றதாகவே எம்மால் கருத முடியும்! எம்மைப் பொறுத்த வரையில் அதுவும் காரணங்களில் ஒன்றாக இருக்குமே அல்லாது அதுதான் காரணம் என்பதாக சாதித்து விடமுடியாது. அதேபோல் வெற்றிலை சின்னத்திற்கு மொத்தமாக எண்பதிநாயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் அளிக்கப்பட்டதால் அனைத்தும் அரசிற்கு ஆதரவான வாக்குகள் என்றும் கருதிவிடமுடியாது. வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டவர்களின் தனிப்பட்ட செல்வாக்கின் முக்கியத்துவத்தையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். கூட்டமைப்பின் பிரச்சாரத்திற்கு கிடைத்த வாக்குகளையே அனைத்தையும் விட நாம் ஆபத்தாக கருதுகின்றோம். எழுபதாம் ஆண்டுகளில் இருந்து மேற்கொண்ட இனவாதப் பிரச்சாரத்தையே தற்போதும் மேற்கொண்டிருக்கின்றார்கள். எனவே எம்மத்தியிலே மேலோங்கியிருப்பதும் இனவாதமே. வாக்களிப்பின் மிகப்பெரிய பலமும் இதன் பின்னணியிலேயே அமைந்திருக்கும் என்பதை எம்மால் உதாசீனப்படுத்திவிட முடியாதுள்ளது. அதனை ஒரு சித்தாந்தக் கோபட்பாட்டு நியாயங்களூடாக நிறுவவேண்டிய அவசியம் எமக்கில்லை. நாம் பல ஆண்டுகளாக புகலிடத்தில் வாழ்ந்தாலும் எமது சமூகத்தோடும் உற்றார் உறவினர் சாதி சமயங்களோடுமே ஒட்டி உறவாடிக் கொண்டிருக்கின்றோம். எங்களுக்குத் தெரியாதா எங்களிடம் வேரோடியிருக்கும் வலிமை என்னவென்பது.

நாம் விரும்பாத, பன்முக சிந்தனையற்ற ஒரு பிற்போக்கான கட்சியாக எம்மால் கருதப்படும் ஒரு கட்சியை தமிழ்பேசும் மக்கள் தமக்கான உரிமைகளைப் பெற்றுத்தரும் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள். இந்த சூழலில் தமிழ்த் தேசிய இனவாதத்திற்கு எதிரான ஒரு மையவாத,நிலைபேறான சிந்தனையுடன் நாம் தொடர்ந்து செயல்படுவதா! தலித் சமூகத்தின் நலன்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரத்தை எதிர்கொள்வதா! என்பது நாம் மீழ் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவேண்டிய ஒரு விடயமாகக் கருதுகின்றோம். வடமாகணசபையின் அரசியல் அதிகாரத்தைப் பெற்றிருக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடாகவே மக்களுக்கான பல்வேறு சமூக நலத்திட்டங்கள் மேற்கொள்ள்பட இருக்கின்றது. எனவே இவ்வாறான தமிழ்த் தேசியவாத மையத்தை எதிர்கொள்ளவும் அதேநேரம் அதை வரவேற்க வேண்டியவர்களாகவும் இருக்கின்றோம். எதிர்காலத்தில் 'தமிழ்த் தேசியத்திற்கு நன்றி சொல்லவேண்டிய’ அதிசயம் நிகழுமாயின் எந்த விமர்சனத்திற்கும் அஞ்சாது மகிழ்வுடன் நன்றி சொல்லவும் காத்திருக்கின்றோம்.

முதல் அமைச்சரான திரு விக்கினேஸ்வரன் அவர்களின் அரசியல்-சமூகப் பார்வை எவ்வாறு இருந்தது என்பதை எவரும் அறிந்தவர்களல்ல. அவர்மீதான அபிப்பிராயத்தை கண்டடைவதற்கு அவர் ஒரு அரசியல் கட்டுரையோ, சமூகவியல் ஆய்வுகளோ அல்லது ஏதும் இலக்கிய படைப்புகளை மேற்கொண்டவராகவோ நாம் அறிந்ததில்லை. அவர் சாவகச்சேரியல் உரையாற்றிய தேர்தல் பிரச்சார மொழியானது தமிழ்த் தேசிய அரசியலின் பிரச்சாரப் பாராம்பரியத்தின் நீட்சியாகவே கருத வேண்டியுள்ளது. இருப்பினும்  திரு.விக்கினேஸ்வரன் அவர்கள் மீதான எமது   அர்ப்பத்தனமான குறைந்தபட்ச நம்பிக்கை  அவர் யாழ்ப்பாணத்தில் பிறந்ததும் இல்லை, வாழ்ந்ததும் இல்லை என்பது....!

எனவே இணக்க அரசியல், அபிவிருத்தி போன்ற எல்லைகளையும் கடந்து சமூகத்தில் நிலவும் இனவாத, பிரதேசவாத, சாதிய ஒடுக்குமுறை போன்ற விடயங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து மகாணசபை இயங்கவேண்டும் என்ற எதிர்பார்ப்போடும்,நம்பிக்கையுடனும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.