வட மாகாணசபை கன்னி அமர்வில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் உரை
முதலமர்வு கலாசார வைபவங்களுடன் கோலாகலம்
அவை தவிசாளர் - சி.வி.கே.சிவஞானம்
உப தவிசாளர் - அன்ரனி ஜெகநாதன்
எதிர்க்கட்சி தலைவர் - க.கமலேந்திரன்
உப தவிசாளர் - அன்ரனி ஜெகநாதன்
எதிர்க்கட்சி தலைவர் - க.கமலேந்திரன்
போருக்கு பிந்திய வட மாகாணத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் அரசாங்கமும் இணைந்து அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளதென வட மாகாண சபை முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வட மாகாண சபையின் கன்னி அமர்வு நேற்று, கைதடியிலுள்ள மாகாண சபைக் கட்டடத்தில் இடம்பெற்றது. இங்கு சபை தவிசாளர், உப தவிசாளர் தெரிவின் பின்னர் கன்னியுரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, சர்வதேச சமூகம் வடபகுதி மக்களுக்கு தொழில் சார்ந்த நடவடிக்கைகளுக்கான உதவிகளை வழங்க வேண்டும்.
வடமாகாண சபையானது மக்களுக்கான தேவைகளை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் சட்டவரையறைக்குள் செயற்படவுள்ளது. 13 ஆவது திருத்தச் சட்டத்தில் சில குறைபாடுகள் காணப்பட்டாலும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவை எமக்கு இருக்கிறது” என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறினார்.
வட மாகாண சபையின் கன்னி அமர்வு நேற்று காலை, கைதடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய மாகாண சபை கட்டடத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதன் போது சபைத் தவிசாளராக கந்தையா சிவஞானமும் உப தவிசாளராக அன்ரனி ஜெகநாதனும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.
வட மாகாண சபையின் முதல் அமர்வு நேற்று காலை 9.30 மணிக்கு வட மாகாண செயலாளர் கிருஷ்ண மூர்த்தியின் தலைமையில் நடைபெற்றது. சபையின் தவிசாளரையும், உப தவிசாளரையும் தெரிவு செய்யுமாறு அவர் முதலமைச்சரை கோரினார். இதன்படி தமிழரசுக் கட்சி சார்பாக யாழ். மாவட்டத்தில் போட்டியிட்ட சி.வி.கே. சிவஞானம் இந்தப் பதவிக்காக பரிந்துரைக்கப்பட்டார்.
இவரின் பெயரை மாகாண அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா முன்மொழிய மாகாண அமைச்சர் பொன்னையா ஐங்கரநேசன் வழிமொழிந்தார். இதன் பின்பு உப தவிசாளர் தெரிவு இடம்பெற்றது. இதற்கு அன்ரனி ஜெகநாதனின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. மாகாண அமைச்சர் பத்மநாதன் சத்தியமூர்த்தி பெயரை முன்மொழிய மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் வழிமொழிந்தார்.
இதனைத் தொடர்ந்து தவிசாளர் சிவஞானத்தின் தலைமையில் நடவடிக்கைகள் இடம்பெற்றதோடு முதல் நிகழ்வாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் உரைநிகழ்த்தினார். அவரது உரையைத் தொடர்ந்து எதிர்க் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கந்தசாமி கமலேந்தின் (ஈ.பி.டி.பி) உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உறுப்பினர்கள் உரையாற்றினர்.
முஸ்லிம்கள் சார்பாக த.தே.கூ. உறுப்பினர் அஸ்மினும் அரசாங்கத்தின் சார்பாக ஐ.ம.சு.மு. உறுப்பினர் ஜெயதிலகவும் உரைநிகழ்த்தினர். சபை நடவடிக்கைகள் எதுவித சச்சரவுகளுமின்றி பிற்பகல் 12.15 மணியளவில் நிறைவடைந்ததாக அறிய வருகிறது. அடுத்த அமர்வு நவம்பர் 11 ஆம் திகதி நடைபெறும் என சபை தவிசாளர் கந்தையா சிவஞானம் இங்கு அறிவித்தார்.
அன்றைய தினம் வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறியினால் கொள்கைப் பிரகடனம் வெளியிடப்படவுள்ளது. வட மாகாணத்தின் கன்னி அமர்வில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா சம்பந்தன், த.தே.கூ. பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை வட மாகாண ஆரம்ப அமர்விற்கு முன்னதாக வட மாகாண சபை புதிய கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது.
வட மாகாண ஆளுநர், முதலமைச்சர், த.தே.கூ. உறுப்பினர்கள் ஆகியோர் ஊர்வலமாக கைதடியிலுள்ள புதிய கட்டடத்திற்கு அழைத்து வரப்பட்டனர். ஆனால் இந்த ஊர்வலத்தில் சில த.தே.கூ. உறுப்பினர்கள் பங்கேற்காது ஒதுங்கி நின்றதாக அறியவருகிறது. கடந்த செப்டெம்பர் 21ம் திகதி நடைபெற்ற வட மாகாண சபைத் தேர்தலில் த.தே. கூட்டமைப்பு 30 ஆசனங்களையும் ஐ.ம.சு.மு. 7 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா மு.கா. ஒரு ஆசனத்தையும் வெற்றியீட்டியது.
இந்த நிலையில் தேசிய மட்டத்தில் மட்டுமன்றி சர்வதேச மட்டத்திலும் வட மாகாண சபை அமர்வு தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருந்தது. பாரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கன்னி அமர்வு சிறப்பாக நடைபெற்றதாக அறியவருகிறது.