10/22/2013

| |

பொதுநலவாய உச்சி மாநாடு: கனடா பகிஷ்கரிக்க கூடாது

முன்னாள் பிரதமர் பிரைன் மல்ரோனி பிரதமர் ஸ்டீபன் ஹார்பருக்கு அழுத்தம்
மாநாட்டைப் புறக்கணித்தால் 146 வருட ஜனநாயகப் பண்புகளை பகிர்ந்து கொள்வது எவ்வாறு?
இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டினை கனடா பகிஷ்கரிக்கக் கூடாதென கனேடிய முன்னாள் பிரதமர் பிரைன் மல்ரொனி வலியுறுத்தியுள்ளார்.
பொதுநலவாய அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் உறுப்புரிமை நாடுகளின் அரசாங்கம் மற்றும் அதன் செயற்பாடுகளில் திருப்தி காணவில்லை என்பதற்காக உச்சி மாநாட்டை பகிஷ்கரிப்பதன் மூலம் இறுதியில் பொதுநலவாயத்தில் ஒன்றாக அமர்ந்து தேநீர் அருந்துவதற்கு கூட போதுமானளவு உறுப்பினர்கள் இருக்க மாட்டார்களெனவும் அவர் கூட்டிக் ¡ட்டியுள்ளார்.
சி.ரீ.வி. () கேள்வி பதில் நேரத்தில் கலந்துகொண்டபோதே அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
பிரச்சினைகளை எதிர்நோக்கும் பல அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்றன. எனவே இந்த மாநாட்டினை பகிஷ்கரிப்பது இதற்குரிய தீர்வு ஆகாது.
அதற்குப் பதிலாக மாநாட்டில் கலந்துகொண்டு ஒருநாடு என்ற வகையில் 146 வருடங்களாக தாம் கற்றுக்கொண்ட அனுபவங்கள் எமது ஜனநாயக முறைமை ஆகியவற்றை வெளியுலகுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் அவர் இச்சந்தர்ப்பத்தில் கூறியுள்ளார்.
53 தேசங்களின் கூட்டமைப்பான பொதுநலவாயம் மிகவும் சக்தி வாய்ந்ததொரு அமைப்பாகுமென சுட்டிக்காட்டியுள்ள கனடாவின் முன்னாள் பிரதமர் மல்ரொனி, கனடா தன்னுடைய நிலைப்பாட்டினை அறிவிக்க வேண்டுமாயின் மாநாட்டுடன் இணைந்து செயற்படுவது அவசியமெனவும் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாயத்திற்கு வெளியிலிருந்து செயற்படுவதனைவிட அதற்குள்ளிலிருந்து இயங்குவதன் மூலமே பல சவால்களை சாதிக்க கூடியதாகவிருக்கு மெனவும் அவர் குறிப்பிட்டார்.
அதற்குரிய எடுத்துக்காட் டாக, 1961 ஆம் ஆண்டு பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பங்கேற்ற அன்றைய கனேடிய பிரதமர் ஜோன் டைபென் பேக்கர் தென்னாபிரிக்காவின் நிறவெறிக்கு எதிராக பிரேரணை ஒன்றை முன்வைத்து அதனை நிறைவேற்றியதை கனேடிய முன்னாள் பிரதமர் பிரைன் மல்ரொனி நினைவுபடுத்தியுள்ளார்.
இதன் காரணமாக தென்னாபிரிக்கா பொதுநலவாய நாடுகளிலிருந்து விலகி, நிறவெறிக் கொள்கை 1990ம் ஆண்டு முடிவுக்கு வந்த பின்னரே மீண்டும் பொதுநலவாய நடுகள் அமைப்பில் இணைந்துகொண்டதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் இம்மாத தொடக்கத்தில், தான் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய உச்சிமாநாட்டினை பகிஷ்கரிக்கப்போவதாக அறிவித்திருந்தார். இருப்பினும், இவர் சார்பில் கனேடிய வெளிவிவகார அமைச்சருக்கான பாராளுமன்றச் செயலாளர் தீபக் சப்ராய் தலைமையிலான பிரதிநிதிகள் குழு வொன்று பொதுநலவாய மாநாடு தொடர்பிலான கூட்டங்களில் கலந்து கொள்ளவுள்ளது.