10/03/2013

| |

ஆலையடிவேம்பில் நடாத்தப்பட்ட இளைஞர் பரிமாற்று வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்வு.

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இளைஞர் விவகார, திறன் அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையுடன் அம்பாறை மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்துகின்ற இளைஞர் பரிமாற்று வேலைத்திட்ட நிகழ்வுகள் கடந்த 28.09.2013, சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டன. கொழும்பு நகரிலிருந்து 50 இளைஞர் யுவதிகளும், ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த 25 இளைஞர் யுவதிகளும் இணைந்து நடைபெறுகின்ற இவ் இளைஞர் பரிமாற்று வேலைத்திட்ட நிகழ்வுகளை ஆரம்பிக்குமுகமாக அதிதிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் பங்குபற்றுனர்கள் அனைவரும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து மாலைகள் அணிவிக்கப்பட்ட நிலையில் சாகாம வீதியூடாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்கு ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு, தேசிய கொடியேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாயின. சமய அனுஸ்டானங்களைத் தொடர்ந்து வரவேற்பு நிகழ்வுகளும் அதிதிகள் உரைகளும் இடம்பெற்றதுடன், கலை நிகழ்வுகள் வரிசையில் கோளாவில் விநாயகர் மகா வித்தியாலய மாணவிகளின் கிராமிய நடனமும் சிறுவர் நடனமும் இடம்பெற்றன. இவ் இளைஞர் பரிமாற்று வேலைத்திட்ட நிகழ்விற்கு அதிதிகளாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன, இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயந்தன், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வீ.ஜெகதீசன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் கே.தவராஜா, தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உதவிப் பணிப்பாளர் அகில விஜய ராஜபக்ஷ, மாவட்ட இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் உமர் லெவ்வை, அம்பாறை மாவட்ட இளைஞர் சம்மேளனத் தலைவர் யு.எல்.எம்.சர்ஜூன், மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் பி.இந்திரன், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தென்னகோன், இராணுவ பிரிகேடியர் , ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் கே.பிரபாகரன், மற்றும் கொழும்பிலிருந்து வருகைதந்த இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர்கள், ஆலையடிவேம்பு பிரதேச கிராமசேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், இளைஞர் கழக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.