10/23/2013

| |

பொய் சாட்சி சொல்லும் சம்பந்தர் *காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்துகொள்வதை இலங்கைத் தமிழர்கள் விரும்பவில்லை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இன்று (அக்டோபர் 22,2013) செவ்வாய்க்கிழமை காலை தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களை சென்னையில் சந்தித்து இலங்கைத் தமிழர் நிலை தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தினார். பாஜகவின் தலைமையகமான கமலாலயத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றது.
இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சம்பந்தன், இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்துகொள்வதை இலங்கைத் தமிழர்கள் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். "இந்தியா வேண்டுமானால் அங்கு கலந்து கொள்வதன் வழியே அந்நாட்டுத் தமிழர்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படக்கூடும் என நினைக்கலாம், ஆனால் இலங்கை தமிழர்கள் பலர் அப்படிக்கருதவில்லை", என்று கூறிய சம்பந்தன், இந்திய உதவியுடன் நிறைவேற்றப்படும் திட்டங்கள் முழுவதுமாக இலங்கை தமிழர்களை சென்றடையவில்லை என்றும் கூறினார்.
இலங்கைத் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பாரதீய ஜனதா தலைவர்களிடம் தாம் விரிவாக எடுத்துக்கூறியதாகவும், இதே போன்று அனைத்து மாநிலங்களிலும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்கங்குள்ள கட்சித் தலைவர்களிடம் இலங்கைத் தமிழர் நலனை மேம்படுத்த இந்தியா ஆக்கபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டுமென வலியுறுத்தவிருப்பதாகவும் சம்பந்தன் கூறினார். இலங்கை அரசியல் சட்டத்தின் 13வது சட்டத் திருத்தத்தினை நீர்த்துப்போகாமல் பார்த்துக்கொண்டது இந்தியத் தலையீடே என்று கூறிய சம்பந்தன், அத்தகைய பங்களிப்பு தொடர்ந்தும் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.
பாஜகவின், தமிழ்நாடு மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் மற்றும் தமிழிசை சௌந்தர்ராஜன், வானதி சீனிவாசன் ஆகியோர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடனான சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர். ஏறத்தாழ இரண்டுமணிநேரம் இப்பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கின்றன.
பாஜகவின் இராதாகிருஷ்ணன் பேச்சுவார்த்தை விவரங்களை தங்கள் கட்சித் தலைமையிடம், குறிப்பாக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியிடம் தெரிவித்து இலங்கைத் தமிழர் வாழ்வு சிறக்க தங்களாலியன்றது அனைத்தையும் செய்யவிருப்பதாகக் கூறினார்.
பாஜகவின் சார்பில் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் நரேந்திர மோடி சமீபத்தில் சென்னையில் பேசும்போது, இலங்கை தமிழர்களின் கனவு விரைவில் நிறைவேறும் என்று பேசியிருந்த பின்னணியில், தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைமை பாஜகவின் தலைவர்களை நேரில் சந்தித்து பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.