இலங்கையின் வடமாகாண சபை தனது முதலாவது அமர்வை வரும் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடத்தவுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர் குழுவாகிய ஒருங்கிணைப்பு குழுவைக் கூட்ட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
வடமாகாண சபையின் முதலாவது அமர்வில் சம்பிரதாயபூர்வமாக ஆற்றப்படவுள்ள முதலமைச்சரின் கொள்கைப் பிரகடன உரை தயாரிக்கப்படுவதற்கு முன்னதாக இந்தக்குழு கூட்டப்பட வேண்டும் என்று அவர் கோரியிருக்கின்றார்.
வரும் ஐந்து வருடங்களுக்குச் செயற்படவுள்ள வடமாகாண சபையின் செயற்பாடுகள் எப்படி இருக்க வேண்டும், எப்படிச் செயற்படப் போகின்றது என்பதை ஆராய்வதற்காகவும், அதன் அடிப்படையில் முதலமைச்சரின் கொள்கைப் பிரகடன உரை தயாரிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்தன் தெரிவித்தார்.
வடமாகாண சபையின் பதவிக் காலத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளில் குறிப்பாக அரசியல் தீர்வு தொடர்பில் எந்த வகையில் செயற்பட வேண்டும் என்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சிகளோடு கூடி, முதலமைச்சர் ஆராய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஐந்து கட்சிகள் ஒன்றிணைந்து விடுத்த வேண்டுகோளை ஏற்று முதலமைச்சராகியுள்ள அவர், எந்த ஒரு கட்சியையும் சார்ந்து செயற்படுவதில்லை என தெரிவித்திருந்த போதிலும் தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் அவர் ஒரு கட்சியைச் சார்ந்து செயற்படுகின்றாரோ என்ற சந்தேகம் எழுந்திருப்பதையடுத்தே கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூடி வடமாகாண சபையின் பதவிக்கால நடவடிக்கை குறித்து ஆராய வேண்டிய தேவை எழுந்துள்ளது என்றும் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.