10/22/2013

| |

தமிழ்ப் பெண்களை நாம் துன்புறுத்தவில்லை என்கிறார் இராணுவப் பேச்சாளர்

ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கை பற்றிய விவாதம் வருடத்தில் ஓரிரு தடவை நடைபெறும் போதும் இலங்கையில் ஏதாவது சர்வதேச நிகழ்வுகள் நடைபெறும் போதும் புலம்பெயர்ந்த அமைப்புகளும் இலங்கைக்கு எதிரான சதிகாரக் கும்பல்களும் ஒன்றிணைந்து எமது நாட்டை சர்வதேச அரங்கில் இழிவுபடுத்தக்கூடிய வகையில் போலியான வதந்திகளை ஜோடித்து பிரசாரங்களை செய்வதுண்டு.
இந்த நிகழ்வுகள் முடிவடைந்த பின்னர் புலம்பெயர்ந்த கும்பல்களும் இலங்கைக்கு எதிரான சதிகாரர்களும் அமைதியாகி மெளனம் சாதிப்பதுண்டு. இந்த சதிகார கும்பல் எப்போதும் இராணுவ ஆக்கிரமிப்பு, யுத்தக்குற்றச்சாட்டுகள், மனித உரிமை மீறல்கள் போன்ற குற்றச்சாட்டுகளையே முன்வைத்து இலங்கைக்கு எதிரான பிரசாரங்களை டொலர்களை சம்பாதிப்பதற்காக மேற்கொள்வதுண்டு.
பொதுநலவாய நாடுகளின் அரசாங்கத் தலைவர்களின் உச்சிமாநாடு இலங்கையில் நடைபெறுவதற்கு இன்னும் 24 நாட்களே இருக்கின்ற இவ்வேளையில், இந்த சதிகார கும்பல்கள் இராணுவத்தை குறி பார்த்து இராணுவத்தினர் வடபகுதியில் உள்ள தமிழ்ப் பெண்களை யும், சிறுமிகளையும் பாலியல் ரீதியில் துன்புறுத்தல்களை மேற் கொண்டு வருகிறார்கள். இதனால், தமிழ்ப் பெண்கள் அவமானம் தாங்க முடியாத நிலையில் தற்கொலை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக போலிப் பிரசாரம் செய்கிறார்கள்.
இது மட்டுமல்ல, அப்பாவி வடபகுதி தமிழ் மக்களின் விலை மதிப்பற்ற காணியையும் இராணுவத்தினர் அபகரித்து அவற்றை மக்களுக்கு யுத்தம் முடிவடைந்து நான்கு ஆண்டுகளாகியும் திரும்பிக் கொடுக்க வில்லை என்றும் சர்வதேச ரீதியில் போலிப் பிரசாரங்கள் செய்யப் படுகின்றன. இந்தப் போலிப் பிரசாரங்களுக்கு அரசியல்வாதிகள் பதிலளிப்பதைவிட இராணுவமே பதிலளிப்பது சிறந்ததென்ற நோக்குடன் இராணுவத்தளபதியின் அங்கீகாரத்துடன் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய, புலம்பெயர்ந்த குழுக்க ளுக்கும் இலங்கைக்கு எதிராக செயற்படும் தேசத்துரோக சதிகார கும்பல்களுக்கும் பதிலடி கொடுப்பது போன்று உண்மை நிலையை எடுத்துரைத்துள்ளார்.
உலகில் எந்தவொரு நாட்டிலும் பிராந்திய நிர்வாக அமைப்புக்கு ஆயுதப்படைகளுக்கு ஆளணி சேர்க்கும் மற்றும் படைகளை பயன்படுத்தும் அதிகாரம் கொடுக்கப்படவில்லை என்று சுட்டிக் காட்டியுள்ள இராணுவப் பேச்சாளர், முப்படைகளின் பிரதம தளபதி என்ற முறையில் ஜனாதிபதி அவர்களுக்கும் மத்திய அரசாங்கத் திற்குமே இந்த அதிகாரம் இருக்கிறதென்று குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் முடிவடைந்த பின்னரும் ஆயுதப் படையினர் பெருமளவில் வடபகுதியில் நிலைகொண்டிருப்பதாக பரப்பப்படும் வதந்தி அப்பட்டமான பொய்யானதென்றும் யுத்தத்தின் போது யாழ்குடா நாட்டில் 45ஆயிரம் படையினர் இருந்த போதிலும் இப்போது படையினரின எண்ணிக்கை 15ஆயிரமாக குறைந்துள்ளது.
இராணுவத்தினர் பெருமளவில் வடபகுதியில் நிலைகொண்டிருப்பதாக பரப்பப்படும் இன்னுமொரு வதந்தியில் 5 பொதுமக்களுக்கு ஒருவர் என்ற முறையில் இராணுவத்தினர் வடபகுதியில் இருப்பதாக பரப்ப ப்படும் வதந்தியும் பொய்யானதென்றும் அந்தளவில் இராணுவத்தி னரை வைக்க வேண்டுமாயின் இராணுவத்தில் இலட்சக்கணக்கான வீரர்கள் இருக்க வேண்டுமென்றும் எடுத்துரைத்துள்ளார்.
தாய்நாட்டின் இறைமையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் பணிக்கு தேவையான அத்தியாவசியமான காணிகளை மாத்திரமே இராணுவத்தினர் இப்போது வைத்திருக்கிறார்கள் என்றும் மற்றவை அனைத்தும் திரும்ப கொடுக்கப்படுகிறதென்றும் அவர் கூறினார்.
2009ல் இராணுவத்தினர் வசமிருந்த 26ஆயிரத்து 700 ஏக்கர் காணி இப்போது 7000 ஆயிரம் ஏக்கராக குறைந்துள்ளது என்றும் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். வடபகுதியில் தமிழ்ப் பெண்கள் இராணுவத்தினரின் பாலியல் துன்புறுத்தல்களுக்கு இலக்காகியிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், 2007ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரையில் 494 பாலியல் துன்புறுத்தல்களும் இடம்பெற்றிருக்கிறது. அதில் 18 பாலியல் துன்புறுத்தல்களில் மாத்திரமே முப்படையினர் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்திருப்பதாகவும் அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
வடமாகாணத்தில் இடம்பெறும் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் களை அங்குள்ள சமூக விரோதிகளே மேற்கொள்கிறார்கள். அதனை சாதகமாக வைத்து இலங்கைக்கு எதிரான சக்திகள் அந்தக் குற்றங்களையும் இராணுவத்தினர் மீது சுமத்துவது நியாயம்தானா என்று பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். இராணு வத்தின் ஆதாரபூர்வமான இப்பதில் பொதுநலவாய நாடுகளின் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளும் வெளிநாட்டு தலைவர்களுக்கு உண்மை நிலையை புரிந்து கொள்ள பேருதவியாக அமையுமென்று நாம் நம்புகிறோம்.
பயங்கரவாதத்தை தோற்கடித்ததன் மூலம் நேரடி ஆயுத வன்முறையை நாம் ஒழித்துக் கட்டிவிட்டோம். ஆயினும் பிரிவினைவாத சித்தாந்தம் இன்றும் வடபகுதியில் நிலை கொண்டுள்ளது. இது தேசிய பாதுகாப்புக்கு ஒரு பாரிய அச்சுறுத்தலாகும். இதே வேளையில், ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு பெறுவதை தவிர்த்துக் கொண்டு சமூகத்தில் இன்று இருக்கிறார்கள். அவர்களில் சிலர் இன்னும் பிரிவினைவாத கொள்கையை மனதில் வைத்திருக்கலாம்.
இளைஞர்கள் மீண்டும் ஆயுதம் தூக்கினால் அது நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் பேராபத்தை ஏற்படுத்தும்.