தலைமையின் முடிவை ஏற்பதாக மாநகர சபை உறுப்பினர்கள் உறுதி
கல்முனை மேயர் விவகாரம் தொடர்பில் கட்சி தலைமைத்துவம் மேற்கொள்ளும் எந்தவொரு முடிவையும் ஏற்றுக் கொள்வதாக கல்முனை மாநகரசபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் உறுதியளித்தனர்.
கல்முனை நகரபிதா விவகாரம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக நேற்று பிற்பகல் பாராளுமன்றத்தில் அமைச்சர் ரவூப்ஹக்கீமின் தலைமையில் அவரது அறையில் முக்கிய கூட்டமொன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கட்சியின் செயலாளர் நாயகம், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரி.ஹசனலி, பராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். தெளபீக், பைசல் காசிம் ஆகியோருடன் பிரதி மேயர் சட்டத்தரணி நிஷாம் காரியப்பர் மற்றும் கல்முனை மாநகரசபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான அமீர், நிஸார்தீன், பிர்தெளஸ், பசீர், பரக்கத், முஸ்தபா, உமர் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் கல்முனை பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸ் பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருந்த போதிலும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாதையிட்டு அமைச்சர் ரவூப்ஹக்கீம் தனது கவலையையும் கண்டனத்தையும் தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில், கல்முனை நகரபிதா ஷிராஸ் மிரா சாஹிப் முதல் இரண்டு வருடங்களுக்கு மேயர் பதவி வகிப்பதாகவும் அடுத்த இரண்டு வருடங்களுக்கு சட்டத்தரணி நிசாம் காரியப்பருக்கு பதவியை விட்டுக் கொடுப்பதற்கு ஆரம்பத்திலேயே இணக்கம் தெரிவித்திருந்தார். இந்த கனவான் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் இந்தப் பதவி ஷிராஸ் மீரா சாஹிப்புக்கு வழங்கப்பட்டது.
கட்சிக்கு கட்டுப்பட்டு, கட்சிக்கு விசுவாசமாக நடந்து கொண்டு தனது மேயர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வார் என்று தாமும் கட்சியும் எதிர்பார்ப்பதாக அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார். ஆனால் இது சம்பந்தமாக ஒரு வார கால அவகாசம் கேட்டிருந்த கல்முனை மாநகர மேயர் இன்றைய கூட்டத்திற்கு வருகை தரவில்லை. எனினும் இந்த விடயம் தொடர்பில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களுடன் கலந்துரை யாடப்பட்ட போது கட்சி தலைமைத்துவம் எடுக்கும் முடிவுக்கு தாங்கள் கட்டுப்படுவதாக மாநகர சபை உறுப்பினர்கள் தம்மிடம் உறுதியளித்ததாக அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.