10/18/2013

| |

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தது இலங்கை அரசாங்கம் அல்ல.அது தமிழீழ விடுதலை புலிகளேயாகும்;-எம்.ஆர். ஸ்டாலின்

(பாரிஸில் கடந்த 13 ஒக்டோபர் அன்று வட மாகாண சபை தேர்தலும் அதன் எதிர்காலமும் எனும் தலைப்பில் இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடலில் எம்.ஆர். ஸ்டாலின் அவர்களால் நிகழ்த்தப்பட்ட உரை  வாசகர்களுக்காக இங்கே  பிரசுரமாகிறது)

வட மாகாணசபை தேர்தல் நடந்த விதம் பற்றியும்அதில் பலரும் எதிர்பார்த்ததை விட தமிழரசு கட்சி அதிகூடிய வாக்குகளை பெற்று ஆட்சியை பிடித்திருப்பது பற்றியும் அரசின் தோல்விக்கான காரண காரியங்கள் பற்றியும் பல தோழர்கள்  இங்கு கருத்துக்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் வட மாகாண  சபையின் எதிர்காலம் குறித்து சிலகருத்துக்களை முன்வைக்கலாம் என எண்ணுகின்றேன்.

முதலில் இந்த மாகாண சபை முறைமையை ஏற்றுக்கொள்ள  தமிழ் தேசிய கூட்டமைப்பு இப்போதாவது முன்வந்தமை சந்தோஷமான ஒரு விடயமாகும். காரணம் இந்த மாகாண சபையை அன்று வரதராஜபெருமாள் பொறுப்பெடுத்தபோதும் கிழக்கில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் சந்திரகாந்தன் பொறுப்பெடுத்தபோதும் அவை துரோகங்களாகவே சித்தரிக்கப்பட்டன.ஒருவித அதிகாரமும் அற்ற "உது எதற்கு?"என்று எள்ளி நகையாடப்பட்டது. ஆனால் அதே மாகாண  சபையை    தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றிகொண்ட போது ஏதோ தமிழீழத்தை வென்றெடுத்ததுபோல்  ஆரவாரங்களும் ஆர்ப்பரிப்புகளும் வானளாவ உயருகின்றன

எது எப்படி இருந்தபோதிலும் தமிழரசு கட்சியின் 63வருடகால அரசியல் வரலாற்றில் இப்போதுதான் யதார்த்த ரீதியில் ஒரு முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக இதனை பார்க்கமுடியும்.தமிழர்களுக்கான ஒரு தீர்வு எனவோ இனப்பிரச்சனைக்கான ஒரு தீர்வு எனவோ இந்த மாகாணசபையை தாண்டி எதுவும் இனியொருபோதும் கிடைக்கப்போவதில்லை என்கின்ற நிலையில் இந்த மாகாணசபைமுறைமையையாவது காப்பாற்றிகொள்ளவேண்டியது அவசியமானதொன்றகும். இதனை நான் முதலாவது கிழக்கு மாகாண  சபை தேர்தல் காலத்தில் இருந்து அடிக்கடி கூறிவருவது இங்குள்ள பலதோழர்களுக்கு நினைவிருக்கலாம்..

தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வாக செய்யப்பட்ட எல்லா ஒப்பந்தங்களையும் சிங்கள அரசாங்கங்கள் கிழித்தெறிந்தே  வந்திருக்கின்றன என இங்கு சிலர் சுட்டிகாட்டினர். அக்கூற்றுக்கள் உண்மையானவையாக இருக்கலாம் . ஆனபோதிலும் இந்த மாகாணசபை முறைமைகளை உருவாக்கிய இலங்கை இந்திய ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தது இலங்கை அரசாங்கம் அல்ல.அது தமிழீழ விடுதலை புலிகளேயாகும் என்பதை இங்கே சுட்டிக்காட்டவிரும்புகின்றேன். அன்று இலங்கை ஜனாதிபதி பிரேமதாசாவிடம் பெற்றுக்கொண்ட பணங்களுக்கும் ஆயுதங்களுக்கும்  பிரதியுபகாரமாக புலிகள் தமிழ் மக்களுக்கு அந்த துரோகத்தை  செய்தனர்.1987ல் புலிகள் சுமார் ஆயிரம் பேரை பலிகொடுத்த நிலையில் ஏற்றுகொண்டிருக்கவேண்டிய இந்த மாகாணசபையை  கடந்த இறுதியுத்தம் வரை சுமார் 25ஆயிரம் உறுப்பினர்களையும் இறுதி யுத்தத்தில் எண்ணற்ற உயிர்களையும்  இழந்த பின்னர்  ஏற்றுகொள்ளவேண்டியநிலையில் தமிழ் மக்களை  கொண்டுவந்து விட்டது புலிகளது அரசியல் வங்ககுரோத்துத்தனமேயாகும். அந்த வகையில் தான் இப்போதாவது  வட மாகாண சபை உருவாகியுள்ளமை மகிழ்ச்சிக்குரியதொன்றகும்
முதலில் இந்த வட மாகாண  சபை தனது நிதி ஆதாரம் பற்றி கவனம் கொள்ளவேண்டும். மத்திய அரசாங்கத்தினால்  மாகாண  சபைகளுக்காக ஒதுக்கப்படும் நிதிகளை மட்டும் நம்பியிருக்காது தனது சொந்த நிதி வருமானங்களை பெருக்கிக்கொள்ள முயலவேண்டும். இன்றைய நிலையில் வடமாகாணத்துக்கென இறைவரி திணைக்களமே இல்லையென அறியமுடிகிறது. முதலில் இதுபோன்ற பல திணைக்களங்கள் உருவாக்கப்படவேண்டிய தேவை உண்டு. மாகாணசபைகளுக்குரிய நிதிமூலங்களாக மதுவரி, நீதிமன்றவரிகள், முத்திரைவரிகள் போன்றன மட்டுமே இலகுவாக அடையாளம் காணத்தக்கனவாகும். இவற்றுக்கான நியதிசட்டங்களை உருவாக்கி அவற்றை மாகாணசபையில் நிறைவேற்றவேண்டும். அதன்பின்னர் அச்சட்டங்கள் ஆளுநரின் அங்கீகாரத்தை பெற  பலமாதங்கள் காத்துகிடக்க நேரிடலாம். அது மாகாண சபை அமைச்சரவைக்கும் ஆளுநருக்கும் இடையில் காணப்படும் புரிந்துணர்வுகளின் பாற்பட்டது. ஆளுநரின் அங்கீகாரம் வழங்கப்பட்ட பின்னரே எந்த ஒரு நியதிசட்டங்களும் சட்ட அங்கீகாரத்தை பெறமுடியும். இதுபோன்ற மாகாண சபை இயங்குவதற்குரிய அடிப்படை விடயங்களை உறுதிபடுத்திக்கொள்ளமுன்பே ஆளுனருடன் முரண்படும் செயல்பாடுகள் இடம்பெற்றால் அவை வட மாகாண  சபையின் வளர்ச்சிக்கு பங்கம் விளைவிப்பதாகவே அமையும்.

மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களில் மிக முக்கியமானது கல்வி அதிகாரம் ஆகும். இதுபற்றி நாம் பெரிதாக கண்டுகொள்வதில்லை. பல்கலைக்கழகங்கள் தொழில்நுட்ப கல்லூரிகள் போன்ற உயர்கல்வி நிலையங்களை தவிர ஏனைய அனைத்து கல்விசார் சாலைகள் அனைத்தும் மாகாண சபைகளின் அதிகாரங்களுக்கு உட்பட்டவையே ஆகும். இந்த விடயத்தில் மாகாண சபைகள் முழுமையாக செயல்படமுடியும். காணி போலிஸ் அதிகாரங்களைவிட இந்த கல்வி அதிகாரம் வடமாகாண சபைக்கு மிக முக்கியமானது என கருதுகின்றேன்.ஏனெனில் வட மாகாணத்தின் குறிப்பாக யாழ்ப்பாணத்தின் மூலதனம் என்பதே கல்விதான். அதனைகொண்டுதான் கடந்த காலங்களில் யாழ்ப்பாணம் நிமிர்ந்து நின்றது.அந்த வகையில் இன்று கிடைத்துள்ள இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வடமாகாண சபை யாழ்ப்பாணத்தை மீள கட்டியெழுப்ப முடியும்.கிழக்கு மாகாண சபையானது  மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள கல்வி அதிகாரத்தை பூரணமாக பயன்படுத்துவதில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளது என்பதை இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

கிழக்கு மாகாண சபை உருவாகும் போது  பின்தங்கிய பிரதேசங்களில் ஆசிரியபற்றாக்குறை தலைவிரித்தாடியது.கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் போன்ற பாடங்களுக்கான ஆசிரியர்கள் பெரும் பாலான பாடசாலைகளில் இருக்கவேயில்லை. அதேவேளை நகர்ப்புற பாடசாலைகள் மேலதிக ஆசிரியர்களை கொண்டிருந்தன. இவற்றுக்கு அமைச்சர்களின் செல்வாக்குகளும் கல்வி அதிகாரிகளில் அனுசரணைகளும் துணை நின்றன.இந்த அவல நிலைமைகளை மாற்றியமைப்பதில்  முதலமைச்சர் சந்திரகாந்தன் எடுத்த உறுதியான முடிவுகள் பெரும் பங்காற்றின. பாலர் பாடசாலைகளுக்கான நியதிசட்டத்தை நிறைவேற்றியமை, பல கிராமிய பாடசாலைகளை தரமுயர்த்தியமை. யுத்தத்தால் சின்னாபின்னமாக்கப்பட்ட படுவான்கரை, திருக்கோவில் பிரதேசங்களை அடிப்படையாக கொண்டு புதிய கல்வி வலயங்களை கூட கிழக்குமாகாண சபை உருவாக்கியமை போன்றன மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள கல்வி அதிகாரத்தை பூரணமாக பயன்படுத்தியதன் வெளிப்பாடு ஆகும். இதுபோன்ற பலவித தேவைகளுக்காக  இறுதியுத்தத்தால் பாதிக்கப்பட்ட வன்னிபிரதேசத்துக்கு மாணவர்கள் காத்துகிடக்கின்றார்கள்.வடமாகாண சபை இந்த விடயத்தில் அதிசிரத்தை கொள்ளவேண்டிய கடப்பாடு உண்டு.

மேலும் கடந்த 25 வருடகாலமாக இந்த மாகாண சபைகள் தென்னிலங்கையில் இயங்கிவருகின்ற போதிலும் அவை வடக்கு கிழக்கில் இயங்க புலிகள் அனுமதிக்க வில்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி  மாகாண சபைகளுக்குரிய பலவித அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப்பெற்று கொண்டு வருகின்றது. இது பற்றிய எமது கடந்தகால கவனகுவிப்புக்கள் மிக குறைவாகாவே இருந்து வந்துள்ளன.. இன்று உருவாகியுள்ள   வட மாகாண சபை இன்னும் சில வருடங்களுக்கு முன்னராவது உருவாகியிருந்தால் மத்திய அரசின் இச்செயல்பாடுகளை தடுத்திருக்க முடியும். அதேபோன்று சந்திரகாந்தன் தலைமையிலான கிழக்கு மாகாண சபை இயங்கிய காலங்களில் மாகாண  சபைகளின் அதிகாரங்களில் தலையிடுவதாகவும் சிறுபான்மை இனங்களின் நலன்களை கேள்விக்குள்ளாக்குவதாகவும் அமைந்த ஒருசில சட்டமூலங்களை அரசாங்கம்  பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முனைந்தது. அவற்றை நிறைவேற்ற விடாமல் தடுத்து நிறுத்தும் முயற்சிகளை கிழக்கு மாகாண சபை மேற்கொண்டது. எனினும் சந்திரகாந்தனின் ஆட்சி முழுமையாக தமிழ்மக்கள் விடுதலை புலிகளின் பெரும்பான்மையில் தங்கியிருக்காத காரணத்தினால் கிழக்கு மாகாண முதலமைச்சரின் அதிகாரவரம்புகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. எனினும் உள்ளுராட்சி மன்ற சட்டமூலம் காணி சீர்த்திருத்த சட்டமூலம் நாடு நகர சட்டமூலம்போன்றவற்றில் சிறுபான்மை இனங்களின் நலன்களை பாதுகாக்கும் பொருட்டு பலதிருத்தங்களை செய்வதில் கிழக்குமாகாண சபையின் இருப்பு வெற்றிகண்டுள்ளது.

இவ்வாறான 13வது சட்டதிருத்தத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஒருமித்து குரல்கொடுக்க தாம் தயார் என்றும் அதுபற்றிய உரையாடல்களுக்கு தாம் தயாராயிருப்பதாகவும் கிழக்கு முதலமைச்சர் சந்திரகாந்தன் தமிழ் தேசியகூட்டமைப்பு தலைமை சம்பந்தருக்கு2011 ஜனவரி 1ம் நாள்  கடிதம் எழுதினார்.ஆனால் கூட்டமைப்பு அதுபற்றி கருசனை கொள்ளவில்லை.மாறாக கடிதத்துக்கான  பதில் எழுதும் அரசியல் நாகரிகத்தை கூட பின்பற்றவில்லை. இது போன்று கடந்த காலங்களில் தவறவிட்ட  பல விடயங்களில் இன்று உருவாகியுள்ள வட மாகாண  சபை தமிழ்மக்களுக்காக எதிர்காலத்தில் கருமமாற்ற முடியும் என நான் நம்புகின்றேன்.அதற்கு வட மாகாணசபை தொடர்ச்சியாக இயங்குவது அவசியம்
.
அதேவேளை வடக்கு கிழக்கு இணைப்பு போன்ற காலாவதியாகி போன கடந்த நூற்றாண்டு சிந்தனைகளை  விடுத்து வடக்கு வடக்காகவும் கிழக்கு கிழக்காகவும் பரஸ்பர ஒத்துழைப்புகளுடன் இயங்க முன்வரவேண்டும்.காணி அதிகாரம் போலிஸ் அதிகாரம் போன்றவற்றை கோரி மாகாண சபைகளை முடங்க செய்வதை விட செய்யவேண்டிய இசெய்ய கூடிய பல விடயங்களில் முதலில் கருமமாற்ற  வட மாகாண  சபை முன்வரவேண்டும். மாகாண சபைகளின் ஊடாக நிறைவேற்றப்படும் நியதிசட்டங்களும் அவற்றையொட்டிய நிர்வாக செயல்பாடுகளுமே மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை கையகப்படுத்துவதற்கான படிமுறைவளர்ச்சியின் முதற்கட்ட நடவடிக்கைகள் ஆகும்.

அவையே எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை நோக்கி நகருவதற்கான சட்ட வலுவாக்கத்தை இம்மாகாண சபைகளுக்கு வழங்கும். இன்றைய மாகாணசபைகளின் இருப்பை உறுதிசெய்வதில் கிழக்கு மாகாண  சபை நிறைவேற்றிய நிதிவசூலிப்பு சட்டமூலங்களும் பாலர் பாடசாலை சட்டமூலம் தனியார் போக்குவரத்து அதிகாரசபை சட்டமூலம்  போன்றவையும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றையெல்லாம் கருத்தில்கொள்ளாது  எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கடந்தகாலங்களைபோல தமிழரசுகட்சி செயல்பட்டால் இந்த நம்பிக்கைகள் பாழாய்ப்போகும் வாய்ப்புகளும் உண்டு. 13வது சட்டதிருத்தத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் என்பன தனியாக தமிழர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டவையல்ல. அவை இலங்கையின் ஏனைய மாகாணங்களுக்கும் பொதுவானவையாகும்.இந்த புரிதல்களின் துணையோடு ஏனைய மாகாணங்களையும் படிப்படியாக அதிகாரங்களுக்காக குரல்கொடுக்க தயார் செய்ய வேண்டும்.அதற்காக இடதுசாரிகளுடனும் முற்போக்கு சக்திகளுடனும் எமது உறவுகளை  வட மாகாண சபை விருத்திசெய்ய வேண்டும்.இங்கு பலரும் குறிப்பிட்ட "தென்னிலங்கை முற்போக்கு சக்திகளுடன் சேர்ந்து தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்பது" என்பதை நாம் இவ்வாறாகத்தான் முன்னேடுக்கமுடியுமென நான் நம்புகின்றேன்.