2014 நிதியாண்டிற்காக அரசாங்கம் 154,252 கோடி 25 இலட்சத்து 18 ஆயிரம் ரூபா (1,542,522,518,000) நிதி ஒதுக்கியுள்ளது. அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டு சட்ட மூலம், சபை முதல்வர் நிமல் சிரிபால டி சில்வாவினால் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
பிரதமர் தி.மு. ஜயரத்னவின் சார்பாக அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா இதனை சமர்ப்பித்தார். இதன்படி இம்முறையும் பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சிற்கே கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நகர அபிவிருத்தி அமைச்சிற்கு 25,390 கோடி 29 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா (253,902,910,000) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அடுத்ததாக நிதி, திட்டமிடல் அமைச் சிற்கு 16,434 கோடி 407 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சிற்கு 10,601 கோடி 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பிரதமரின் அலுவலகம், அடங்கலான 22 விடயங்களுக்காக 1630 கோடி 93 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சிற்காக 14499 கோடி 83 இலட்சத்து 76 ஆயிரம் ரூபாவும், பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சிற்கு 13,820 கோடி 86 இலட்சம் ரூபாவும் கல்வி அமைச்சிற்கு 3884 கோடி 79 இலட்சத்து 7 ஆயிரம் ரூபாவும் உயர் கல்வி அமைச்சிற்கு 2950 கோடி 69 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெகுஜன ஊடக தகவல் அமைச்சிற்காக இம்முறை 268 கோடி 26 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ள அதேவேளை, நிர்மாண பொறியியல் சேவைகள் வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சிற்காக 402 கோடி 977 இலட்சத்து 8 ஆயிரம் ரூபாவும் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சிற்கு 14884 கோடி 96 இலட்சத்து 97 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேவேளை கடற்றொழில் நீரியல் வள அமைச்சிற்காக 443 கோடி 68 இலட்சத்து 72 ஆயிரம் ரூபாவும் மீள்குடியேற்ற அமைச்சிற்காக 35 கோடி 79 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதோடு புனர்வாழ்வு, சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சிற்காக 571 கோடி 84 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சிற்காக 1367 கோடி 87 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. சட்டமும் ஒழுங்குகள் அமைச்சிற்கு 5234 கோடி 33 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதோடு கல்விச் சேவைகள் அமைச்சிற்காக 768 கோடி 46 இலட்சத்து 5 ஆயிரம் ரூபா ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சிற்கு 4447 கோடியும் கூட்டுறவு உள்நாட்டு வர்த்தக அமைச்சிற்கு 172 கோடி 69 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாவும் போக்குவரத்து அமைச்சிற்கு 5856 கோடி 45 இலட்சம் ரூபாவும் வெளிவிவகார அமைச்சிற்கு 930 கோடி ரூபாவும் சுகாதார அமைச்சிற்கு 11,768 கோடி 899 இலட்சத்து 98 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 2014 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நவம்பர் 21ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 22 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்று இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெறும் குழுநிலை விவாதம் டிசம்பர் 2ம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை நடைபெற்று அன்றைய தினம் இறுதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.வரவு செலவுத்திட்டத்திற்காக பாராளுமன்றம் காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை கூட உள்ளது. மாலை 6.30 முதல் மாலை 7.00 மணி வரை ஒத்திவைப்பு வேளை விவாதங்கள் நடத்தப்படும்.
வட மாகாண சபைக்கு ரூ. 1733 கோடி ஒதுக்கீடு
கடந்த ஆண்டில் 1396 கோடி 29 இலட்சத்து 95000 ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது
2014 வரவு செலவுத் திட்டத்தினூ டாக வடமாகாண சபைக்காக 1733 கோடி பத்து இலட்சம் ரூபா ஒதுக்க பரிந்து ரைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் நேற்று சமர் ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டு சட்டமூலத்தின் பிரகாரம் வடமாகாண சபையின் மீண்டு வரும் செலவினமாக 11,500,000,000 ரூபாவும் மூலதன செலவினமாக 5,831,000,000 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 1396 கோடி 29 இலட்சத்து 95000 ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது அதேவேளை, கிழக்கு மாகாண சபைக்காக 2014 இல் 1604 கோடி 6 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சபைக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்றதோடு முதல் தடவையாகவே வட மாகாண சபையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் நிர்வகிக்கப்பட உள்ளது தெரிந்ததே.