9/11/2013

| |

TNA, PMGG எட்டு அம்ச புரிந்துணர்வு உடன்படிக்கை

தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான அரசியைக் கூட்டமைப்பினருக்கும் இடையில் 2013.09.21ம் திகதியில் நடைபெறவுள்ள வடக்கு மாகாணசபை தேர்தலை முன்னிட்டு நேற்று திங்கட்கிழமை மாலை (09.09.2013) மன்னாரில் வைத்து புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டது.
எட்டு அம்சங்கள் உள்ளடங்கிய மேற்படி புரிந்துணர்வு உடன்படிக்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக அதன் பொதுச்செயலாளர் திரு. மாவை.சோ. சேனாதிராஜா (பா.உ) அவர்களும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான கூட்டமைப்பு சார்பாக அதன் மத்திய நிறைவேற்றுக் குழுவின் தலைவர் அஷ்ஷெய்க். எம்.பி.எம்.பிர்தௌஸ் (நளீமி) அவர்களும் கையொப்பமிட்டனர்.
மேற்படி புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் (பா.உ), சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் (பா.உ), திரு. செல்வம் அடைக்கலநாதன் (பா.உ), நீதிக்கும் சமாதானத்திற்குமான முன்னணியின் தலைவர் அஷ்ஷெய்க் நஜா முகம்மத், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர் அஷ்ஷெய்க் அய்யூப் அஸ்மின் மற்றும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். (PMGG ஊடகப்பிரிவு)
புரிந்துணர்வு உடன்படிக்கை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான அரசியல் கூட்டமைப்பினருக்கும் இடையில் 2013.09.21ம் திகதியில் நடைபெறவுள்ள வடக்கு மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு 2013.09.09ம் திகதியன்று மன்னாரில் செய்து கொள்ளப்படும் புரிந்துணர்வு உடன்படிக்கை:
1.    ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதில் ‘சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கம்’ மிகப் பிரதான கூறாக அமைகிறது. வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் – முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கம், தேசிய நல்லிணக்கத்தின் ஒரு முக்கிய அங்கமாக அமையும் என்ற நம்பிக்கையுடன் இவ்விரு சமூகங்களினதும் நல்லிணக்க முயற்சியின் ஒரு அம்சமாக இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை எட்டப்படுகின்றது.
2.    அமையப்போகும் வட மாகாண சபையின் செயற்பாடுகளானது, பண்பாட்டு விழுமிய அரசியலினதும், நல்லாட்சியினதும் மூலக்கூறுகளான ஜனநாயகம், நீதி, தர்மம், சமத்துவம், மனிதநேயம், நல்லிணக்கம், சகவாழ்வு, பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை மற்றும் சட்டவாட்சி போன்றவற்றின் அடிப்படைகளில் அமைதல் வேண்டும்.
3.    1990ம் ஆண்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், இருப்பு, பாதுகாப்பு, மத பண்பாட்டுக் கலாச்சார உரிமைகள் என்பன உறுதி செய்யப்படுவதோடு இம்மீள்குடியேற்ற நிகழ்ச்சித் திட்டமானது, வடக்கு முஸ்லிம்களுக்கான காணிப்பகிர்வு, வீடமைப்பு, தொழில் வாய்ப்பு, மற்றும் வாழ்வாதாரம் போன்ற விடயங்களையும் உள்ளடக்கியதாக அமைதல் வேண்டும்.
4.    வட மாகாண சபைத் தேர்தலுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் முஸ்லிம் மக்கள் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களுக்கு மேலதிகமாக பின்வரும் விடயங்களும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.
’1990ஆம் ஆண்டிற்கு முன்னர், வட மாகாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் தாம் வாழ்ந்த பகுதிகளில் பாரம்பரியக் குடிகளாக வாழ்ந்து வந்துள்ளனர். அந்த வகையில் வட மாகாணம் என்பது முஸ்லிம் மக்களினதும் வரலாற்று ரீதியான வாழ்விடமாகும். அவர்கள் தமது சொத்துக்களையும், வாழ்வாதாரங்களையும், தமது பூர்வீகக் குடியிப்புக்களையும் கைவிட்டு, நாட்டின் ஏனைய பாகங்களுக்குச் சென்று சொல்லொணாத் துன்பங்களை அனுபவிக்க நிர்ப்பந்திக்கப்பட்டமை வருந்தத்தக்கதாகும்.’
‘வட மாகாணத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட அனைத்து முஸ்லிம்களும், அவர்களின் சந்ததிகளும் இயன்றவரை விரைவாக தத்தமது பாரம்பரியக் குடியிருப்புப் பகுதிகளில் மீளக்குடியேறி தமது வாழ்வாதாரத் தொழில்களை மீண்டும் தொடங்குவதை உறுதிப்படுத்துவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பற்றுறுதி கொண்டுள்ளது. அவர்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி வருவதற்கு ஊக்குவிக்கப்படுவதோடும், தமது குடியிருப்புக்களை மீளமைத்து தமக்குரிய கௌரவத்துடனும், பாதுகாப்புடனும் தமது வாழ்க்கையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான அனைத்து உதவிகளையும் வட மாகாண சபை அவர்களுக்கு வழங்கும்.’
‘வட மகாண முஸ்லிம்களின் நலன்கள் தொடர்பான எந்தப் பிரச்சினைக்கும் வட மாகாணத்தில் வாழுகின்ற ஏனைய சமூகங்களின் பிரச்சினைகளுக்கு வழங்கப்படும் அதேயளவு கவனிப்பும், முக்கியத்துவமும் வழங்கப்படும். இம்மாகாணத்தில் வாழும் முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தவருக்கும் நீதியானதும், சமத்துவமானதுமான கவனிப்பு எவ்விதமான பாரபட்சங்களுமின்றி கிடைக்கப் பெறுவதை இம்மாகாண சபை உறுதி செய்யும்.’
5.    மேற்படி மீள்குடியேற்ற செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறையும், செயலணியும் இரு தரப்பு பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக அமைக்கப்படல் வேண்டும்.
6.    அமையப்போகும் வடக்கு மாகாண சபையின் மாகாண சபை நிர்வாகக் கட்டமைப்புகளில் முஸ்லிம்களின் போதிய பங்குபற்றுதல் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
7.    வட மாகாணத்தில் வாழும் சகல சமூகங்களும் பரஸ்பர புரிந்துணர்வோடும், நல்லிணக்கத்தோடும், அர்த்தபூர்வமான சகவாழ்வு மேற்கொள்வதனை ஊக்கப்படுத்துவதற்கும், உறுதி செய்வதற்குமான உழைப்பினை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான அரசியல் கூட்டமைப்பு இதயசுத்தியுடனான அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளும். மேலும் அமையப்போகும் வட மாகாண சபையானது ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்ட நல்லாட்சிப் பண்புகளைப் பிரதிபலிக்கும் முன்மாதிரியான ஒரு மாகாண சபையாக இந்நாட்டில் செயற்படுவதற்கான சகல பங்களிப்புகளையும் அது செய்யும்.
8.    மேற்படி உடன்பாடுகளின் அடிப்படையில் 2013ம் ஆண்டிற்கான வட மாகாண சபைத் தேர்தலில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான கூட்டமைப்பின் பிரதிநிதி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்டபாளர் பட்டியலில் மன்னார் மாவட்டத்தில் களமிறக்கப்பட்டுள்ளார். அவர் கணிசமான வாக்குகளைப் பெற்றும் தெரிவு செய்யப்படாதவிடத்து நியமன முறை மூலம் அவரது பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துதல் பற்றி சாதகமான முறையில் பரிசீலிக்கப்படும்.
மேற்சொன்ன விடயங்களை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டு செயற்படுத்துவோம் என உறுதிப்படுத்தி மன்னாரில் வைத்து 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 09ம் திகதியாகிய இன்று கையொப்பமிடுகின்றோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக
திரு. மாவை சோ. சேனாதிராஜா (பா.உ)
………………………………………………………………………………………..
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின்  தலைமையிலான கூட்டமைப்பு சார்பாக
எம்.பி.எம். பிர்தௌஸ், தலைவர், மத்திய நிறைவேற்றுக்குழு – PMGG
……………………………………………………………………………………………
MOU (1)MOU (2)