மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 38ஆம் கொலனியில் உள்ள வயல்வெளியிலிருந்து ஒரு தொகுதி ஆயுதங்களை மீட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
ரீ - 56 ரக துப்பாக்கிகள் 2, ரீ - 56 ரக துப்பாக்கிகளுக்கான மகஸின்கள் 4, தோட்டாக்கள் 200, ஒரு கைக்குண்டு ஆகியவற்றை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இது தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் வசித்துவருகின்ற விவசாயி ஒருவருக்குச் சொந்தமான வயலிலிருந்தே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
நவகிரி நகரில் உள்ள தனது வயலை பெரும்போகச் செய்கைக்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை உழுதுகொண்டிருந்த போது, இந்த ஆயுதங்கள் வெளிப்பட்டதாக களுவாஞ்சிக்குடி பொலிஸாரிடம் குறித்த விவசாயி தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து குறித்த வயல்வெளிக்குச் சென்ற களுவாஞ்சிக்குடி பொலிஸார், இந்த ஆயுதங்களை மீட்டுள்ளனர்.
இவை கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.