9/29/2013

| |

வாடகை வீட்டில் வசித்து வந்த கிழக்கு தமிழர்களுக்கு, தமக்கென ஓர் வீட்டை உருவாக்கவேண்டிய தேவையை கடந்த கிழக்கு தேர்தல் உணர்த்தியுள்ளது -

21.09.2013 அன்று நடந்து முடிந்துள்ள வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) அளிக்கப்பட்ட வாக்குகளில் 353,595 (78.48%) வாக்குகளைப் பெற்று போனஸ் ஆசனங்கள் இரண்டு உட்பட மொத்தம் 38 ஆசனங்களில் 30 ஆசனங்களை வென்று மூன்றிலிரண்டு பங்குஅறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் சமூக, பொருளாதார, அரசியல் மீட்சியின் மீது அக்கறை கொண்ட அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட, விரும்பப்பட்ட விடயம் இது. இன்றைய ஈழத் தமிழ்ச் சூழலில் முழுத் தமிழ் உலகும் அகம் மகிழ வேண்டிய நிகழ்வு இது.
ஆளும் ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 07 ஆசனங்களையும், முஸ்லிம் காங்கிரஸ் கட்சி 01 ஆசனத்தையும் பெற்றிருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 30 ஆசனங்களைக் கைப்பற்றுவது வடக்கு மாகாணத்தில் சாத்தியமே. வடக்கு மாகாணத் தமிழர்கள் உணர்வுபூர்வமாகவும், அறிவுபூர்வமாகவும் வாக்களித்துள்ளனர் என்பதேபொதுவான மதிப்பீடு.
ஆனால் இது கிழக்கு மாகாணத்தில் சாத்தியமா? இல்லை. எனவே வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான அளவுகோலைக் கிழக்கு மாகாணத்துக்கும் பயன்படுத்த முடியுமா?
இதற்கான விடையைச் சென்ற வருடம் 08.09.2012 அன்று நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலுடன் ஒப்பிட்டு ஆராய்ந்து பெறுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
கிழக்கு மாகாண சபையின் மொத்த உறுப்பினர்கள் 37 பேர். அதில் தேர்தலில் நேரடியாகத் தெரிவு செய்யப்படுபவர்கள் 35 பேர். 02 போனஸ் ஆசனங்கள். ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமானால் தனிக் கட்சியொன்று ஆகக் குறைந்தது தேர்தலில் நேரடியாக 17 ஆசனங்களையாவது (போனஸ் ஆசனங்கள் தவிர) பெற்றாக வேண்டும். இது ஒருபோதும் சாத்தியமில்லை.
ஒட்டு மொத்தமாகக் கிழக்கிலுள்ள தமிழ் முஸ்லிம், சிங்களவாக்காளர்களின் விகிதாசாரத்தை வைத்துப் பார்க்கும் போது கிழக்கில் ஒரேயோரு தமிழ்க் கட்சிபோட்டியிட்டு அக்கட்சிக்குக் கிழக்கில் 100% தமிழர்கள் வாக்களித்தாலும்கூட அத்தமிழ்க் கட்சிதானும் மேற்படி 17 ஆசனங்களைப் பெறச் சாத்தியமே இல்லை.
எனவே கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கைப் போல் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று மாகாண ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றும் சாத்தியம் எக்காலத்திலும் இல்லை. இதுவே யதார்த்தம்.
சென்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தல் பிரசாரத்தின் போது கிழக்கு மாகாணசபையைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அறுதிப் பெரும்பான்மையுடன் கைப்பற்றும் எனஆரம்பத்தில் கூறியது தவறானது என்பதைத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தின. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மொத்தம் 37 ஆசனங்களில் 11 ஆசனங்களையே கைப்பற்ற முடிந்தது.
இந்த யதார்த்தத்தின் அடிப்படையில் நோக்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேறு ஏதாவதொரு கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து தான் ஆட்சியமைக்க முடியும். இதனால் தான் தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து முதலமைச்சர் பதவியையும் அவர்களுக்குக் கொடுக்கச் சம்மதித்து ஆட்சியமைப்போம் எனத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கூறியது. ஆனால் அதுநடைபெறவில்லை. நடந்தது அனைவருக்கும் தெரியும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைப் பொறுத்த வரை அது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியென்றாலும் சரி தான் அல்லது ஐக்கிய தேசியக் கட்சி யென்றாலும் சரிதான் அல்லது வேறொரு கட்சியென்றாலும் சரிதான் மத்தியில் அதிகாரத்தில் உள்ள ஆளும் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்துஅதனால் வரும் ஆதாயங்களைப் பெற்றுக் கொள்ளுமே தவிர தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து எதிர்ப்பு அரசியலை எக்காலத்திலும் முன்னெடுக்கமாட்டாது.
விதிவிலக்காகச் சில வேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்து ஆட்சியமைத்தால் கூட அது கிழக்குத் தமிழர்களுக்கு எந்த விதமான சமூக, பொருளாதார, அரசியல் நன்மைகளையும் பெற்றுத்தரப் போவதில்லை.
மாறாக வழமை போல் முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் மேலாதிக்கமே அங்கு தலைதூக்கும். அது கிழக்குத் தமிழர்களுக்கு உதவப் போவதில்லை.
கிழக்கில் எம்.எஸ்.காரியப்பர் காலத்திலிருந்து எம்.எச்.எம்.அஸ்ரப் காலம் வரையிலானஅறுபது வருடகால அரசியல் அனுபவம் கிழக்குத் தமிழர்களுக்குப் பெற்றுத் தந்துள்ளபாடம் இது.
இந்தப் பின்புலத்தில் கிழக்குத் தமிழர்களுக்கு நன்மையளிக்கக் கூடிய மாற்று வழி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மத்தியில் அதிகாரத்தில் உள்ளஆளும் கட்சியுடன் அது ஐக்கியமக்கள் சுதந்திரக் கட்சியென்றாலும் சரி அல்லது ஐக்கியதேசியக் கட்சியென்றாலும் சரிஅல்லது வேறொரு கட்சியென்றாலும் சரி அத்துடன் கூட்டுச் சேர்வதேயாகும். இதுவும் நடைபெறப் போவதில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை கிழக்கில் சிங்களப் பேரினவாதக் கட்சியொன்றுடன் கூட்டுச் சேர்வதன் மூலம் வடக்கில் தனதுஅரசியல் தளத்தை இழக்க அல்லது புலம்பெயர் தமிழ்ச் சமூகத்திடம் தன் செல்வாக்கை இழக்க அது தயாராயில்லை. இந்ந நிலையில் கிழக்குத் தமிழர்கள் கிழக்கைத் தம் வசம் வைத்துக் கொள்ளக் கூடிய மற்றுமொரு மாற்று வழி எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ‘வைக்கோல் பட்டறை நாய்’போல் நடந்து கொள்ளாமல் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடாது ஒதுங்கி விடுவதாகும்.
கடந்ததேர்தலில் (2012), அதற்கு முந்திய முதலாவது கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் போது (2008) நடந்து கொண்டது போல் பிரிக்கப்பட்டவடக்குக் கிழக்கில் போட்டியிடமாட்டோம் என்ற நிலைப்பாட்டை எடுத்து அத் தேர்தலில் போட்டியிடாது ஒதுங்கியதைப் போன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டிருக்குமானால் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பநிலை கிழக்குத் தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்க மாட்டாது.
ஏனெனில், மாகாண சபை இனப் பிரச்சனைக்கான தீர்வினை எட்ட தெரிவுக்குழு அமைத்துச் செயற்படும் அரங்கு அல்ல. குறைகள் இருந்தாலும் நடைமுறையில் இருக்கும் 13 வது அரசியல் திட்டத் திருத்தத்தின் மூலம் பெறக்கூடிய அனுகூலங்களைத் தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கக் கூடியஓர் நிர்வாகப் பொறிமுறையாகும்.
தேசிய அரசியலிலும் சர்வதேச அரசியலிலும்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலச் செயற்பாடுகள் இராஜதந்திர ரீதியாகக் கொண்டு செல்லப்பட வேண்டுமே தவிர அதற்கான பொருத்தமான தளம் மாகாண சபை அல்ல.
மேலும், தென்னிலங்கை அரசியலில் – இந்துசமுத்திரப் பிராந்திய அரசியலில் – சர்வதேச அரசியலில் ஏற்படும் மாற்றங்களால் எதிர்காலத்தில் சிலவேளை வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணைய வேண்டி வந்தால் கூட கிழக்கு கிழக்காக இருந்தால் தானே வடக்குடன் இணைய முடியும். இல்லாத ஒன்றை எப்படி வடக்குடன் இணைக்க முடியும். கண்கெட்ட பின் சூரியநமஸ்காரம் பண்ண முடியாது.
இனப்பிரச்சினைக்கான அதிகுறைந்த பட்ச அரசியல் தீர்வாக ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்ட ஒரு மொழிவாரி சுயாட்சிமாநிலம் தான் (வடக்குக்கிழக்கு இணைந்த) அமைய முடியும் என்பதே இக்கட்டுரையாசிரியரின் கருத்தாகும்.
ஆனால் நாம் விரும்புவது வேறு. யதார்த்தம் வேறு. எதிர்காலத்தில் அரசியலமைப்பு ரீதியாகவோ அல்லது நீதிமன்ற நடவடிக்கைகளினூடாகவோ வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணைவதற்குரிய சாத்தியப்பாடுகள் மிக அரிதாகவே காணப்படுகின்றன. இந்த நடைமுறை யதார்த்தத்தையும், அரசியல் களநிலையையும் புரிந்து கொண்டு கிழக்கு மாகாண சபையைத் தமிழர்கள் தங்கள் வசம் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதற்குத் தடையை ஏற்படுத்தாது கிழக்குமாகாணத் தமிழர்கள் தங்கள் தலைவிதியைத் தாங்களே தீர்மானிப்பதற்கு இடமளித்து எதிர்காலத்தில் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடாது ஒதுங்கிவிடுவதே அறிவுபூர்வமான இராஜதந்திர அணுகு முறையாகும்.
வடக்குக் கிழக்கு இணைந்த தனிமாகாண சபை மீண்டும் உருவாகும் காலம் வரையாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதனைச் செய்ய வேண்டும். இந்த அரசியல் செயற்பாடு நாம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் தீராத நோயொன்றைக் குணப்படுத்தி உயிரொன்றைக் காப்பாற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் அறுவைச் சிகிச்சை போன்று தவிர்க்க முடியாததும், விஞ்ஞான பூர்வமானதுமாகும்.
இதனை நடை முறைப்படுத்துவதற்கான மாற்று அரசியல் சிந்தனை – புதியஅரசியல் யுக்தி- பொறிமுறை கிழக்கு மாகாணத் தமிழர்களிடையே இப்போதிருந்தே உருவாகி வளர வேண்டும். ஏனெனில் அழுதும் பிள்ளை அவளே பெற வேண்டும்.
இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து இன்றுவரை 65 வருடகால அரசியலைப் பொறுத்தவரை வாடகை வீட்டில் வசித்து வந்த கிழக்கிலங்கைத் தமிழருக்கு இன்று சொந்த வீடொன்றின் தேவையை 08.09.2012 ல் நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் முடிவுகளும், விளைவுகளும் உணர்த்தியுள்ளன.
எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத் தமிழர்களுக்கு ஓர் சுயமான மாற்று அரசியல் பாதை (தளம்) தேவை. அந்த மாற்று அரசியல் தளம் என்பது சிங்களப் பேரினவாதக்கட்சியொன்றில் சங்கமமாகி விடுவதல்ல. பதிலாக கிழக்குத் தமிழர்கள் எதிர்நோக்கும் சமூக, பொருளாதார, அரசில் பிரச்சினைகளின் வடிவங்களைப் பொறுத்துச் சுயமான அரசியல் தளத்தில் நின்று கிழக்குத் தமிழர்களைச் சமூக, பொருளாதார, அரசியல் மேம்பாட்டை நோக்கி அறிவுபூர்வமாக ஆற்றுப்படுத்தும் பொறிமுறையே ஆகும்.
அப்பொறி முறையானது எந்த இனத்திற்கோ, எந்த மதத்திற்கோ, எந்தப் பிரதேசத்திற்கோ, எந்தக் கட்சிக்கோ எதிரானதல்ல. இத்தகைய பொறிமுறை யொன்றினுள் தற்போது சகல அரசியல் கட்சிகளிலும் அங்கம் வகிக்கும் சகல கிழக்குத் தமிழ் அரசியல்வாதிகளும் – கிழக்குத் தமிழர்களிடையேயுள்ள சமூக அக்கறை கொண்ட சகல கல்விமான்களும் -எழுத்தாளர், கலைஞர், ஊடகவியலாளர்களும் -தொழில்சார் நிபுணர்களும், ஆர்வலர்களும் கட்சி அரசியல் போட்டா போட்டிகளுக்கப்பால் மக்களுக்கான அரசியல் கலாசாரமொன்றினைக் கட்டியெழுப்பும் நோக்கமாகக் கொண்டு உள்வாங்கப்படவும் அணிதிரளவும் வேண்டும்.
இப்பொறி முறையினூடாக எதிர்காலத்தில் கிழக்கிலிருந்து மேற்கிளம்பக் கூடிய தமிழ் அரசியல் சக்தியானது ஈழத் தமிழ்த் தேசிய இனத்திற்கு நன்மையளிக்கக் கூடிய பொதுவான வேலைத்திட்டமொன்றின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பங்காளியாக இணைந்து செயற்படவும் தடையேதும் இல்லை.
தம்பியப்பா கோபாலகிருஸ்ணன்