9/25/2013

| |

கென்யாவில் ஆயுததாரிகளின் முற்றுகையை முடிவுக்கு கொண்டுவர படையினர் போராட்டம்

கென்ய தலைநகர் நைரோபியிலுள்ள வணிக வளாகத்தில் கடந்த நான்கு தினங்களாக தொடரும் ஆயுததாரிகளின் முற்றுகையை முடிவுக்கு கொண்டுவர அந்நாட்டு படையினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். குறித்த கட்டிடத்திற்குள் நுழைந்திருக்கும் படையினர் அங்கு தனது கட்டுப்பாட்டை நிலை நிறுத்தி வருவதாக பாதுகாப்பு தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் நேற்று செவ்வாய்க்கிழமை காலையிலும் மேற்படி வெஸ்ட்கேட் கட்டிட தொகுதியிலிருந்து வெடிச்சத்தங்களும் துப்பாக்கிச் சூட்டு சத்தங்களும் கேட்டவாறு இருந்ததாக அந்த இடத்திற்கு அருகில் இருப்போர் குறிப்பிட்டுள்ளனர்.
அல் ஷபாப் ஆயுதக் குழு பொறுப்பேற்றுள்ள இந்த முற்றுகை நடவடிக்கையில் குறைந்தது 69 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு 170 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
இதனிடையே ஆயுததாரிகளில் இரு அமெரிக்கர்களும் பிரிட்டன் நாட்டு பெண் ஒருவரும் இருப்பதாக கென்ய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தொலைக்காட்சி செய்திக்கு பேட்டியளித்த கென்ய வெளியுறவு அமைச்சர் அமினா மொஹமட், 18 அல்லது 19 வயதுகள் உடைய சோமாலிய அல்லது அரபு பூர்வீகத்தைக் கொண்ட அமெரிக்கர்களும் பிரிட்டனைச் சேர்ந்த பெண் ஒருவரும் தாக்குதல்தாரிகளில் இருப்பதாக குறிப்பிட்டார்.
ஆனால் இந்த தகவல் கென்ய உள்துறை அமைச்சர் முன்னர் வெளியிட்ட தகவலுக்கு முரணாக உள்ளது. உள்துறை அமைச்சரின் தகவலில் தாக்குதல்தாரிகள் அனைவரும் ஆண்கள் என்றும் ஒருசிலர் பெண்கள் போல் ஆடை அணிந்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதில் கடந்த 2005 இல் லண்டன் தாக்குதலில் ஈடுபட்ட ஒருவரின் விதவை மனைவியான சமன்தா லோத்வை என்ற பெண் மேற்படி முற்றுகையில் பங்கேற்றிருப்பதாக ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டிருந்த நிலையிலேயே கென்ய உள்துறை அமைச்சர் பிரிட்டன் பெண் ஒருவரின் தொடர்பு பற்றி தகவல் அளித்துள்ளார்.
எனினும் தாக்குதல்தாரிகள் குறித்த அடையாளம் பற்றி இன்னும் உறுதியாகவில்லை என்றும் அது பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பிரிட்டன் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தொடர்ந்தும் 63 பேர் குறித்து தகவல் இல்லை என கென்ய செஞ்சிலுவை சங்கம் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும் கட்டிடத்திற்குள் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆயுததாரிகளே எஞ்சி இருப்பதாக சம்பவ இடத்தில் இருக்கும் கென்ய அதிகாரி ஒருவர் நேற்றுக் காலை தெரிவித்திருந்தார்.
அத்துடன் இதுவரை மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருப் பதாகவும் 10 பேர் கைது செய்யப்பட்டி ருப்பதாகவும் கென்ய அதிகாரிகள் முன்னர் கூறியிருந்தனர்.
சோமாலியாவில் கென்ய படையினரின் இராணுவ நடவடிக்கைக்கு பழிவாங்கும் முகமாகவே இந்த தாக்குதல் முன்னெடுக்கப்படுவதாக சோமாலிய இஸ்லாமிய ஆயுதக் குழுவான அல் ஷபாப் குறிப்பிட்டது.
கென்ய உள்துறை அமைச்சர் ஜோசப் ஒலெலென்கு திங்கட்கிழமை இரவு பி.பி. சிக்கு அளித்த தகவலில், முற்றுகையை முடிவுக்கு கொண்டு வரும் இராணுவ நடவடிக்கை தொடர்வதாகவும், அது இறுதிக் கட்டத்தை எட்டி இருப்பதாகவும் கூறினார்.
“தீவிரவாதிகள் தப்பிச் சென்றோ அல்லது கட்டிடத்தில் ஒளிந்திருக்கவோ வாய்ப்பு இருக்கிறது. தற்போதைய நிலையில் அனைத்து மாடிகளும் எமது கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவர்களுக்கு தப்பிச் செல்ல எந்த வழியும் இல்லை” என்று அவர் குறிப்பிட்டார்.
ஆயுததாரிகளிடம் பிடிபட்டிருந்த அனைத்து பணயக் கைதிகளும் விடுவிக்கப்பட்டிருப்பதாக நம்புவதாக உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை வணிக வளாக பகுதியில் நான்கு பாரிய வெடிப்புகள் கேட்டதாக அருகில் இருக்கும் குடியிருப்பாளர்கள் கூறியிருந்தனர். தொடர்ந்து திங்கட்கிழமை இரவு குறித்த கட்டிடத்தில் இருந்து தீப்பிளம்புகள் மற்றும் புகை மூட்டங்கள் வெளிவந்தன.
கடந்த சனிக்கிழமை 12 முதல் 15 ஆயுததாரிகள் வெஸ்ட்கேட் கட்டிடத் தொகுதிக்குள் ஊடுருவி அங்கிருக்கும் கடைகள் மற்றும் பணியாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு மற்றும் கையெறி குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல்களில் 6 பிரிட்டன் நாட்டவர், பிரான்ஸ், கனடா, நெதர்லாந்து, அவுஸ்திரேலியா, பெரு, இந்தியா, கானா, தென்னாபிரிக்க மற்றும் சீன நாட்டவர்கள் உட்பட குறைந்த 18 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் ஒரு கொடூரமான செயல் என விபரித்திருக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இது தொடர்பில் கென்யாவுக்கு அமெரிக்கா முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதலில் காயமடைந்தோருக்கு இரத்ததானம் வழங்க ஆயிரக்கணக்கான கென்ய நாட்டவர்கள் முன்வந்துள்ளனர்.
சோமாலிய அரச படைக்கு உதவும் ஆபிரிக்க ஒன்றிய படைகளில் சுமார் 4000 கென்ய நாட்டு வீரர்கள் இணைந்துள்ளனர். எனினும் இந்த வீரர்களை வாபஸ்பெறும் படி அல் ஷபாப் கென்யாவுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.
சோமாலியாவில் இஸ்லாமிய தேசம் ஒன்றை உருவாக்க அல் ஷபாப் போராடி வருகிறது.
தெற்கு சோமாலியாவின் பெரும் பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அல் ஷபாப் கடந்த இரண்டு ஆண்டுகளில் பிரதான நகரங்களில் இருந்து பின்வாங்கியுள்ளது. சோமாலியாவின் ஒருசில கிராமப் பகுதிகள் மாத்திரம் தற்போது அல் ஷபாப் வசமுள்ளது.