9/25/2013

| |

புஷெர் அணு மின் நிலையம் ஈரானுக்கு ஒப்படைப்பு



ஈரானிற்கு ரஷியா கட்டியமைத்த முதலாவது அணு மின் நிலையமான புஷேர் அணு மின் நிலையத்தை அந்நாடு 23ஆம் நாள் கையகப்படுத்தியது. ஈரான் மற்றும் ரஷியாவின் தொடர்புடைய வாரியங்கள் நடத்திய ஒப்படைப்பு விழாவுக்குப் பின், இந்நிலையத்தின் முதலாவது மின்னாக்கி அமைப்பு அதிகாரப்பூர்வமாக ஈரான் தொழில் நுட்பப் பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
புஷேர் அணு மின் நிலையத்தின் இயக்கப் பாதுகாப்பை உத்தரவாதம் செய்யும் வகையில், ரஷிய நிபுணர்கள் அடுத்த 2 ஆண்டுகள் இந்நிலையத்தில் தங்கி தொழில் நுட்ப ஆலோசனையையும் உதவியையும் வழங்குவர் என்று ஈரான் துணை அரசுத் தலைவரும் அணு ஆற்றல் அமைப்பு தலைவருமான அலி அக்பர் சலேஹி ஒப்படைப்பு விழாவில் கூறினார். புஷேர் அணு மின் நிலையம் ஈரான் மக்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது, ஈரான் மக்களின் 37 ஆண்டுகள் தொடரும் கனவை நிறைவேற்றியுள்ளது. ரஷியாவுடன் ஒத்துழைப்பு மூலம் புதிய அணு மின் நிலையத்தை ஈரான் கட்டியமைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
புஷேர் அணு மின் நிலையத்தின் கட்டுமானம் 1976ஆம் ஆண்டு ஜெர்மனியின் சீமென்ஸ் நிறுவனத்தால் துவக்கப்பட்டது. அமெரிக்காவின் எதிர்ப்பு காரணமாக, சீமென்ஸ் நிறுவனம் ஈரானுடனான ஒத்துழைப்பை நிறுத்தியது. 1992ஆம் ஆண்டு பிப்ரவரி, ரஷியாவின் உதவியுடன் இந்நிலையத்தின் கட்டுமானம் மீண்டும் துவங்கியது. ஒப்பந்தப்படி, இந்நிலையம் 1999ஆம் ஆண்டு ஜுலை திங்களில் கட்டிமுடிக்கப்பட வேண்டும். ஆனால் அரசியல், நிதி, தொழில் நுட்பம் உள்ளிட்ட பல காரணங்களால், 2011ஆம் ஆண்டு செப்டெம்பர் திங்கள் தான் இந்நிலையம் அதிகாரப்பூர்வமாக இயங்கி மின்சார உற்பத்தியைத் தொடங்கியது.
புஷேர் அணு மின் நிலையம் பல ஆண்டுகளாக சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் கண்டிப்பான கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. அதன் ஆக்கப்பணி நோக்கம் பற்றிய சர்ச்சை குறைவு. அணு கழிவுப் பொருட்கள் தவறான முறையில் பயன்படுத்தப்படாமல் தவிர்க்கும் வகையில், ரஷியா ஈரான் ஆகிய இரு நாடுகள் உடன்படிக்கை ஒன்றை உருவாக்கியுள்ளன. அதாவது, பயன்படுத்தப்பட்ட எரிபொருள் துண்டுகள் அனைத்தும் ரஷியாவில் கையாளப்பட அவற்றை ரஷியாவுக்கு ஈரான் அனுப்ப வேண்டும்.
ஜப்பானில் நிகழ்ந்த அணு மின் நிலையத்தின் கசிவு விபத்துக்குப் பின், அணு ஆற்றலின் பாதுகாப்பில் பல்வேறு நாடுகள் பெரும் கவனம் செலுத்தி வருகின்றன. தற்போது புஷேர் அணு மின் நிலையத்தின் பாதுகாப்பு தான் கவனத்தை ஈர்க்கும் முக்கிய அம்சமாகும். முதலில், இந்நிலையத்தின் கட்டுமானக் காலம், 37 ஆண்டுகள் நீளமானது. அதில் சில சாதனங்கள் பழுதடைந்து, விபத்து ஏற்படும் ஆபத்து நிலவுகிறது. இரண்டாவதாக, ஈரான், நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படும் நாடாகும். இவ்வாண்டு ஏப்ரல் திங்கள் கடும் உரியிழப்பை ஏற்படுத்திய நிலநடுக்கத்தின் மையப்புள்ளி, புஷேர் அணு மின் நிலையத்துக்கு சுமார் 80 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. அப்போது உள்ளூரிலும் அண்டை நாடுகளில் கூட பதட்ட சூழ்நிலையை ஏற்படுத்தியது. மேலும், 2 ஆண்டுகளுக்கு முன் இந்நிலையத்தின் கணினி அமைப்பு முறை ஸ்டக்ஸ்நெட்(stuxnet) எனும் வைரஸால் தாக்கப்பட்டது. இதுவும் பாதுகாப்பு பற்றிய கவலையை ஏற்படுத்தியது.