எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில்கள் அபிவிருத்தி முயற்சிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆசியுடன், பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பசுபதி சீவரத்தினத்தின் வழிகாட்டலில் தென்னை, பனை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் சமாசத் தலைவர் எஸ். கணேசன் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார்.மரம் ஏறும் தொழிலாளர்கள் அடங்கலாக உழைக்கும் மக்களின் சார்பில் இத்தேர்தலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஆகியோரால் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார் என்றும் இதில் இவருக்கு கிடைக்கப் பெறுகின்ற வெற்றி உழைக்கும் மக்கள் அனைவருக்கும் கிடைக்கின்ற வெற்றி ஆகும் என்றும் பிரசார, அறிவூட்டல் மற்றும் விழிப்புணர்வூட்டல் கூட்டங்களில் தெரிவித்து வருகின்றார் கணேசன்.
மரம் ஏறும் தொழிலாளர்கள் அடங்கலாக உழைக்கும் மக்கள் அனைவரும் இத்தேர்தலில் ஒருமித்து உழைக்கும் மக்களின் பலத்தை காட்ட வேண்டும் என்று அறைகூவல் விடுத்து வருகின்ற இவர் இதன் மூலமாக உழைக்கும் மக்களின் பிரதிநிதித்துவம் நேரடியாக மாகாண சபைக்கு கிடைக்கப் பெறும் என்றும் இது மாகாண சபை ஊடாக இம்மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வழி ஏற்படுத்திக் கொடுக்கும் என்றும் விளங்கப்படுத்துகின்றார்.
மட்டும் அல்லாமல் இத்தேர்தலில் பலத்தை காட்டுகின்றமை மூலமாக மரம் ஏறும் தொழிலாளர்கள் அடங்கலாக உழைக்கும் மக்களின் நேரடிப் பிரதிநிதிகள் எதிர்காலத்தில் நாடாளுமன்றம் செல்கின்றமைக்கு சந்தர்ப்பம் கனியும் என்றும் சொல்லி விழிப்புணர்வூட்டுகின்றார்.
இவர் ஒரு மரம் ஏறும் தொழிலாளி என்பதை எவ்வித சங்கடமும் இன்றி வெளிப்படையாகவே கூறுகின்றார்.
தென்னை, பனை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களில் இவ்வாறான பிரச்சாரங்களை முடுக்கி விட்டு உள்ளார்.