9/30/2013

| |

கிழக்கு மாகாண அரசு ஒரு வருடத்தில் சாதித்தது என்ன? முன்னைய ஆட்சியுடன் ஓப்பிடுகையில் தற்போதைய ஆட்சியில் ஒருவித தேக்கநிலை

இலங்கையின் தற்போது கிழக்கு மாகாணத்தை ஆட்சி செய்துவரும் அரசு பதவிக்கு வந்து ஒரு வருடமாகிறது.
மக்களுக்காக பல பணிகளை தாங்கள் செய்துள்ளதாக அரசு கூறினாலும், ஆளும் கூட்டணியில் உள்ளவர்களே அரசின் மீது தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
இலங்கையில் கிழக்கு மாகாண சபையின் தற்போதைய அரசாங்கம் பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ள நிலையில் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு அமைய செயல்பாடுகள் இல்லை என்பதை சபையின் ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களும் ஓப்புக்கொள்கிறார்கள்.
முன்னைய ஆட்சியுடன் ஓப்பிடுகையில் தற்போதைய ஆட்சியில் ஒருவித தேக்கநிலை தென்படுவதாக பொதுமக்களிடம் பேச்சு அடிபடுகிறது..
பொதுமக்களிடையே காணப்படும் இத்தகைய கருத்து பற்றிதொடர்பாக பிபிசி தமிழோசை மாகாண சபையின் ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டது.
பொதுவாக விமர்சனங்கள் உள்ளதை ஆளும் தரப்பை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திகாந்தன் ஒப்புக்கொண்டார்.
மாகாணசபை அரசின் மூலமாக குறிப்பிட்டு சொல்லக் கூடிய அபிவிருத்தி நடவடிக்கைகளோ புதிய சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளோ இடம்பெறவில்லை என்று அவர் கூறுகிறார்.
கிழக்கு மாகாண அமைச்சர்கள் வாரியத்தில் நான்கு முஸ்லிம்களும் சிங்களர் ஒருவரும் அமைச்சர்களாக பதவி வகிக்கின்றார்கள். தமிழர்கள் எவரும் அமைச்சராக இல்லை.
சிற்றூழியர் நியமனம் தொடக்கம் அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடுகள் வரை தமிழர்களுக்கு அமைச்சர்களினால் பாராபட்சம் காட்டப்படுவதாக பிரதான எதிர்கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் இரா. துரைரெத்தினம் குற்றஞ்சாட்டுகிறார்.

பொம்மை ஆட்சி

கிழக்கு மாகாண சபையில் மத்தியில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி ஆட்சி அமைப்பதற்கு பெருன்பான்மை தேவைப்பட்டபோது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி அமைக்க ஆதரவு வழங்கியது. அக்கட்சியை சேர்ந்த இருவர் அமைச்சர்களாகவும் தற்போது பதவி விக்கின்றார்கள்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸ் பங்காளிக் கட்சியாக இருந்தாலும் அக்கட்சியை சேர்ந்த உறுப்பினரான ரம்ழான் அன்வர் தற்போதைய ஆட்சி தன்னைப் பொறுத்தவரை பொம்மை ஆட்சி என்கிறார்.
முஸ்லிம் ஒருவர் தற்போது முதலமைச்சர் பதவியிருந்தும் காணி பிரச்சினை உட்பட சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெறமுடியாத நிலையில் அந்த பதவியிலும் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள் என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

அமைச்சர் மறுப்பு

மாகாண சபையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எத்தகைய கருத்துக்களை கொண்டிருந்தாலும் கிழககு வாழ் மூவினங்களின் எதிர்பார்ப்புகளுக்கு அமைய தமது செயல்பாடுகள் இருப்பதாக அமைச்சர்கள் வாரியத்தின் பேச்சாளரும் மாகாண வீதி அபிவிருத்தி , வீடமைப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சரான எம். எஸ். உதுமாலெப்பை கூறினார்.
தனது அமைச்சின் நிதி ஒதுக்கீடுகளில் இனரீதியான பாகுபாடுகள் இல்லை என்றும் அவர் வாதிட்டார்.