9/16/2013

| |

சிரிய இரசாயன ஆயுதம் தொடர்பில் அமெ., ரஷ்யாவுக்கிடையில் உடன்பாடு

சிரியாவின் இரசாயன ஆயுதங்களை அழிப்பதற்கு உடன்பாடு ஏற்பட்டுள்ள திட்டத்தை கடைபிடிப்பதில் சிரிய அரசு தோல்வியடைந்தால் பாரிய விளைவை சந்திக்க வேண்டி வரும் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா எச்சரித்துள்ளார்.
சிரியா தொடர்பிலான திட்ட வரைபு குறித்து அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இணக்கப்பாடு எட்டப்பட்டது. இதன்படி சிரியா தன்னிடம் இருக்கும் இரசாயன ஆயுதம் குறித்த விபரங்களை ஒரு வாரத்திற்குள் கட்டாயம் வெளியிட வேண்டும் என உடன்படிக்கையில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. பின்னர் இரசாயன ஆயுதத் தளங்கள் 2014 நடுப் பகுதியில் முற்றாக அகற்றப்படும்.
இந்த செயற்திட்டத்தை கடைபிடிக்க சிரியா தவறும் பட்சத்தில் அதன் மீது இராணுவ நடவடிக்கை மேற்கொள்வதற்கான ஐ. நா. தீர்மானத்திற்கு சாத்தியம் ஏற்படும். எனினும் இந்த விடயத்தில் ஐ. நாவின் இணக்கம் இன்றியே நடவடிக்கை எடுக்க ஜனாதிபதிக்கு உரிமை உண்டு என அமெரிக்க நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்கா, ரஷ்யாவுக்கு இடையிலான உடன்பாட்டுக்கு சீனா, பிரான்ஸ், பிரிட்டன், ஐ. நா. மற்றும் நேட்டோ என அனைத்து தரப்பும் தனது ஆதரவை வெளியிட்டுள்ளன. ‘இந்த உடன்பாடு சிரிய பதற்றத்தை குறைக்கும்’ என சீன வெளியுறவு அமைச்சர் வங் யீ நேற்று பீஜிங்கில் வைத்து குறிப்பிட்டார்.
எனினும் இது குறித்து சிரியா தரப்பில் இன்னும் உறுதியான பதில் கிடைக்கவில்லை. இந்த உடன்படிக்கை முக்கியமான நடவடிக்கை என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா நேற்று விடுத்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். ஆனால் சிரியா தனது மக்களின் தேவையை செயற்படுத்த வேண்டும் என ஒபாமா அழுத்தம் கொடுத்துள்ளார். ‘இராஜதந்திர முயற்சி தோல்வியடைந்தால், அமெரிக்கா தனது நடவடிக்கைக்கு தயாராக உள்ளது’ என்று ஒபாமா எச்சரித்தார்.
சிரியா மீதான இராணுவ நடவடிக்கைக்கு தயாரான நிலையிலேயே படைகள் நிறுத்தப்பட்டிருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் குறிப்பிட்டுள்ளது.
சிரிய தலைநகர் டமஸ்கஸின் புறநகர் பகுதியில் கடந்த ஓகஸ்ட் 21 ஆம் திகதி இடம்பெற்ற இரசாயன தாக்குதலுக்கு அமெரிக்கா, பஷர் அல் அஸாத்தின் சிரிய அரசு மீது குற்றம் சாட்டுகிறது. ஆனால் இதனை மறுக்கும் அசாத் அரசு இந்த தாக்குதலை சிரிய கிளர்ச்சியாளர்களே நடத்தியதாக கூறி வருகிறது. இந்நிலையில் சர்வதேச இரசாயன ஆயுத உடன்படிக்கையில் இணைய சிரிய அரசு அண்மையில் இணக்கம் வெளியிட்டது. இதன்படி சிரியா எதிர்வரும் ஒக்டோபர் 14 ஆம் திகதி இந்த உடன்படிக்கை நாடுகளில் உள்ளடக்கப்படும் என ஐ. நா. குறிப்பிட்டுள்ளது. சிரியா தொடர்பிலான அமெரிக்கா, ரஷ்யாவின் திட்டவரைபின் விபரத்தை அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெர்ரி மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் சர்கெய் லவ்ரொவ் ஜெனீவாவில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் வைத்து வெளிப்படுத்தினர். இந்த திட்டம் மிகப் பெரிய எதிர்பார்ப்பைக் கொண்டது என கெர்ரி நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த உடன்படிக்கைக்கு அமைய சிரியா தனது கையிருப்பில் இருக்கும் இரசாயன ஆயுதங்களின் விபரத்தை ஒரு வாரத்திற்குள் அம்பலப்படுத்தினால், அதன் அனைத்து உற்பத்தி உபகரணங்களும் எதிர்வரும் நவம்பரில் அழிக்கப்படும். பின்னர் அனைத்து இரசாயன ஆயுதங்களும் சிரியாவிலிருந்து அகற்றப்பட்டு அவை 2014 நடுப்பகுதியில் அழிக்கப்பட்டுவிடும்.
இதில் சிரியா தொடர்பில் ஐ. நா. சாசனத்தின் 7 ஆவது கட்டுரையின் கீழ் தீர்மானம் கொண்டுவரப்படும் என ரஷ்யா, அமெரிக்கா இருதரப்பும் உறுதி செய்தன. 7 ஆவது கட்டுரையின்படி ஏற்கப்பட்ட உடன்பாட்டை சிரியா கடைபிடிக்க தவறினால் அதன் மீது படை பிரயோகம் மேற்கொள்ள அனுமதி அளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
எனினும் படை நடவடிக்கை இதன் கடைசி கட்ட தீர்வாகவே இருக்கும் என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார். ‘படை நடவடிக்கை குறித்து இந்த உடன்பாட்டில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதேபோன்று தானாக அமுலுக்கு வரும் எந்த நடவடிக்கை குறித்தும் இதில் குறிப்பிடப்படவில்லை. உடன்படிக்கையை மீறும் எந்த செயலும் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் சந்தேகமற்ற முறையில் உறுதி செய்யப்பட வேண்டும்’ என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டார்.
சிரியாவின் கையிருப்பில் இருக்கும் 1,000 தொன் இரசாயன ஆயுதங்கள் குறித்து ரஷ்யா, அமெரிக்காவுக்கு இடையில் இணக்கம் எட்டப்பட்டது என்று அமெரிக்கா உத்தியோக பூர்வமாக அறிவித்தது. சிரியாவிடமிருக்கும் இரசாயன ஆயுதங்கள் அங்கு 45 தளங்களில் வைக்கப்பட்டிருப்பதாக அமெரிக்கா நம்புகிறது. இவைகளில் பாதியளவானவை இரசாயன முகவர்களுக்கு கையாளத்தக்கவையாக இருப்பதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது
ஆனால் அமெரிக்காவின் தரவுகளை ரஷ்யா ஏற்க மறுத்துள்ளது. இரசாயன ஆயுத தளங்கள் குறித்த எண்ணிக்கையும் நிராகரிக்க ரஷ்யா, அனைத்து இரசாயன ஆயுதங்களும் அரசின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக கூறுகிறது.
பீஜிங் சென்றிருக்கும் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் லோரன்ட் பொபியன்ஸ், சிரியா விடயத்தில் இந்த உடன்படிக்கை முக்கிய முன்னேற்றம் என விபரித்துள்ளார். அதேபோன்று பிரிட்டன் வெளியுறவுச் செயலாளர் வில்லியம் ஹேக் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘இந்த உடன்படிக்கையை முழுமையாக கடைபிடிக்கும் முழுப்பொறுப்பும் இப்போது அசாத் அரசிடமே தங்கியிருக்கிறது’ என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்த உடன்படிக்கை சிறப்பான செய்தி என சிரியாவுக்கான முன்னாள் பிரிட்டன் தூதுவர் அன்ட்ரூ கிரீன் வரவேற்றிருக்கிறார். இந்த உடன்பாடு மூலம் சிரியா மீதான இராணுவ நடவடிக்கை கைவிடப்பட்டிருப்பது மற்றும் மற்றுமொரு இரசாயன ஆயுத தாக்குதலுக்கான அபாயம் இல்லாமல் போயிருப்பது இந்த உடன்பாட்டின் முக்கிய அம்சங்கள் என அவர் கூறியுள்ளார்.
ஆனால் அமெரிக்காவின் முன்னாள் துணை பாதுகாப்புச் செயலாளர் போல் வொல்வர் இதனை நிராகரித்துள்ளார். இந்த உடன்பாடு மூலம் சிரியா மீதான கடும் நடவடிக்கைக்கான வாய்ப்பு கைவிடப்பட்டிருக்கிறது என்றார்.
மறுபுறத்தில் அசாத் அரசுக்கு எதிராக போராடும் கிளர்ச்சியாளர்களின் சிரிய சுயாதீனப் படை அமெரிக்க, ரஷ்யாவின் உடன்பாட்டை நிராகரித்துள்ளதோடு, தொடர்ந்தும் போராடுவதாக உறுதி அளித்துள்ளது.
‘இந்த உடன்படிக்கையில் எதிர்பார்க்கப்பட்ட எதுவும் உள்ளடக்கப்பட வில்லை’ என்று குறிப்பிட்ட கிளர்ச்சிப் படையின் தளபதி ஜெனரல் சலிம் இத்ரிஸ், ரஷ்யா, சிரிய அரசுக்கு மேலும் கால அவகாசம் வழங்கி இருக்கிறது என்று விமர்சித்தார்.
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெர்ரி நேற்று இஸ்ரேல் சென்று பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்தும் அவர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் சென்று பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் சவூதி நாட்டு வெளியுறவு அமைச்சர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
மறுபுறத்தில் சிரியாவில் அரச படைக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதல் நீடிக்கிறது. குறிப்பாக கடந்த ஒகஸ்ட் 21 ஆம் திகதி இரசாயன தாக்குதல் இடம்பெற்ற டமஸ்கஸ் புறநகர் பகுதியில் உக்கிர மோதல் நீடிப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன.
கடந்த 2011 ஜனாதிபதி பஷர் அல் அஸாத் அரசுக்கு எதிராக ஆரம்பமான மக்கள் எழுச்சி போராட்டத்தை தொடர்ந்து அங்கு நீடிக்கும் உள்நாட்டு யுத்தத்தில் இதுவரை 100,000 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மில்லியன் கணக்கான சிரிய நாட்டவர் அயல் நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். அதேபோன்று உள்நாட்டிலும் மில்லியன் கணக்கானோர் அகதிகளாக உள்ளனர்.