9/03/2013

| |

அம்பாறை மாவட்டம்: தமிழ்க் கூட்டமைப்பை ஓரங்கட்டி தமிழ் மக்களை அரசாங்கத்தின் பங்காளியாக இணைக்க திட்டம்

தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் இருப்பிடமாக பல வருடகாலமாக இருந்து வரும் அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்களிலிருந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வந்து இன்றைய அரசின் பங்காளிகளாக தமிழ் மக்களை இணைத்துக் கொள்வதற்கான பரந்தளவிலான முன் முயற்சிகள் மிக அவசரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அம்பாறை மாவட்டத்தில் அதிக தமிழ் வாக்காளர்களைக் கொண்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவு அக்கரைப்பற்றில் இதன் முதலாவது கூட்டம் மட்டுப்படுத்தப்பட்ட சமூக தலைவர்களை உள்ளடக்கியதாக இடம்பெற்றுள்ளது.
இக்கூட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் காங்கிரஸ் மற்றும் ஜனநாயக வழிக்கு திரும்பி அரசியல் செய்து வரும் பிரதிநிதிகள் உட்பட மாவட்டத்தின் பல தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் முழுமையாக வெளிவராத நிலையில் தமிழ்க் கூட்டமைப்பை இம் மாவட்ட தமிழ் பகுதிகளிலிருந்து ஓரங்கட்டி அரசின் பங்காளிகளாக மக்களை இணைத்து கல்வி, பொருளாதார, அபிவிருத்திகளை முழுமையாக தமிழ் பிரதேசங்களுக்கு ஏற்படுத்துவதே பிரதான இலக்கு என தெரிய வருகின்றது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஒழுங்கு செய்தவர்களாக முன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீவிர பங்காளிகளாக உழைத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.