காணிகளின் பூரண அதிகாரம் மத்திய அரசுக்கே உரியது
உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு
அரச காணிகளின் பூரண அதிகாரம் மத்திய அரசுக்கு உரியதென உச்ச நீதிமன்றம் நேற்றுத் தீர்ப்பளித்தது. அக்காணிகள் தொடர்பாக செயற்படும் அதிகாரம் மத்திய அரசினால் வழங்கப்பட்டால் மட்டும், அது தொடர்பாகச் செயற்படும் மட்டுப்படுத்தப்பட்ட சில அதிகாரங்கள் மட்டும் மாகாண சபைக்கு உரியதென உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதன் பிரகாரம் அரச காணியை பயன்படுத்துதல், நிர்வாகம், பராமரிப்பு ஆகியவை மத்திய அரசின் கொள்கை களுக்கும், சட்டப் பிரமாணங்களுக்கும் ஏற்றதாக மேற்கொள்ள மாகாண சபைக்கு இயலுமென்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சட்டத்துக்கு ஏற்ப மாகாண சபைக்கு அந்த மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரத்தை அமுலாக்குவதற்காக அரச காணிகள் தொடர்பாக அதிகாரம் வழங்கப்பட்டாலும் அரச காணிகள் தொடர்பாக செயற்பட ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரம் எந்த வகையிலும் குறையமாட்டா தென்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மாகாண சபை அட்டவணைக்கு உரிய காணி தொடர்பாக செயற் படும் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரத்தை வழங்கி னாலும் மத்திய அரசிடம் உள்ள சுயாதீன அதிகாரம் அவ்வாறே அமுலாகும். மக்களின் சுயாதீன அதிகாரத்தின் பேரில் அமுலாகும் உச்ச அதிகாரம் கொண்ட பாராளுமன்றம் மூலம் வழங்கப்படும் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரம் அங்கு செயற்படுத்தப்படலாம் என்றும் இந்தத் தீர்ப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
ஒற்றையாட்சி அரசியலமைப்பின் கீழ் காணி அதிகாரம் மத்திய அரசாங்கத்திடமே இருக்கிறதென்று பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தீர்ப்பளித்தார்.
பிரதம நீதியரசர் தலைமையிலான உச்ச நீதிமன்றத்தில் அவருடன் நீதியரசர் சிறி பவன் மற்றும் நீதியரசர் ஈவா. வனசுந்தர ஆகிய இருவரும் பெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சு தாக்கல் செய்த மேன்முறையீட்டைப் பரிசீலனை செய்த பின்னர் இந்தத் தீர்ப்பை ஏகமனதாக வழங்கியது.
நீதியரசர்கள் மூவரும் வெவ்வேறான தீர்ப்புகளை வழங்கிய போதிலும் மூன்று நீதியரசர்களும் அரசியல் சாசனத்தின் 13வது திருத்தச் சட்டத்தின் படி காணி அதிகாரம் மத்திய அரசாங்கத்திடம் இருக்கிறது என்பதை ஊர்ஜிதம் செய்தனர்.
ராகல, ஹல்கிரன்ஒய, எல்டெபர்ட் தோட்ட சுபிரிடன்ட் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் ஆலோசகரான எஸ். சீ. கே. டி. அல்விஸ் ஆகியோர் இந்த மேன்முறையீட்டை தாக்கல் செய்தனர்.
நீதியரசர் கே. சிறிபவன் இந்த மனு தொடர்பாக வழங்கிய தீர்ப்பில் இறைமை தொடர்பாக பாராளுமன்றம் வழங்கியுள்ள மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரம் மாகாண சபைக்கு இல்லையெனத் தெரிவித்திருந்தார்.
மாகாண சபை அட்டவணைக்கு இணங்க சொந்தமான காணிகளை பயன்படுத்துதல், நிர்வாகம் பராமரிப்பு ஆகியவற்றின் போது அது தொடர்பாக தேசியக் காணி ஆணைக்குழு தயாரித்த தேசிய கொள்கைக்கு ஏற்ப மாகாண சபை செயற்பட வேண்டும்.
நாட்டில் நிலவும் அரச காணிகள் தொடர்பான தேசிய கொள்கை தயாரிப்பானது ஆணைக் குழுவின் பொறுப்பு என்றும் உயர் நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரச காணிகளில் அவ்வாறு செயற்பட அரசினால் மாகாண சபைக்கு அதிகாரம் வழங்கினாலும் அந்த காணிகளின் உரிமை அரசிடமே தொடர்ந்து இருக்கும். அது மாறாது என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தின் உயர்ந்த மட்ட மத்திய அதிகாரம் தொடர்பாக தெளிவான குறிப்பு அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் இடம்பெற்றிருப்பதாக நீதியரசர் ஈவா வனசுந்தர தமது தீர்ப்பில் தெரிவித்திருந்தார். இதன் பிரகாரம் அரசுக்குரிய காணிச் செயற்பாடுகளில் அந்த ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் வண்ணம் நாட்டில் நிலவும் சட்டம் பிரமாணங்களை யாப்பின் வரைவுக்குள் செயற்படுத்த மாகாண சபைக்கு நேரிடுமென தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரச காணியில் இருந்து நபர் ஒருவரை அப்புறப்படுத்துவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்கும் அதிகாரம் தமக்கு இல்லையென 2000 ஆண்டு அக்டோபர் 25 ஆம் திகதி கண்டி மாகாண மேல் நீதிமன்றில் வழங்கிய தீர்ப்பையும் ஏகமனதாக உறுதிப்படுத்துவதாக உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழு தீர்மானித்துள்ளது.