9/26/2013

| |

அணுத்திட்டம் குறித்த பேச்சுக்கு தயாரென ஈரான் ஜனாதிபதி ஐ.நா.வில் அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி வரவேற்பு
ஈரானின் அணுத் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைக்கான கால எல்லையை வகுப்பதற்கும் அது குறித்து தீர்வை எட்டுவதற்கும் தயாராகி வருவதாக அந்நாட்டின் புதிய ஜனாதிபதி ஹஸன் ரவ்ஹானி அறிவித்துள்ளார்.
நியூயோர்க்கில் நடைபெற்றுவரும் ஐ. நா. சபையின் ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிகிழமை உரையாற்றிய ரவ்ஹானி, ஈரானுக்கு எதிராக விதிக்கப்பட்டிருக்கும் தடைகள் அத்துமீறிய செயல் என வர்ணித்தார். இதில் இரசாயன ஆயுத உடன் படிக்கைக்கு இணக்கம் தெரிவித்த சிரிய அரசை வரவேற்ற ரவ்ஹானி, அவ்வாறான ஆயுதங்களை பயன் படுத்துவதற்கு கண்டனம் தெரி வித்தார்.
முன்னதாக ஐ. நா.வில் உரை யாற்றிய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, ஈரான் ஜனாதிபதியின் சீர்திருத்த செயற்பாடுகளுக்கு வரவேற்பு தெரிவித்தார். ஈரானின் சர்ச்சைக்குரிய அணுத் திட்டம் குறித்து தீர்வை எட்டுவதற்கான இராஜதந்திர முயற்சிக்கு ஒபாமா வலியுறுத்தினார்.
இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஈரான் ஜனாதிபதியாகத் தேர்வான ரவ்ஹானி, தமது நாட்டின் சர்வதேச உறவில் வெளிப்படைத் தன்மையைப் பேண வாக்குறுதி அளித்திருந்தார்.
ஈரானின் சர்ச்சைக்குரிய அணு செயற்பாட்டால் அந்நாடு ஐ. நா. மற்றும் மேற்கு நாடுகளின் பல்வேறு தடைகளுக்கும் முகம் கொடுத்து வருகிறது. ஆனால் தனது யுரேனியம் செறிவூட்டும் திட்டம் அமைதியான நோக்கத்தைக் கொண்டது என தெஹ்ரான் தொடர்ந்தும் கூறிவருகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உட்பட அதன் கூட்டு நாடுகள் ஈரான் அணு ஆயுதம் உற்பத்தி செய்ய முயற்சித்து வருவதாக சந்தேகம் வெளியிடுகின்றன.
ஆனால் “ஈரானின் அச்சுறுத்தல்” என்று கூறப்படுவது வெறும் கற்பனையானது என்று ரவ்ஹானி கூறினார். “ஈரான் பிராந்தியத்திற்கோ உலகுக்கோ அச்சுறுத்தலாக இருக்காது. நாங்கள் அரசுகளை மாற்ற முயற்சிக்கவில்லை. ஈரான் மக்கள் அமைதியான அணு சக்தியை பெறும் உரிமையை மதிக்குமாறே நாம் கோரி வருகிறோம்” என்று அவர் ஐ. நா. வில் கூறினார்.
“பாரிய அழிவை ஏற்படுத்தும் இரசாயன ஆயுதம் மற்றும் ஏனைய ஆயுதங்களுக்கு எமது பாதுகாப்பு திட்டத்தில் இடமில்லை. அது எமது மதக்கொள்கைக்கும் முரணானது. ஈரானின் அமைதியான அணு திட்டத்திற்கு பாதகமான அனைத்து செயற்பாடுகளும் அகற்றப்படும்.” என்றும் அவர் கூறினார்.
எனினும் ஈரான் ஜனாதிபதியின் ஐ. நா. உரையை ஒரு கபட நாடகம் என இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹு வர்ணித்துள்ளார். “அவரது உரையில் ஈரான் இராணுவத்தின் அணு செயற்பாடுகளை நிறுத்துவதற்கு நடைமுறைச்சாத்தியமான எந்த விளக்கமும் கூறப்படவில்லை. ஐ. நா. பாதுகாப்பு சபையின் தீரமானத்தை கடைப்பிடிப்பது குறித்து எதுவும் கூறப்படவில்லை” என்று நெதன்யாகு வெளியிட்ட அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனிடையே ஐ. நா.வில் உரையாற்றிய ஒபாமா சிரிய இரசாயன ஆயுதங்கள் குறித்து ஐ. நாவில் கடுமையான தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். பரிந்தரைக்கப்படும் தீர்மானமானது சிரிய அரசு தனது உடன்பாட்டை மீறாமல் செயற்படுவதை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று ஒபாமா கூறினார்.
சிரியாவிடமுள்ள இரசாயன ஆயுதங்களை அழிக்கும் ரஷ்யா- அமெரிக்காவுக்கு இடையில் ஏற்பட்ட உடன்பாட்டுக்கு அமைய அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் சிரியாவின் அனைத்து ஆயுதங்களும் அகற்றப் படவுள்ளன. இது குறித்து மேற்கு நாடுகள் ஐ. நா. பாதுகாப்புச் சபையில் ஐ. நா. சாசனத்தின் 7ஆவது கட்டுரையின் கீழ் தீர்மானம் கொண்டுவர முயற்சிக்கிறது. எனினும் இந்த தீர்மானத்தின் மூலம் சிரியா மீது இராணுவ நடவடிக்கைக்கு வாய்ப்பு ஏற்படுவதால் அதற்கு ரஷ்யா எதிர்ப்பு வெளியிட்டு வருகிறது.
இதில் ஈரான் அணு விவகாரத்தில் அமைதியான தீர்வை அமெரிக்கா எதிர்பார்ப்பதாகக் கூறிய ஒபாமா ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க முயற்சிக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றார். முன்னதாக ரவ்ஹானி பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கொயிஸ் ஹொலன்டேவை சந்தித்து கைலாகு கொடுத்தார். அதன்போது ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கவில்லை என்பதை உறுதி செய்யும் என தாம் எதிர்பார்ப்பதாக ஹொலன்டே வலியுறுத்தினார்.
எனினும் ஒபாமாவுக்கும் ரவ்ஹானிக்கும் இடையில் சந்திப்பொன்று ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அது நிகழவில்லை. இந்நிலையில் ஈரானின் அணு செயற்பாடு குறித்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மொஹமட் ஜவாத் சாரிப் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெர்ரியை இன்று வியாழக்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான மிக அரிதான சந்திப்பாக இது கருதப்படுகிறது. இதன்போது ஈரான் வெளியுறவு அமைச்சர் பாதுகாப்புச் சபையின் ஏனைய நான்கு நிரந்தர அங்கத்துவ நாடுகளான பிரிட்டன், சீனா, பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர்கள் உட்பட ஜெர்மனி வெளியுறவு அமைச்சரையும் சந்திக்கத்திட்டமிட்டுள்ளார்.