சிரியா மீதான அமெரிக்க இராணுவ நடவடிக்கை தாமதம்கொங்கிரஸ் அவையில் அனுமதி கேட்கிறார் ஒபாமா
சிரியா மீதான இராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அந்நாட்டு கொங்கிரஸ் அவையிடம் அனுமதி கோரியுள்ளார். எனினும் இந்த தாமதம் சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் படையை பலப்படுத்தும் என சிரிய எதிர்த்தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். சிரிய எதிர்த்தரப்பான தேசிய கூட்டணியின் பேச்சாளர் நுவாஸ் சாபி, ஒபாமாவின் முடிவு அமெரிக்காவின் தோல்வியை காட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
சிரிய விவகாரம் தொடர்பில் ஒபாமா சனிக்கிழமை ஆற்றிய உரையைத் தொடர்ந்து சிரிய தலைநகர் டமஸ்கஸின் எதிர்த்தரப்பினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகள் மீது அரச படை தொடர்ந்து ஷெல் தாக்குதல் நடத்தியுள்ளது. அண்மையில் நடத்தப்பட்ட இரசாயன தாக்குதல் குற்றச்சாட்டை அமெரிக்கா, சிரிய அரச படை மீது சுமத்தியபோதும் சிரியா அதனை மறுத்துவருகிறது.
கடந்த ஓகஸ்ட் 14ஆம் திகதி டமஸ்கஸ் புறநகர் பகுதியில் இடம்பெற்ற இந்த இரசாயன தாக்குதலில் 1,429 பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. இந்த தாக்குதல் சிகப்பு எல்லையை தாண்டும் நடவடிக்கை என்றும் சிரியா மீதான அமெரிக்க தலையீட்டுக்கு வழிவகுப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
எனினும் சிரியா மீதான நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும் என்றும் தரைவழி படை நடவடிக்கை மேற்கொள்ளப்பட மாட்டாது என்றும் ஒபாமா சனிக்கிழமை அறிவித்தார். இதன் மூலம் சிரிய இராணுவ இலக்குகள் மீது குரூஸ் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்த வாய்ப்பு உள்ளதாக அவதானிகள் கருதுகின்றனர். எனினும் சிரியா மீதான இராணுவ நடவடிக்கை குறித்து கொங்கிரஸ் அவையின் அனுமதியை கோரி பிரேரணை ஒன்றை ஜனாதிபதி ஒபாமா சமர்ப்பித்துள்ளார்.
இதில் சிரியா இரசாயன ஆயுத தாக்குதல் நடத்துவதை தடுக்க படை நடவடிக்கை மேற்கொள்வது கட்டாயம் என ஜனாதிபதியின் பிரேரணையில் கோரப்பட்டுள்ளது. அமெரிக்க கொங்கிரஸ் அவை எதிர்வரும் செம்டெம்பர் 9 ஆம் திகதியே கூடவுள்ளது. எனவே அன்றைய தினம் வரை இராணுவ தலயீடுகளுக்கு வாய்ப்பு இல்லை என நம்பப்படுகிறது. இந்த முடிவு சிரிய தலைநகர் டமஸ்கஸில் பெரும் ஆறுதலை ஏற்படுத்தியிருப்பதாக அங்கிருக்கும் பி. பி. சி. செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். முன்னர் மிக விரைவில் அமெரிக்க தாக்குதலுக்கு வாய்ப்பு இருந்ததால் நகரெங்கும் அச்சம் பரவி இருப்பதாக அந்த செய்தியாளர் கூறியுள்ளார்.
அதேபோன்று இந்த தாதமம் சிரிய அரச படைக்கு தமது தீர்க்கமான இராணுவ உபகரணங்களை நகர்த்துவதற்கு அவகாசத்தை ஏற்படுத்தியிருப்பதாக அவதானிகள் நம்புகின்றனர். அதேபோன்று அமெரிக்காவின் முடிவை அடுத்து அரசுக்கு எதிராக போராடும் கிளர்ச்சியாளர் கள் மீதான தாக்குதல்களையும் அரசபடை தீவிரப்படுத்தியிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன. மறுபுறத்தில் ஒபாமாவின் முடிவுக்கு சிரிய எதிர்த்தரப்பினர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
"எமது பயமெல்லாம் குறைவான நடவடிக்கையால் அரச படையின் பலம் அதிகரித்து மேலும் தீவிரமான தாக்குதல்களுக்கு வழி வகுக்குமோ என்பதுதான்" என்று எதிர்த்தரப்பு கூட்டணியின் பேச்சாளர் சாபி எச்சரித்தார். சிரியா மீதான அமெரிக்க நடவடிக்கை தாமதப்படுத்தப்பட்டது குறித்து சிரியா தரப்பில் உத்தியோகபூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படாத போது சிரிய துணை பிரதமர் கத்ரி ஜமீல் சி. பி. எஸ். தொலைக்காட்சிக்கு கூறும்போது, "அமெரிக்கா தனது முடிவை ஒத்தி வைத்தாலோ அல்லது அதிலிருந்து பின்வாங்கினாலோ. அனைத்து தரப்பினரதும் கேலிக்கே உள்ளாகும்" என்றார்.
கடந்த சனிக்கிழமை வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், சிரிய தலையீடு குறித்த விவாதத்தை மேற்கொள்வது முக்கியமானது என ஜனாதிபதி ஒபாமா கூறியுள்ளார். "எமது பலம் இராணுவத்தில் மாத்திரம் தங்கியில்லை. மக்களுக்கான மக்களின் அரசு என்ற வகையில் நாம் உதாரணமான அரசாக செயற்பட வேண்டும். அதனால் தான் நான், அமெரிக்க மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கொங்கிரஸ் அவையிடம் அனுமதியை கோரி யிருக்கிறேன்" என்று ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து ஒபாமா, சிரிய தலையீடு குறித்த பிரேரணையை மக்கள் பிரதிநிதிகள் அவையின் சபாநாயகர் மற்றும் செனட் சபையின் தலைவருக்கு அனுப்பி வைத்தார். இந்த பிரேரணையில், சிரிய இராணுவத்தின் இரசாயன ஆயுதப் பயன்பாட்டு திறனை தடுக்க, சீர்குலைக்க அமெரிக்க இராணுவ நடவடிக்கை ஒன்றுக்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. எனினும் இந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் செப்டெம்பர் 9ஆம் திகதியே இடம்பெற வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தப் பிரேரணைக்கு எதிராக வாக்குப் பதிவானால் அடுத்து என்ன நடவடிக்கை என்பது குறித்து தெளிவில்லாமல் உள்ளதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் சட்ட ரீதியில் இராணுவம் நடவடிக்கை மேற்கொள்ள ஜனாதிபதிக்கு கொங்கிரஸ் அவையின் அனுமதி தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 1973 யுத்த சக்தி தொடர்பான சட்டத்தில் ஜனாதிபதிக்கு இராணுவ நடவடிக்கை எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பில் 48 மணிநேரத்திற்குள் கொங்கிரஸ் அவையை அறிவுறுத்தினால் போதும் என கூறப்பட்டுள்ளது. சிரியா மீதான இராணுவ நடவடிக் கைக்கு பிரிட்டன் பாராளுமன்றம் எதிர்ப்பு வெளியிட்ட நிலையிலேயே ஒபாமா தனது முடிவு குறித்து கொங்கிரஸ் அவையின் முடிவை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஐ. நா. ஆதாரங்கள் சாதகமாக இருந்தாலும் கூட சிரியா மீதான இராணுவ தலையீட்டை பிரிட்டன் பாராளுமன்றம் புறக்கணித் துள்ளது.
இந்நிலையில் சிரிய தலையீட்டுக்கு அமெரிக்காவுக்கு ஆதரவளிக்கும் மற்றொரு நாடான பிரான்ஸ¤ம் இன்னும் முடிவு எடுக்கவில்லை. பிரான்ஸ் பாராளுமன்றம் அடுத்த வாரம் கூடவுள்ளது. எனவே இது தொடர்பில் பிரான்ஸ் பாராளுமன்றம் மற்றும் அமெரிக்க கொங்கிரஸ் அவையின் விவாதத்திற்கு பின்னர் பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கொய்ஸ் ஹொல்லன்டே இறுதி முடிவு எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு முன்னால் பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெறவேண்டிய அவசியம் அமெரிக்க ஜனாதிபதி போன்று பிரான்ஸ் ஜனாதிபதிக்கும் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே சிரிய அரசபடை இரசாயன தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரத்தை காட்ட வேண்டும் என அமெரிக்காவுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சவால் விடுத்துள்ளார். சிரியாவின் அரசாங்கம் கிளர்ச்சியாளர் படைகளை எதிர்த்து அதிக வெற்றி பெற்று வருகின்ற ஒரு நேரத்தில் மேற்குலக நாடுகள் சிரியா மீது இராணுவ ரீதியில் தலையிடுவதற்கான துருப்புச் சீட்டு மாதிரியான ஒரு காரியத்தை சிரியாவின் அரசாங்கம் செய்யும் என்று சொல்வது முட்டாள்தனமாக உள்ளது என்று அவர் கூறினார். தங்களது குற்றச்சாட்டை நிரூபிக்கும் விதமான ஆதாரங்கள் அமெரிக்காவிடம் இருந்தால் அதனை அவர்கள் ஐ. நா. பாதுகாப்பு சபையின் முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என்று புடின் தெரிவித்தார்.
"ஆதாரம் இருந்தால் அதனை ஐ. நா. கண்காணிப்பாளர்களிடமும் ஐ. நா. பாதுகாப்பு சபையிடமும் அதைக் காட்ட வேண்டும். அந்த ஆதாரம் இருக்கிறது. ஆனால் அது ரகசியம். அதனை யாரிடமும் காண்பிக்க மாட்டோம் என்று சொன்னால் அது முறையல்ல. ஆதாரம் இருந்தால் காட்ட வேண்டும் காட்டவில்லை என்றால் ஆதாரம் இல்லை என்றுதான் பொருள்" சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றவரான அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா சிரியா மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக அதனால் அந்த நாட்டில் பாதிக்கப்படக் கூடிய மக்களின் கஷ்டங்களை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று புடின் கேட்டுக்கொண்டார்.
சிரியாவின் முக்கிய கூட்டாளி நாடான ரஷ்யாவும் சீனாவும் சிரியாவுக்கு எதிராக ஐ. நா. பாதுகாப்பு சபை தீர்மானங்களை இயற்ற முயன்ற இரண்டு சந்தர்ப்பங்களிலும் அதனை எதிர்த்து வாக்களித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.சிரிய இரசாயனத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய ஐ. நா. நிபுணர் குழு கடந்த சனிக்கிழமை சிரியாவில் இருந்து வெளியேறியது. இந்த ஆய்வு முடிவுகளைப் பெற ஒருவாரம் அளவு எடுத்துக் கொள்ளும் என ஐ. நா. குறிப்பிட்டுள்ளது. ஆனால் ஐ. நா. முடிவு வரை தாம் காத்திருக்கப் போவதில்லை என அமெரிக்கா ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது. சிரியா மீது மேற்கின் எந்த தாக்குதலில் இருந்தும் தமது நாடு பாதுகாத்துக் கொள்ளும் என ஜனாதிபதி பஷர் அல் அஸாத் உறுதியளித்துள்ளார்.